
கவுதம் மேனன் படத்தில் ஜெயம் ரவி!
நீ தானே என் பொன் வசந்தம் படத்திற்கு பின், யோஹன் அத்தியாயம் ஒன்று என்ற படத்தை விஜய்யை வைத்து இயக்கயிருந்தார் கவுதம் மேனன். ஆனால், அவர் கூறிய கதை விஜய்க்கு பிடிக்காததால், அப்படம் கிடப்பில் போடப்பட்டது. அதையடுத்து, சூர்யாவை வைத்து இயக்கவிருந்த, துருவ நட்சத்திரம் படமும், கைவிடப்பட்டுள்ள நிலையில், தற்போது, அப்படத்தை ஜெயம் ரவியை நாயகனாக வைத்து, இயக்கவிருக்கிறார். ஏற்கனவே, இப்படத்திற்கு ஒப்பந்தமான, த்ரிஷா, பார்த்திபன் மற்றும் அருண்விஜய் போன்றோரே இப்படத்தில் நடிக்கின்றனர். அச்சம் என்பது மடமையடா படப்பிடிப்பு முடிந்ததும், அப்படம் துவங்குகிறது.
— சினிமா பொன்னையா
ரவுடி பெண்ணாக நயன்தாரா!
நானும் ரவுடி தான் படத்தையடுத்து, ஜீவாவுடன் நயன்தாரா நடித்து வரும், திருநாள் படத்தில், பெண் ரவுடி போன்று, சில காட்சிகளில் நடித்துள்ளார் நயன்தாரா. வாயில் பிளேடை வைத்தபடி அவர் நடித்துள்ள காட்சி, அப்படத்தின், 'ட்ரெய்லரில்' வெளியானதை அடுத்து, ஏராளமான ரசிகர்கள், 'லைக்' கொடுத்துள்ளனர். இதனால், இனிமேல் சாப்ட்டாக இல்லாமல், அதிரடி கதாபாத்திரங்களுக்கு முதலிடம் கொடுக்க முடிவெடுத்துள்ளார். அக்கறை வந்து முழக்கம் போடுது!
—எலீசா
அட்டகத்தி நந்திதா ஏமாற்றம்!
அட்டகத்தி பட இயக்குனர் ரஞ்சித், தற்போது, ரஜினியின், கபாலி படத்தை இயக்குவதால், அவரிடம், வாய்ப்பு கேட்டார் நந்திதா. முதலில் தருவதாக கூறிய ரஞ்சித், பின், அவ்வேடத்துக்கு ரித்விகாவை ஒப்பந்தம் செய்து விட்டார். இதனால், பெருத்த ஏமாற்றம் அடைந்த நந்திதா, 'இப்போது, சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு தானே நழுவியது; ஆனால், எதிர்காலத்தில் ரஜினி சாருக்கு ஜோடியாக நடிக்க கூட எனக்கு வாய்ப்பு கிடைக்கலாம். அதற்காக கூட, இந்த வாய்ப்பு நழுவிப் போயிருக்கலாம்...' என்று, தன் மனதை தேற்றிக் கொண்டுள்ளார். இட்டபடியே ஒழிய ஆசைப்பட்டு பலன் இல்லை!
—எலீசா
தனுஷுக்கு எதிராக கேபிள், 'டிவி' ஆபரேட்டர்கள்!
சமீபத்தில், டி.டி.எச்., விளம்பர படத்தில் நடித்த தனுஷ், அதில், கேபிள், 'டிவி' ஆபரேட்டர்களை, குறை கூறுவது போன்று, ஒரு வசனம் பேசியிருந்தார். அதற்கு எதிர்ப்பு கிளம்பவே, அவ்வசனத்தை நீக்கி விட்டாலும், 'அப்படியொரு டயலாக்கை பேசியதற்காக தனுஷ் மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையேல், அவர் மீது அவதூறு வழக்கு தொடருவோம்...' என்று, தமிழ்நாடு கேபிள், 'டிவி' சங்கத்தினர், தனுஷுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
சண்டக்கோழி நடிகர், கடைசியாக நடித்த, ஐந்தெழுத்து படம் சில ஏரியா வினியோகஸ்தர்களின் கையை பலமாக கடித்து விட்டது. இதனால், நடிகரிடம் அவர்கள் நஷ்டஈடு கேட்க, 'கொடுக்க முடியாது...' என்று நழுவிக் கொண்டார். விளைவு, அவர் நடிப்பில், அடுத்து வெளியாகும் படங்களுக்கு தங்களது ஏரியாக்களில், 'ரெட் கார்டு' போட தயாராகி வருகின்றனர் வினியோகஸ்தர்கள்.
சூப்பர் நடிகர் படத்தில் நடித்து வரும் ஆப்தே நடிகை, ஒரு சீனில் நடித்து முடித்ததும், நடிகர் நடிகையர், 'ரிலாக்ஸ்' எடுப்பது போன்று, புகையை ஊதி தள்ளுகிறார். கேரவனுக்குள் அமர்ந்து, அவர் ஊதி தள்ளுவதைப் பார்த்து, 'செயின் ஸ்மோக்கர்'களே, 'இந்த நடிகை நம்மையெல்லாம், மிஞ்சி விடுவார் போலிருக்கே...' என்று மிரண்டு நிற்கின்றனர்.
பிரியாணி நடிகர் நடித்து வந்த படங்கள் எல்லாமே, 'ப்ளாப்' ஆகி வருவதால், அவர் நடிக்கும் படங்களுக்கு, 'பைனான்ஸ்' செய்ய தயங்குகின்றனர். மேலும், அவர் வாய்ப்பு கேட்டு செல்லும் இடங்களில் எல்லாம், 'உங்களை வைத்து படம் செய்ய வேண்டுமென்றால், 'மார்க்கெட்'டில் இருக்கும் முன்னணி கதாநாயகிகளிடம், 'கால்ஷீட் வாங்கி வாருங்கள்...' என்கின்றனர். இதனால், மாயா மற்றும் இஞ்சி இடுப்பழகி பட நடிகைகளிடம், 'கால்ஷீட்' கேட்டு துரத்துகிறார் பிரியாணி நடிகர்.
சினி துளிகள்!
* தமிழில், 'மார்க்கெட்' சரிந்து கிடப்பதால், தாய்மொழியான மலையாள படங்களில் நடிக்க வாய்ப்பு தேடுகிறார் ஆர்யா.
* ரஜினியுடன், கபாலியில் ஜோடி சேர்ந்துள்ள ராதிகா ஆப்தே, தமிழில் வேறு எந்த புதிய படத்திலும் நடிக்கவில்லை.
* தூங்காவனம் படத்தையடுத்து, தனுஷ் மற்றும் விஜயசேதுபதி போன்ற நடிகர்களுடன் தலா, ஒரு படத்தில் நடிக்கிறார் த்ரிஷா.
* விஜய் நடிக்கும், குஷி - 2 படப்பிடிப்பு, ஜனவரி மாதம் துவங்குகிறது.
அவ்ளோதான்!

