sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

திண்ணை!

/

திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : டிச 06, 2015

Google News

PUBLISHED ON : டிச 06, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈ.வெ.ராமசாமியின் மேடை பேச்சு பற்றி, கல்கி (ரா.கிருஷ்ணமூர்த்தி) 'ஆனந்த விகடன்' பத்திரிகையில் எழுதியது: சாதாரணமாக, ஈ.வெ.ராமசாமியின் பிரசங்கங்கள், மூன்று மணி நேரத்திற்கு குறைவது கிடையாது. தமிழகத்தில், இவரின் பிரசங்கத்தை மட்டும் தான் என்னால், மூன்று மணி நேரம் உட்கார்ந்து கேட்க முடியுமென்று, தயங்காமல் கூறுவேன். எவ்வளவு தான் நீட்டினாலும், அவருடைய பேச்சில், அலுப்பு தோன்றுவதில்லை. அவர், உலகானுபவம் எனும் கலாசாலையில், முற்றுணர்ந்த பேராசிரியர் என்பதில் சந்தேகமில்லை. எங்கிருந்து தான் அவருக்கு அந்த பழமொழிகளும், உவமானங்களும், கதைகளும் மற்றும் கற்பனைகளும் கிடைக்கின்றனவோ அறியேன்.

ஈ.வெ.ராமசாமியின் பிரசங்கம், பாமர ஜனங்களுக்கே உரியது என்று, ஒரு சிலர் கூறக் கேட்டிருக்கிறேன். அவர்களை வசப்படுத்தும் ஆற்றல், தமிழகத்தில் வேறு எவரையும் விட, அவருக்கு அதிகம் உண்டு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இதிலிருந்து அவருடைய பிரசங்கம் படித்தவர்களுக்கு ரசிக்காது என்று முடிவு செய்தால் அது, பெருந்தவறாகும்.

என்னை போன்ற அரைகுறைப் படிப்புக்காரர்களுக்கு மட்டுமின்றி, பி.ஏ., - எம்.ஏ., பட்டதாரிகள் கூட, அவருடைய பிரசங்கத்தைக் கேட்டு மகிழ்கின்றனர். 'அவருடைய விவாத திறமை அபாரமானது; இவர் மட்டும் வழக்கறிஞர் ஆகியிருந்தால், நாமெல்லாம் திருவோடு எடுக்க வேண்டியது தான்...' என்று, வழக்கறிஞர் ஒருவர் மற்றொரு வழக்கறிஞரிடம் கூறியதை, ஒரு சமயம் நான் கேட்க நேர்ந்தது.

'இளைஞர்களின் நிஜ நாயகன் பகத்சிங்' நூலிலிருந்து: ஓவியங்கள் வரைவது பகத்சிங்கின் பொழுதுபோக்கு. அவர் வரைந்த ஓவியங்களில் ஒன்று, கையில் இந்திய நாட்டு கொடியுடன், ஒரு சிங்கத்தின் மீது பாரத மாதா அமர்ந்திருப்பது போன்றும், எதிரே, ஒற்றைக் காலை முழந்தாள் இட்டு வணங்கிய நிலையில், தலையில்லாத பகத்சிங், தன் தலையை, தாம்பாளத்தில் வைத்து, இரு கைகளாலும், பாரத மாதா முன் நீட்டிக் கொண்டிருப்பது போன்று வரைந்திருப்பார்.

தானே, தன் தலையை அறுத்து, தாம்பாளத்தில் வைத்து, இந்திய தாய்க்கு தருவதாக அப்படம் இருக்கும். அவரது விடுதலை போராட்ட தியாக புரட்சியின் தத்துவம் இதுவே! இப்படம், இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகின், பிற நாடுகளில் இருந்த இந்தியர் வீடுகளில் எல்லாம் அக்காலத்தில் மாட்டப்பட்டிருந்தது.

