
கடைவீதியில் நடந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த நிலத்தரகர், ''என்ன சார்... உங்க வீட்ல குடியிருக்கற மனோகரன், கடன் தொல்லையால சொந்த வீட்ட வித்துட்டான் போலிருக்கே... உங்க வாடகை பாக்கியெல்லாம் கொடுத்துட்டானா...'' என்றார்.
இதைக் கேட்டதும் அதிர்ச்சியாக இருந்தது. என் கண்முன் உழைப்பால் உயர்ந்தவன். பேராசையால் இன்று சரிந்து விட்டானே என்று வேதனையாக இருந்தது.
''வீட்ட வித்துட்டு, எங்க போகப் போறானாம்,'' என்றேன்.
''சென்னையில யாரோ சொந்தக்காரங்க இருக்காங்களாம்... அவங்ககிட்ட சம்பளத்துக்கு வேலைக்கு போகப் போறானாம்,'' என்றார் தரகர்.
என் மனதில், பழைய நினைவுகள் வந்தன...
பள்ளி ஆசிரியரான நான், நகரின் புறநகர் பகுதியில், இடம் வாங்கி, வீடு கட்டி, குடி வந்தேன். அப்பகுதியில், அப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக வீடுகள் வரத் துவங்கியிருந்தன. நகரில் குடியிருந்த போது, மனோகரனின் தந்தை மாரியப்பன் கடையில் தான், பொருட்கள் வாங்குவேன்; புது வீட்டுக்கு வந்ததும், ஒருமுறை மாரியப்பன் கடைக்கு சென்றிருந்த போது, 'மாரியப்பா... பேசாம எங்க வீட்டுப்பக்கம் கடை போட வந்திருங்க...' என்றேன் விளையாட்டாய்!
'ஆமாங்கய்யா... இங்க இருந்த வாடிக்கையாளர்க எல்லாம், உங்க ஏரியா பக்கம் வீடு கட்டி குடிபோயிட்டதால. எனக்கு வியாபாரம் குறைஞ்சு போச்சு. அதனால, நானும் அந்த யோசனையில் தான் இருக்கேன்...' என்றார் மாரியப்பன்.
சில மாதங்கள் கழித்து ஒருநாள், என் வீட்டுக்கு வந்த மாரியப்பன், 'ஐயா... உங்க வீட்டு ஓரத்தில, 10க்கு, 10 அளவுல ஒரு கடை கட்டிக் கொடுத்தா, நான் கடை வெச்சு பிழைச்சுப்பேன்...' என்றார்.
மாரியப்பன் நல்ல உழைப்பாளி; நிச்சயம் கடை, 'பிக்கப்' ஆகும் என தெரியும். மேலும், என் வீட்டுக்கும் பாதுகாப்பு தேவைப்பட்டது; உடனடியாக, கடை கட்டுமானத்தை துவங்கினேன்.
இரு மாதங்களில், 'சேர்மன் ஸ்டோர்' என்ற பெயரில், கடையை துவங்கினார் மாரியப்பன். அப்பகுதியில், வீடுகள் அதிகரிக்க அதிகரிக்க, மாரியப்பனின் வியாபாரமும் அதிகரித்தது. ஆனால், எனக்கு தான் தொல்லை அதிகமானது; கார்னர் வீடு என்பதால், வீட்டு வாசலில் எந்த வாகனத்தையும் நிறுத்த முடியவில்லை. போக்குவரத்து அதிகரித்ததால், குழந்தைகள் விளையாட முடியவில்லை. இதனால், வீட்டை மாரியப்பனுக்கே வாடகைக்கு விட்டு விட்டு, ரெண்டு தெரு தள்ளி, புதிதாக நான் கட்டியிருந்த மற்றொரு வீட்டிற்கு குடி பெயர்ந்தேன்.
பள்ளிப் படிப்பை முடித்ததும், கடை பொறுப்பை ஏற்ற மனோகரன், காலத்துக்கேற்ப நவீனப்படுத்தினான்; வியாபாரமும் முன்பை விட சூடு பிடித்தது.
