PUBLISHED ON : ஜூன் 01, 2014

ஜூன் 1 - வைகாசி உற்சவம் ஆரம்பம்!
குழந்தைகள், தீராத நோயால் அவதிப்படுகின்றனர் என்றால், திருநெல்வேலியில் உள்ள பிட்டாபுரத்தம்மனை வணங்கி வரலாம். பேச்சு வழக்கில், 'புட்டார்த்தியம்மன்' என்று, இவளை அழைக்கின்றனர். இந்தக் கோவிலின் வைகாசி உற்சவம் இன்று துவங்கி, பத்து நாட்கள் நடை பெறுகின்றது.
ஒரு ஊரின் வடக்கு எல்லையில், வடக்குவாசல் செல்வி என்ற பெயரில், துர்க்கையை பிரதிஷ்டை செய்வர். இவளே அந்நகரின் காவல் தெய்வம். இவ்வாறு திருநெல்வேலி நகருக்கு பாதுகாப்பாக இருப்பவளே பிட்டாபுரத்தாள். ஆறடி உயரம், நான்கடி அகலமுள்ள அம்மன் விக்ரகம், பார்ப்பதற்கு கம்பீரமாக இருக்கிறது. பீடத்தின் மேல், வலது காலை தூக்கி வைத்து, இடது காலை மடக்கி, வலது கையில் சூலத்துடன் அருள் பாலிக்கிறாள். இவளுடன், மாடன், மாடத்தி மற்றும் பிரம்மரக்ஷி, பேச்சி போன்ற, 14 கன்னியர்கள் வீற்றிருக்கின்றனர். இங்குள்ள கொடி மர மண்டபத்தில், சிதைவுற்ற பிள்ளையார் சிலை உள்ளது. சிதைவுற்றிருந்தாலும், இவருக்கு சக்தி அதிகம்.
இவர் முன்பு அமர்ந்த படிதான், பூஜாரிகள் நோயுற்ற குழந்தைகளுக்கு, அம்பாளின் அபிஷேக நீரைத் தெளிக்கின்றனர்.
பிட்டாபுரத்து அம்மனுக்கு, 'பிட்டு' நைவேத்தியம் செய்யப்படுகிறது. இந்த கோவில் நெல்லையப்பர் கோவிலோடு தொடர்புடையதாக உள்ளது. இக்கோவிலில் திருவிழா முடிந்த பின் தான், நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா ஆரம்பமாகும். செவ்வாய், வெள்ளி கிழமைகளில் கோவிலில் கூட்டம் அதிகம் இருக்கும். பிள்ளைகளுக்கு பயத்தால் வரக்கூடிய, 64 வகையான நோய்களுக்கு, வேர்கட்டி மை இடுவர். குழந்தை பாக்கியம் வேண்டியும், திருமணத்தடை நீங்கவும், நோய்கள் தீரவும் பெண்கள் அம்பாள் சன்னிதியை சுற்றி வருகின்றனர். பிறந்த குழந்தைகளை கூட, இத்தலத்திற்கு கொண்டு வரலாம். எந்த தீட்டும் கிடையாது.
இன்று துவங்கும் வைகாசி திருவிழா, தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கும். கடைசி நாள் தேரோட்டம் நடைபெறும். ஆடி, தை மாதங்களின் கடைசி செவ்வாய், அம்மனுக்கு சிறப்பு வழிபாடும், கார்த்திகை தீபம், தை மாத பத்ர தீப நாட்களில், விசேஷ பூஜையும் உண்டு. காலை, 6:00 மணி முதல், 12:00 மணி வரையிலும், மாலை, 5:00 மணி முதல் இரவு, 9:00 மணிவரையிலும், குழந்தைகளை அழைத்து வரலாம். மாலை பூஜைக்கு, கூட்டம் அதிகமிருக்கும்.
திருநெல்வேலி டவுன் லாலாசத்திர முக்கின் வடக்கே உள்ள தெருவில், இக்கோவில் உள்ளது. விழா காலத்தில் வந்து, அம்பாளின் புனிதநீர் பெற்றால், குழந்தைகள் ஆரோக்கியமாகத் திகழ்வர்.
தி.செல்லப்பா
