தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஜூன் 01, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 01, 2014


Follow on Google
அ நிறம் | அளவு

அளவுக்கு மீறினால்....

என் தோழிக்கு திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளனர். படித்தவள், பண்பானவள். ஆனால், அவளிடம் இருக்கும் ஒரு கெட்ட பழக்கம், தெருவில் போகிறவர், வருகிறவர்களை, தன் அடுத்த வீட்டு தோழியுடன் சேர்ந்து, 'கமென்ட்' அடிப்பது. இவளது இந்த பழக்கம், ஒரு பெரிய விபரீத எண்ணத்தை ஏற்படுத்தி விட்டது.

இவள் குடியிருக்கும் தெரு வழியாக ஒரு இளைஞன், அடிக்கடி பெண்களுடன் செல்வான். இதைப் பார்த்த என் தோழியும், அடுத்த வீட்டுக்காரியும் ஆர்வ கோளாறால், தினமும் அந்த இளைஞனை நோட்டமிட ஆரம்பித்தனர்.

ஒரு நாள் என் தோழி, தன் குழந்தைகளுடன் வெளியே சென்றிருக்கிறாள். வழியில் அந்த இளைஞன், தன் நண்பர்களுடன் வந்துள்ளான். என் தோழியைப் பார்த்த அவன், தன் நண்பனிடம் தோழியைச் சுட்டிக் காட்டி, சத்தமாக, 'வீட்டுல, கவனிப்பு சரியில்லை போலிருக்குதுடா... என்னை சைட் அடிக்குது...' என்றிருக்கிறான். என் தோழி கூனி குறுகி, அவமானத்துடன் வீடு திரும்பியுள்ளாள்.

வேடிக்கை விபரீதமாவது இது போன்ற அளவுக்கு மீறிய செயல்களால் தான். எதுவும் அளவோடு இருந்தால் தொல்லை இல்லை.

— என்.சிவகாமசுந்தரி, திண்டுக்கல்.

முதுமைக்கு ஆதரவு தாருங்கள்!

எங்கள் தெருவில், ஒரு மூதாட்டி இருக்கிறார். அவரது இரண்டு மகன்களும், வெளிநாட்டில் செட்டிலாகி விட்டனர். மூன்று ஆண்டுகளுக்கு, ஒரு முறை, வந்து பார்த்து விட்டு, உடனே கிளம்பிப் போய் விடுவர். அவர் பிள்ளைப் பாசத்திற்கு ஏங்குவதையும், தனிமையில், துயரத்துடன் பொழுதைக் கழிப்பதையும், கவனித்த நாங்கள், ஒரு முடிவெடுத்தோம். அதன்படி, தெருவிலுள்ள, பெண்கள் அனைவரும் அடிக்கடி, மாலைப் பொழுதுகளில், அவரது வீட்டிற்குப் போய் உட்கார்ந்து பேசுவதும், அவருக்கு பிடித்ததை சமைத்துக் கொடுத்து விட்டு வருவதுமாய் இருக்கத் துவங்கினோம். இது, அவரது மனதிற்கு புதுத் தெம்பையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கத் துவங்கியது.

தவிர, உடம்புக்கு முடியாத வேளையில், மூதாட்டியை, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது என, சின்னச் சின்ன உதவிகளை செய்ததால், எங்கள் மனசு சந்தோஷம் அடைந்ததோடு, அவரும் உற்சாகமாய் வாழ்ந்து வருகிறார்.

பிள்ளைகளால் கிடைக்காத உதவிகளை, அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் மூலம், முதியவர்கள் அடையும் போது, அவர்களது அந்திமக் காலம் ஆனந்தமாய் கழியும்.

வாசகர்களே... நீங்களும், உங்கள் பகுதியில் உள்ள முதியோருக்கு, சேவை செய்ய முன் வரலாமே!

— ஜக்கி, கோவை.

இந்த டீலிங் கூட நல்லா இருக்கே....

என் தங்கை கணவர், சாலையோரத்தில் கையேந்தி உணவகம் நடத்தி வருகிறார். இரவு, வாடிக்கையாளர்கள் அதிகமாக வருவர் என்பதால், சமீப காலமாக, அவருக்கு உதவியாக நானும் செல்வேன். சுவையான உணவும், விரைவான சர்வீசும் இருப்பதால், ரெகுலராக பலர் வருகை தருவர்.

பொதுவாக யாருக்குமே என் மைத்துனர், கடன் தருவதில்லை. அப்படியே கடன் கொடுத்தாலும், திருப்பி கொடுப்பவர்களை அடையாளம் வைத்து கொடுப்பார். மது அருந்தி வருபவர்களுக்கு, உணவு பரிமாறுவதே கிடையாது. 'வேண்டுமானால், பார்சல் வாங்கிட்டு போங்க...' என்பார். 'இது ஏன்?' என்று கேட்டபோது, அதற்கு அவர், 'குடித்துவிட்டு வருபவர்கள் அருகில் சாப்பிடுபவர்களை நிம்மதியாக சாப்பிட விடுவதில்லை. அதோடு, 'உப்பு கம்மி, காரம் கம்மி, ஆம்லேட் வேணாம், ஆப்பாயில் போடு...' என்ற, இம்சை வேறு. இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு கவனித்தால் கூட, கடைசியில் பில் கொடுக்க தகராறு செய்வர். அவர்களை சாப்பிட வைத்தால், மற்றவர்களை கவனிக்க முடியாமல் போய் விடுகிறது...

'அதனால் தான், 'காசு இருந்தால் பார்சல் வாங்கிட்டுப் போ, இல்லையென்றால் வேறு கடையைப் பார்...' என்று கூறி, முற்றுப்புள்ளி வைத்து விடுவேன். போதை ஆசாமிகளை ஆரம்பத்திலேயே ஒதுக்கி விட்டால், தப்பித்துக் கொள்ளலாம். இல்லையேல், அவர்கள் துணைக்கு இன்னும் சில போதை பேர்வழிகளை அழைத்து வந்து, 'மாப்ளே, நம்ம கடை தாண்டா... என்ன வேணுமோ சாப்பிட்டுக்கோ...' என்று, உரிமை கொண்டாடி, நம்மை அவர்களுக்கு அடிமைப்படுத்தி விடுவர்...' என்றார்.

அவரது அணுகுமுறையும், அனுபவ அறிவும், என்னை வியக்க வைத்தது. மனதுக்குள் ஒரு சபாஷ் போட்டேன்.

- பி.சதீஷ்குமார், சிக்கந்தர் சாவடி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us