சில தெருக்கள் தள்ளி, சொந்தமாக வீடும் வாங்கினான்; ஆனாலும், ராசியான வீடு என்று கூறி, என் வீட்டை காலி செய்யவில்லை. கடைக்கும், வீட்டுக்குமாக மாதம், 10 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுத்து வந்தான்.
யார் கண் பட்டதோ, மனோகரனுக்கு சரிவு துவங்கியது. கடந்த ஒரு வருஷமா கடைக்கு செல்லும் போதெல்லாம், பங்கு சந்தை பற்றியே பேசினான். லட்சக்கணக்கில், அதில் முதலீடு செய்தான். அதில், எளிதாக லாபம் கிடைக்கவே, மேலும் அதிலேயே முதலீடு செய்தான். இதனால், கடை மீதான அக்கறை குறைந்து; வியாபாரமும் சரிந்தது.
இறுதியில், கம்ப்யூட்டர் திரையிலேயே பல லட்சங்கள் காணாமல் போக, பெரும் நஷ்டத்தை சந்தித்தான். பார்க்கும் எல்லாரிடமும், கடன் கேட்க துவங்கினான். இறுதியில், என்னிடமும் கடன் கேட்டு வந்தான். என் மகன் மற்றும் மகள் நல்ல வேலையில் இருப்பதும், என்னிடம் பணத்துக்கு பஞ்சமில்லை என்பதும் அவனுக்கு தெரியும். நானும், ஏதோ வியாபாரத்தில் பிரச்னை என்று எண்ணி, இரண்டு லட்சம் ரூபாயை தூக்கி கொடுத்தேன்;
அப்புறம் தான் விஷயம் தெரிந்தது. மீண்டும், இரண்டு நாட்களில் திருப்பி தருவதாக கூறி, பணம் கேட்டு வந்தான். 'இதையும் பங்குச் சந்தையில் கரைத்து விடுவானோ...' என்று பயந்து, 'பணம் இல்லை...' என, நிர்தாட்சண்யமாக மறுத்து விட்டேன்.
ஆனாலும் இரக்கம் எட்டிப் பார்த்தது.'என்னிடம் பணம் இல்ல... ஆனா, நீ எனக்கு, இந்த மாசத்துல இருந்து வாடகை தர வேணாம்; அதை, தொழில்ல போட்டு முன்னேறப் பாரு... எப்ப உன்னால வாடகை குடுக்க முடியுமோ அப்ப குடு...' என்றேன். ஆனால், பங்குச்சந்தை போதையில் இருப்பவன் காதுகளில், இதெல்லாம் ஏறவா போகிறது.
இறுதியில், கந்து வட்டி மற்றும் மீட்டர் வட்டி என கடன் வாங்கி, இப்போது அனைத்தும் பூதாகரமாகி, வீட்டை விற்று, கடன்களை அடைத்து வருகிறான். எனக்கு, 10 மாதம் வாடகையும், கடன் வாங்கிய, இரண்டு லட்சம் ரூபாயும் சேர்ந்து மூன்று லட்சம் ரூபாய் தர வேண்டும். எப்போது தருவான் என்பது தெரியவில்லை.
இந்த சிந்தனையுடன் நடந்து வந்த போது, கந்து வட்டி அருணாசலம் எதிரே வந்தான்.
''என்னப்பா... இந்தப்பக்கம்,'' என்றேன்.
''மனோகரனுக்கு பணம் கொடுத்திருந்தேன். ரொம்ப நாளாச்சு... பிரச்னை செய்தேன்; இப்ப பணம் தந்தான். வாங்கிட்டு போறேன்,'' என்றான்.
வீட்டை விற்று, செட்டில்மென்டை துவங்கி விட்டான் என்று தெரிந்தது.
'எல்லாருக்கும் பணத்த செட்டில் செய்றான்... இன்னும் என் பணத்த தரலயே...' என்று நினைத்ததும், கோபம் வந்தது.
