PUBLISHED ON : ஜூலை 08, 2018

'சுவையான தகவல்கள்' நுாலிலிருந்து: கவியரசர் கண்ணதாசனுக்கு, ஒரு விழா எடுத்தனர். அதற்கு, காமராஜர் வந்து சிறப்பித்தார். அப்போது, காமராஜர் காலை தொட்டு வணங்கினார் கண்ணதாசன். அதைப் பார்த்த ஒரு சிலர், காலில் விழுந்ததை தவறு என, பேசினர். அதற்கு கண்ணதாசன், 'காமராஜரின் கால்கள், தேசத்துக்காக, சத்தியாகிரகம் செய்யப் போன கால்கள். சிறைச் சாலையில் பல்லாண்டு உலாவிய கால்கள், என்னுடைய கால்களுக்கு அந்த பாக்யம் கிடைக்காத காரணத்தால், என் கைகளாவது அந்த பாக்யம் பெறட்டும்... என்பதற்காகவே, காமராஜர் காலில் விழுந்தேன்...' என்று விளக்கமளித்தார்.
'பிரபலங்கள் வாழ்வில் சுவையான சம்பவங்கள்' நுாலிலிருந்து: கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் நகைச்சுவை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும். ஒரு முறை, என்.எஸ்.கே., தன் வீட்டில், பழைய சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, வந்த நண்பர் ஒருவர், கலைவாணரை பார்த்து, 'என்ன இப்படி பழைய சோற்றை சாப்பிடுகிறீர்கள்... உங்கள் தகுதிக்கு பலகாரம் சாப்பிடக் கூடாதா?' என்று கேட்டார்.
வந்த நண்பரை உட்கார சொன்ன கலைவாணர், வேலையாளை அழைத்து, 'ஓட்டலில் போய் பழைய சோறு வாங்கி வா...' என சொன்னார். சிறிது நேரத்தில் திரும்பி வந்த வேலைக்காரர், 'ஐயா... எங்கு கேட்டும் பழைய சாதம் கிடைக்கவில்லை. மாறாக, இட்லி, தோசை மற்றும் பொங்கல் இவைகளே உள்ளது...' என, சொன்னார்.
உடனே, என்.எஸ்.கே., வந்த நண்பரிடம், 'எல்லாம் ஓட்டலில் கிடைக்கும். ஆனால், பழைய சோறு கிடைக்காது...' என்று சொன்னார்.
எம்.ஜி.ஆர்., - என்எஸ்.கே., நடித்த, மதுரை வீரன் படத்தில் ஒரு காட்சி...
என்.எஸ்.கே.,வும், அவர் மனைவி, டி.ஏ.மதுரமும், பழைய சோற்றை நீருடன் சாப்பிட்டுக் கொண்டிருப்பர். என்.எஸ்.கே., சாப்பிட்டு முடித்தவுடன், 'ஆஹா... என்ன ருசி... இதைத்தான் தேவாமிர்தம்ன்னு சொல்லி இருப்பாங்களோ...' என பழைய சோற்றின் மகிமையை சொல்வார்.
செ.ஜெயக்கொடி எழுதிய, 'சின்ன சின்ன செய்திகள்' நுாலிலிருந்து: 'உலகை என் காலடியில் விழ வைப்பேன்...' என்று கொக்கரித்த ஜெர்மானிய சர்வாதிகாரி, ஹிட்லர், ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் தான் துாங்குவார். இரண்டாம் உலகப் போரின்போது, எந்நேரமும் திட்டமிட்டபடியும், தளபதிகளுக்கு கட்டளையிட்டபடியும் இருப்பார். அந்த துாக்கமின்மையும், அவரது திட்டமிடலுமே ஹிட்லருக்கு மளமளவென்று வெற்றியை தேடித் தந்தது.
ஒருநாள், அவர் நிம்மதியாக துாங்க விரும்பி, இரண்டு துாக்க மாத்திரைகளை போட்டு துாங்கினார். அப்போது, ஜெர்மானிய படைகள், பிரஞ்சு நாட்டின், நார்மாண்டி துறைமுகத்தை முற்றுகையிட்டன. அந்த நேரத்தில், அமெரிக்க அதிபர் ஐசனோவரும், பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சிலும், நார்மாண்டி கடற்கரைக்கு படையை அனுப்பி வெற்றி பெற்றனர். போரில் ஹிட்லர் தோற்க, அமெரிக்கா வீசிய அணுகுண்டு மட்டுமே காரணமில்லை. அவரது அந்த நாள் துாக்கமே காரணம்.
கி.வா.ஜ., எழுதிய கட்டுரையிலிருந்து: 'சமைப்பது கலையானால் சாப்பிடுவதும், கலை தான்; என் ஆசிரியர், உ.வே.சாமிநாதய்யர், தமிழ் பண்பாட்டை நன்றாக சுவைத்து, இன்புறுவது போல, உணவையும் சுவைத்து, உண்பார். நல்ல பாட்டை ரசிக்கிறவர்கள் ரசித்தால் தான் பாடுகிறவனுக்கு உற்சாகம்; அதுபோல, நல்ல சாப்பாட்டை, சுவைத்து உண்டால் தான் சமைத்தவர்களுக்கு மகிழ்ச்சி.
சிவஞான முனிவரிடம், ஒரு தவசிப்பிள்ளை இருந்தான்; அவர், அவனிடம் இன்ன இன்னபடி சமையல் செய்ய வேண்டுமென்று சொல்வாராம். அப்படி சொன்னதாக ஒரு பாட்டு கூட இருக்கிறது.
அது:
சற்றே துவையல் அரை; தம்பி,
ஒரு பச்சடி வை
வற்றல் ஏதேனும் வறுத்து வை, குற்றம் இலை
காயம் இட்டுக் கீரைக் கடை
கம்மெனவே மிளகுக்
காய் அரைத்து வைப்பாய், கறி!
நடுத்தெரு நாராயணன்