காந்திஜியுடன் தங்கியிருந்து, 'நான் கண்ட காந்தி' என்ற நூலை எழுதியவர் அமெரிக்க எழுத்தாளர் லூயி பிஷர்; அந்நூலில் அவர் எழுதியது: ஒருமுறை காந்திஜியிடம், 'காங்கிரஸ் கட்சி, பெரிய வர்த்தகர்களின் கைக்குள் இருக்கிறது. உங்களை ஆதரிப்பவரும், பம்பாய் ஆலை முதலாளிகள் தான் என்று கேள்விப்பட்டேனே... இது எவ்வளவு தூரம் உண்மை...' என்று கேட்டேன்.

துரதிருஷ்டவசமாக இவையெல்லாம் உண்மை என்று, ஊர்ஜிதம் செய்த காந்திஜி, 'வேலை செய்ய, காங்கிரசிடம் போதிய பணம் இல்லை. ஒவ்வொரு உறுப்பினரிடமும், ஆண்டுக்கு நாலணா வசூல் செய்து, அதை கொண்டே, வேலை செய்யலாம் என்று ஆரம்பத்தில் எண்ணினோம்; அது பலிக்கவில்லை...' என்றார்.

'காங்., வரவு - செலவு திட்டத்தில், பணக்காரர்கள் ஏற்றுக்கொள்ளும் பங்கு எவ்வளவு?' என்று அடுத்த கேள்வியைக் கேட்டேன். 'முழுவதுமே அவர்கள் தான்...' என்று ஒப்புக் கொண்டவர், 'உதாரணமாக இந்த ஆசிரமத்தையே எடுத்துக் கொள்ளுங்கள்; இங்கே நாங்கள் செலவழிப்பதை விட, இன்னும் குறைவாக செலவழித்து, எளிமையாக வாழலாம். ஆனால், நாங்கள் அப்படிச் செய்யவில்லை. காரணம், அதற்கான பணம், எங்கள் பணக்கார நண்பர்களிடமிருந்தல்லவா வருகிறது...' என்றார்.

'கலைமகள்' மாத இதழின் ஆசிரியராக இருந்து, கி.வா.ஜ., என அழைக்கப்பட்ட, கி.வா.ஜகன்னாதன், ஒரு கட்டுரையில் எழுதியது: என் பள்ளி ஆசிரியர் உ.வே.சாமிநாதய்யர், சிலநாட்கள் காலையில், நடைப் பயிற்சி செய்வதுண்டு. சென்னை திருவேட்டீசுவரன் பேட்டையில் உள்ள சிவன் கோவிலைச் சுற்றி, நான்கு மாட வீதிகள் உண்டு; சாமிநாதய்யர் வீடு, தெற்கு மாட வீதியில்!

அங்கவஸ்திரத்தைப் போர்த்திய படி, நாலு வீதிகளையும் சுற்றி வருவார் சுவாமிநாதய்யர். மேல வீதிக்குத் திரும்பும் முனையில், ஒரு கிழவி, இட்லி விற்றுக் கொண்டிருப்பாள். அவ்விடத்தில் தான் ரிக் ஷாக்காரர்கள் தங்கள் ரிக் ஷாக்களுடன் இருப்பர்.

கையில் சில்லரை காசுகளை எடுத்துச் செல்லும் சுவாமிநாதய்யர், இட்லி கூடைக்காரிக்கு முன் நிற்பார்; அப்போது, அவரைச் சுற்றி ரிக் ஷாக்காரர்கள் மொய்த்துக் கொள்வர். அவர்களுக்கு ஆளுக்கு இரண்டு இட்லி கொடுக்கச் சொல்வார். எல்லாரும் வாங்கி கொண்ட பின், கணக்குப் பார்த்து, பணத்தை, கிழவியிடம் கொடுப்பார். கிழவியும், 'மகராசன் நல்லா இருக்கணும்...' என்று சுவாமிநாதய்யரை வாழ்த்துவாள்.

இதன் மூலம், ஆண்டவனை (கோவிலை) வலம் வந்த பலனுடன், நடைப் பயிற்சியின் மூலம் ஆரோக்கியம், இட்லிக்காரிக்கு வியாபாரம், ரிக் ஷாக்காரர்களுக்கு சிற்றுண்டி என்று பல வகையில் லாபம்!

நடுத்தெரு நாராயணன்






      Dinamalar
      Follow us