நேராக கடைக்கு போய், அவனை நாலு வார்த்தை நறுக்குன்னு கேட்கணும் போல் தோன்றியது. அப்போது, மொபைல் போன் சிணுங்கியது. உரக்கடை தனசேகரன் பேசினான்...
''சார்... உங்க பழைய வீட்டு தோட்டத்து வெண்டிச்செடிக்கு மருந்து வேணும்ன்னு, காலையில மருந்து வாங்கிட்டு போனான் மனோகரன். அதுக்கு, 'மிக்சிங்' சொல்ல மறந்துட்டேன். அவன் போன் நம்பர் என்கிட்ட இல்ல; உங்க கிட்ட இருக்கா...'' என்றான்.
தூக்கி வாரிப் போட்டது. 'தோட்டத்தில வெண்டிச்செடியே இல்ல; அப்புறம் எதற்கு மருந்து...' லேசாக சந்தேகம் எழுந்தது.
''சரி... நான் பாத்துக்கறேன். 10க்கு ஒண்ணு தானே மிக்சிங்...'' என்றேன்.
''ஆமாம் சார்... மனோகரன் கிட்ட சொல்லிடுங்க,'' என்று கூறி, போனை துண்டிக்கவும், என் மனைவியிடம் இருந்து மொபைல் அழைப்பு வர எடுத்து, ''என்ன...'' என்றேன்.
''மனோகரன் வந்துருக்கான்; உங்கள பாத்து, பணம் கொடுக்கணுமாம்,'' என்றாள்.
'பராவயில்ல... மனோகரன் நாணயஸ்தன் தான்...' என்று நினைத்த போது, தனசேகரன் கூறியது நினைவுக்கு வந்தது.
''நான், அவன் வீட்டுக்கிட்ட தான் நிற்கிறேன்; இங்கேயே வர சொல்லிடு,'' என்றேன்.
மனோகரனின் வீட்டிற்குள் நுழைந்த போது, அவனின் மனைவி மற்றும் குழந்தைகள் இருந்தனர். முகம் வாடி இருந்த அவன் மனைவி, ''உங்க வீட்டுக்குத் தான் சார் போயிருக்கார்,'' என்றாள்.
''தெரியும்மா அவன நான் இங்க வர சொல்லிருக்கேன்,'' என்றேன்.
சிறிது நேரத்தில் வந்த மனோகரன்,''உங்க வீட்டுக்குத் தான் சார் பணத்தோட போயிருந்தேன்,'' என்றான்.
''சரி... வீட்ட வித்துட்டு, கடையையும் காலி செய்துட்டு, அடுத்து என்ன செய்யப் போற...'' என்றேன்.
தன் மனைவியின் முகத்தை பார்த்தான்; அவள் கண்களில், கண்ணீர் ததும்பியிருந்தது.
''இவளோட அண்ணன், சென்னையில கடை வெச்சுருக்கார். அங்க போயி சம்பளத்துக்கு வேலை பாக்கலாம்ன்னு முடிவு செய்துருக்கேன்,'' என்றான்.
அவன் மனைவியின் குடும்பத்தை பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவளுக்கு, அண்ணனோ, உறவுகளோ கிடையாது. மனோகரன் பொய் சொல்கிறான் என்பது உறுதியானது.
''இந்தாங்க சார்...'' என்று, பணத்தை என் முன் வைத்தான் மனோகரன்.
''பணம் இருக்கட்டும்... இப்ப நம்ம கடைய, வேற யாருக்காச்சும் கொடுத்தா வியாபாரம் நடக்குமா...'' என்றேன்.
''சூப்பரா நடக்கும் சார்... நமக்கு தான் குடுப்பினை இல்ல. முதலீடு எல்லாம் கரைஞ்சுடுச்சு. நல்லா தொழில் தெரிஞ்சவங்கள வெச்சா, செமய்யா ஓடும்,'' என்றான்.
''எவ்வளவு முதல் தேவைப்படும்...''
