தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பாதாளத்தில் அம்மன்!

பாதாளத்தில் அம்மன்!

பாதாளத்தில் அம்மன்!


PUBLISHED ON : செப் 12, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 12, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு ஆண்டில், நுாறு நாள் பூமிக்கு மேலும், மற்ற நாட்களில், பாதாளத்துக்குள் புதைத்தும் வைக்கப்படும், முச்சந்தி பாதாள காளியை, கும்பகோணத்தில் தரிசிக்கலாம்.

மூன்று தெருக்கள் சந்திக்கும் இடத்தை முச்சந்தி என்பர். ஒருவரிடம் பணம் வாங்கி, அதைத் திருப்பித் தராமல் ஏமாற்றி விட்டால், 'என்னை முச்சந்தியில் நிறுத்தி விட்டானே...' என்று கண்ணீருடன் சொல்லும் வழக்கம் இன்றும் இருக்கிறது.

முச்சந்தியில் இடமிருந்தால், அதில், வீடு கட்ட யாரும் விரும்புவதில்லை. அதில் குடியிருந்தால், கஷ்டம் வரும் என, நம்புகின்றனர்.

திருஷ்டி கழிக்கும் பழக்கமுள்ளவர்கள் மிளகாய் வத்தல், பருத்திக்கொட்டை முதலானவற்றை ஒரு துணியில் சுற்றி, முச்சந்தியில் வீசுவர். மொத்தத்தில், முச்சந்தி என்பது, வேண்டாத ஒரு இடமாக இருக்கிறது.

ஆனால், அன்னை பார்வதி, காளியின் அம்சமாகி, முச்சந்தியை, தன் இருப்பிடமாக தேர்ந்தெடுத்தாள். இதற்கான காரணம் தெரியுமா?

'தஞ்சாவூரில் தடுக்கி விழுந்தால் கோவில்' என்பது பழமொழி. அதிலும், இந்த மாவட்டத்திலுள்ள கும்பகோணத்திலும், சுற்றுப் பகுதிகளிலும் உள்ள கோவில்களின் எண்ணிக்கை மிக அதிகம். அவை எல்லாமே கலைநயம் மிக்கவை.

இங்குள்ள கோவில்களில் தேர் வடிவில் சன்னிதி அமைத்திருப்பர். அந்த தேரை குதிரைகள், யானைகள் இழுப்பது போல வடிவமைக்கப்பட்டிருக்கும். இதைப் பார்க்க பார்க்க ஆச்சரியம். அதாவது, பக்தர்களின் கண், இந்த சன்னிதிகளின் மேல் படுகிறது.

கல்லடி பட்டாலும் பரவாயில்லை, கண்ணடிபடக் கூடாது என்பது, நம்மவர் நம்பிக்கை. பக்தனே என்றாலும், அவன் கூட பகவானுக்கு திருஷ்டி போட்டு விடுவானாம். போதாக்குறைக்கு, இவ்வூரிலுள்ள மகாமக குளத்தின் அழகு, யாரைத் தான் கவராது? அது மட்டுமல்ல, அதைப் பார்த்தாலே புண்ணியம் என்பதால், ஏராளமான பக்தர்கள் அங்கு குவிந்தனர்.

இதையறிந்த உள்ளுர் பக்தர்கள் சிலர், தங்கள் ஊருக்கு திருஷ்டி பட்டு விடுமோ என, பயந்தனர். திருஷ்டி தோஷம் நீங்க, ஊரின் முச்சந்தி இடத்தை தேர்ந்தெடுத்தனர். அந்த இடத்தில், தீபம் ஒன்றை ஏற்றி, அதை அம்பாளாகக் கருதி வழிபட்டனர்.

ஒருமுறை, அந்த இடத்தில் மேடாக ஒரு பகுதி வெளிப்பட்டது. மக்கள் அதைத் தோண்டி பார்த்த போது, உள்ளே காளி சிலை இருந்தது. அதை, அதே இடத்தில் பிரதிஷ்டை செய்தனர். அம்பாள் வெளிப்பட்ட மார்கழி முதல் நாளில் இருந்து, பங்குனி, 10ம் தேதி வரை, அந்த இடத்தில் வைத்து வழிபட்டனர். அவளது உக்கிரம் அதிகமாக இருக்கவே, மீண்டும் பூமியில் புதைத்தனர்.

இந்த வழக்கப்படி, தற்போதும் மார்கழி, 1 முதல், பங்குனி, 10 வரையான, 100 நாட்கள், அம்பாள் வெளியே இருப்பாள். அதன்பின், அம்பாளை பூமிக்குள் புதைத்து, ஒரு தீபத்தை ஏற்றி வைத்து விடுவர். முச்சந்தியில் வீடு கட்டியவர்கள் இப்போதும் வாசலில் தீபம் ஏற்றும் வழக்கத்தை கொண்டுள்ளது, இதனால் தான்.

திருஷ்டி கோளாறு உள்ளவர்கள், முச்சந்தியில் இடம் உள்ளவர்கள், தங்களது பிரச்னை தீர, பாதாள காளியை வணங்கி வரலாம்.

கும்பகோணம் நாகேஸ்வரன் தெற்கு வீதியில், இந்தக் கோவில் உள்ளது.

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us