PUBLISHED ON : ஜன 09, 2022

தெய்வ சித்தத்தையும் அதை அனுபவித்த மகானின் மனதையும் விவரிக்கும் இவ்வரலாறு, 19ம் நுாற்றாண்டின் பிற்பகுதியில் நடந்தது.
மதுரையில் வாழ்ந்த மகான் ஒருவர், அவ்வப்போது ஸ்ரீரங்கம் சென்று, பகவானைத் தரிசித்துத் திரும்புவார். ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியன்று, ஸ்ரீரங்கம் சென்று தரிசனம் முடித்து, மறுநாள், துவாதசியன்று அன்னதானமும் செய்வார்.
ஒருமுறை, வைகுண்ட ஏகாதசிக்காக அடியார்கள் தந்த பொருட்களோடு, ஸ்ரீரங்கம் செல்ல ரயில் நிலையம் வந்து சேர்ந்தார். மதுரை ரயில் நிலையத்தில், அன்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. மகானும், அவருடன் வந்தவர்களும் மிகுந்த சிரமப்பட்டு ஒரு வழியாக, மூன்றாம் வகுப்புப் பெட்டியில் ஏறி அமர்ந்தனர்.
வண்டி புறப்பட்டது. மகான் தம் மடியைத் தொட்டுப் பார்த்தார்; அதில் வைத்திருந்த, 200 ரூபாயை காணவில்லை. கூட்டத்தில் யாரோ களவாடி விட்டனர்.
'ஸ்ரீரங்கத்தில் நடக்க வேண்டிய அன்னதானம், மதுரையிலேயே நடந்து விட்டது...' என்று கூறி, பலமாக சிரித்தார்.
ஸ்ரீரங்கத்தில் செய்ய வேண்டிய அன்னதானத்தை எப்படிச் செய்வது என்ற எண்ணமே, மகானுக்கு இல்லை. நடப்பதெல்லாம் தெய்வ சித்தம் என்பதில் நம்பிக்கை கொண்டவர்கள், அவர்கள்.
மகானுடன் வந்த அவரது அண்ணன் மகன், 'ஸ்ரீரங்கத்திற்கு போய், அன்னதானம் எப்படி செய்வது? பணத்திற்கு எங்கே போவது...' என்று புலம்பியபடி வந்தார்.
ஆனால், நடந்ததோ வேறு. பணம் திருடு போன தகவலே தெரியாத மதுரை அடியார்கள் பலர், அன்றே தந்தி மணியார்டர் மூலம் பணம் அனுப்பி இருந்தனர். பிறகென்ன, வழக்கத்தை விட, அந்த ஆண்டு, சிறப்பான முறையில் அன்னதானம் நடந்தது.
மதுரை திரும்பியதும், 'இந்த முறை, திருவரங்கனுக்கு இரண்டு இடங்களிலும் சமாராதனை நடந்தது. இரண்டு இடங்களிலும் கொண்டாட்டம்...' என்று கூறி மகிழ்ந்தார், மகான்.
களவாடியவன் மீது கோபமோ, உதவியவர்களால் மகிழ்ச்சியோ இல்லாமல், இருவரையும் சமநிலையில் வைத்து, ஸ்ரீரங்கநாதனின் தீர்மானத்தை நிறைவேற்றியவர்கள் எனக் கருதினார்.
அந்த மகான், ஸ்ரீ நடன கோபால நாயகி சுவாமிகள். பகவானின் அருளைப் பரிபூரணமாகப் பெற்ற இவர் எழுதிய பாடல்கள், கர்நாடக இசை மேடைகளில் இன்றும் பாடப்படுகின்றன.
நாம் நம் கடமையை
சரி வரச் செய்தால், நிறைவேற்றும் பொறுப்பை தெய்வம் பார்த்துக் கொள்ளும். எத்தனை இடையூறுகள் வந்தாலும், அவற்றைத் தாண்டி உதவி புரிந்து நம்மைக் காக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
பி. என். பரசுராமன்
ஆன்மீக தகவல்கள்!
முதல் நாள் எடுத்த தீர்த்தத்தால் சுவாமிக்கு அபிஷேகம், நைவேத்யம் செய்யக் கூடாது.
