PUBLISHED ON : ஜூலை 08, 2018

புகழ் - இதை விரும்பாதவர்களே இல்லை. அதேசமயம், நம் காது பட அடுத்தவர்களை புகழ்ந்து விட்டால், அந்த புகழ்ச்சி, நமக்கு பிடிக்காமல் போய் விடுகிறது. இப்படிப்பட்ட நிகழ்ச்சி ஒன்று தேவலோகத்தில் நடந்தது. விளைவு?
இந்திர சபை. இந்திரன் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க, தேவர்கள் பலரும் அவரவர் ஆசனங்களில் அமர்ந்திருந்தனர். அப்போது, இந்திரன், பூவுலகில் உள்ள அரசர்களில் ஒருவரை புகழ்ந்து, 'அந்த மன்னனை போல, மக்களிடம் தயாள குணமும், இரக்கமும் கொண்ட அரசனை காண முடியாது...' என்றார்.
தேவேந்திரன், பூவுலக மன்னர்களில் ஒருவரை புகழ்வது பிடிக்காத தேவர்களில் ஒருவர், 'என்னால் இதை ஒப்புக்கொள்ள முடியாது. நானே போய் அந்த மன்னனை பரீட்சை செய்து பார்க்கிறேன்...' என்று சபையை விட்டு வெளியேறினார்.
வெளியேறியவர், இந்திரனால் புகழப்பட்ட மன்னரிடம் போய், 'மன்னா... தினந்தோறும் நீ எனக்கு, ஓர் ஆளை பலியாக கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், உன் நகரத்தை அழித்து விடுவேன்...' என்றார்.
'தேவலோகத்தில் இருந்து வந்திருக்கும் நீங்கள் சொன்னபடி என்ன ஆனாலும் சரி, என் குடிமக்களில் ஒருவரை கூட பலி கொடுக்க நான் சம்மதிக்க மாட்டேன்...' என்று சொல்லி, மறுத்து விட்டார், மன்னர்.
தேவலோகவாசி விடவில்லை; தன் சக்தியால், ஒரு பெரும் பாறை, ஆகாயத்திலிருந்து தொங்குவதை போல, மாயத்தோற்றம் ஒன்றை உருவாக்கினார். அதைப் பார்த்த அந்நாட்டு மக்கள், 'இது எந்த நேரம் கீழே விழுந்து அழிவை உண்டாக்குமோ?' என்று பயந்தனர்.
அனைவரும் மன்னரிடம் போய், 'மன்னா... யாராவது ஒருவரை பலி கொடுத்தால் தான், இந்த பாறை கீழே விழுந்து நகரத்தை அழிக்காமல் இருக்கும். அதற்கு ஏற்பாடு செய்து, எங்களை காப்பாற்றுங்கள்...' என, வேண்டினர்.
'ஒருக்காலும் முடியாது. என் குடிமக்களில் ஒருவரைக் கூட, பலி கொடுக்க நான் சம்மதிக்க மாட்டேன்...' என்று அழுத்தமாக மறுத்து விட்டார், அரசர்.
அதே சமயம், மக்களும் சும்மா இருக்க தயாராக இல்லை. ஆளாளுக்கு கொஞ்சம் காசு போட்டு, ஒரு தங்க விக்கிரகம் செய்தனர். 'யார் தன்னை பலி கொடுக்கத் தயாராக இருக்கிறாரோ, அவர் குடும்பத்திற்கு இந்த தங்க விக்கிரகமும், கூடவே நிறைய செல்வமும் அளிக்கப்படும்...' என்று அறிவிப்பை வெளியிட்டனர்.
காசுக்காகவும், தங்க விக்கிரகத்திற்காகவும் காலனிடம் போக, யாரும் தயாராக இல்லை. ஆனால், ஏழை வேதியர் ஒருவர், வறுமையின் விரட்டலால் தன் மகனை பலி கொடுக்கத் துணிந்தார். சிறுவனை பலி கொடுக்கும் நேரம் நெருங்கியது.
சிறுவன் சிரிக்கத் துவங்கினான். தடுக்க இயலாத நிலையில், அதைக் கண்ட அரசர், 'ஏன் சிரிக்கிறாய்?' என கேட்டார்.
'அரசே! நான் ஒருவன் இன்று பலியாவதால், இந்த நகரமே காப்பாற்றப்படும். அதை எண்ணி சந்தோஷத்தில் சிரித்தேன்...' என்று பதில் சொன்னான், சிறுவன்.
பளிச்சென்று மன்னரும் ஒரு தீர்வு சொன்னார்; 'அப்படியானால், என்னை பலி கொடுங்கள். சிறுவனை விட்டு விடுங்கள். பலியாக வேண்டியவன் நான் தான்...' என்று, கட்டளையிடும் குரலில் சொன்னார்.
மன்னர் அவ்வாறு சொன்ன அதே வேளையில், வானத்தில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த பெரும் பாறை மறைந்தது.
மன்னரை பரீட்சை செய்து பார்க்க வந்த தேவலோகவாசி, மன்னரை வாழ்த்தி, தன் உலகம் திரும்பினார்.
மக்களை, தான் பெற்ற குழந்தைகள் போல கருதிய மன்னர், அப்படிப்பட்ட மன்னருக்காக மக்கள் செய்த செயல், வறுமையின் விளைவாக மகனையே கொல்லத் துணிந்த தந்தை, நாட்டு மக்களுக்காக மனம் உவந்து பலியாக துணிந்த சிறுவன், விபரம் அறிந்த மன்னரின் செயல் என பலவிதங்களிலும், நமக்கு வாழ்க்கை பாடம் நடத்தி விட்டது இக்கதை!
பி.என்.பரசுராமன்
அறிவோம் ஆன்மிகம்!
விரத நாட்களில், தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா?
தீபாவளி தவிர மற்ற விரத நாட்களில், தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது. ஆனால், சூரிய உதயத்திற்கு முன், தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து, விநாயகரை வணங்கிய பின், அதற்குரிய தெய்வத்தை வணங்கி விரதத்தை தொடங்கலாம்.