''வாடகை, முன்பணம் போக, சரக்குக்கு மட்டும் மூன்று லட்ச ரூபாய் இருந்தா போதும். அதை வெச்சு, ஆறு லட்சம் ரூபாய்க்கு சரக்கு வாங்கி போடலாம். சராசரியா ஒரு நாளைக்கு, 5,000 ரூபாய்க்கு வியாபாரம் நடக்கும்; அப்புறம், திருப்பியும், 'பிக்கப்' ஆகிடும். ஒரு நாளைக்கு, 30 ஆயிரம் ரூபாய் வரை ஓட்டலாம்,'' என்றவன், ''யாருக்கு சார் குடுக்கப் போறீங்க,'' என்றான்.
''ஒருத்தர் இருக்காரு... அதான்...'' என்று கூறி, ''இதுல எவ்வளவு பணம் இருக்கு?'' என்றேன்.
''மூன்று லட்ச ரூபா இருக்கு சார்...''
''இங்க வாம்மா...'' என்று மனோகரனின் மனைவியை அழைத்து, பணத்தை அவளிடம் கொடுத்தேன்; அவள் புரியாமல் பார்த்தாள்.
''மனோகரன் தொழில் மேலயும், நேர்மையிலயும் எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனாலும், அவன் செஞ்ச காரியம் தப்பு. அதனால, இந்த பணத்தை உன்கிட்ட குடுக்கறேன்; இதை வெச்சு, திரும்ப கடைய நடத்துங்க. ஆனா, இதை நான் சும்மா குடுக்கல; பதிலுக்கு நீங்க எனக்கு
ஒண்ணு கொடுக்கணும்....''
கணவனும், மனைவியும் குழப்பமாக பார்த்தனர்.
''எங்க கிட்ட என்னங்கய்யா இருக்கு... எல்லாம் போயிடுச்சே...'' என்றாள் மனோகரனின் மனைவி கண்ணீர் மல்க!
''இருக்கறத தானே கேட்கப் போறேன்... உன் புருஷன், வெண்டிச்செடிக்கு மருந்து வாங்கி வெச்சுருக்கான்ல்ல... அதை எடுத்துக் கொடு,'' என்றேன்.
அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை வெடிக்க, கணவனும், மனைவியும் என் காலில் விழுந்தனர்.
''மன்னிச்சுடுங்க சார்... வேற வழி தெரியல; அதான்,'' என்றான் மனோகரன்.
''உலகத்துல வாழ, ஆயிரம் வழி இருக்கு. பிரச்னை வந்தவங்கள் எல்லாம் சாகுறதுன்னு ஆரம்பிச்சா, சுடுகாட்ல இடம் இருக்காது. சரி விடு... பிள்ளைங்கள கூப்பிடு,'' என்றேன்.
பிள்ளைகள் வந்ததும், ''மனோகரா... இவங்க தலையில அடிச்சு, இனிமே பங்குச்சந்தை பக்கம் போகமாட்டேன்னு சத்தியம் செய்,'' என்றேன்.
கண்களில் கண்ணீருடன், சத்தியம் செய்தான் மனோகரன்.
மனதில் நிம்மதியுடன், கையில் பூச்சி மருந்தை எடுத்துக் கொண்டு வெளியேறினேன்.
எதிரே உள்ள பள்ளி சுவரில், காலத்தாற் செய்த உதவி ஞாலத்தின் மானப்பெரிது... என்ற சொற்றொடர், பளீரென்று தெரிந்தது.
கே.ஸ்ரீவித்யா
வயது: 45.
பணி: புள்ளி இயல் துறை, வட்டார புள்ளியியல் ஆய்வாளர்.
கல்வி: முதுநிலை அரசியல் அறிவியல். புத்தகம் படிப்பதும், எழுதுவதும் இவரது பொழுதுபோக்கு. போட்டியில் பங்கேற்பது, இதுவே முதல்முறை. முதல் முறையாக ஆறுதல் பரிசு பெற்றுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

