
நல்லதே நினை, நல்லதே செய் என்றனர், முன்னோர்.
நல்லாரைக் காண்பதும் நன்றே; நலமிக்க நல்லார் சொல் கேட்பதும் நன்றே; நல்லார் குணங்கள் உரைப்பதும் நன்றே; அவரோடு இணங்கி இருப்பதும் நன்றே... என, அருந்தமிழ் பாட்டி அவ்வையும் கூறியிருக்கிறார். நல்லவர்களுக்கு அவ்வளவு சக்தி. இதை விளக்கும் கதை இது:
நட்சத்திர வர்மன் என்றொரு மன்னர் இருந்தார். நாட்டையோ, மக்களையோ காப்பாற்றுவதில், சற்று கூட சிந்தையைச் செலுத்த மாட்டார்.
மக்களைத் துன்புறுத்தி, அவர்களின் செல்வங்களை அபகரிப்பதும், பெண்களிடம் முறைகேடாக நடப்பதும் தான், அவர் செயலாக இருந்தது. போதுமென்ற எண்ணம் இல்லாததால், பக்கத்து நாடுகளிலும் கொள்ளையடித்தார்.
ஒரு சமயம், விதேக நாட்டிற்குச் சென்றார், நட்சத்திர வர்மன்.
அங்குள்ள ஒரு விஷ்ணு கோவிலின் தங்க கோபுரம், நவரத்ன மயமான கொடிக்கம்பம், தங்கக்கலசம் ஆகியவற்றைப் பார்த்ததும், 'ஆகா... இந்த ஓரிடம் போதும் போல் இருக்கிறதே...' என்ற எண்ணத்தில் உள்ளே நுழைந்தார்.
அங்கே, விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள், பளபளவென ஜொலிக்கும் வைரங்கள் என, ஏராளமாக இருந்தன.
'ஹா... இவ்வளவும் நமக்காகவே இங்கே வைக்கப்பட்டிருக்கின்றன...' என்று முணுமுணுத்தபடியே நெருங்கினார், நட்சத்திர வர்மன்.
சாந்தமே வடிவாக, உதங்கர் என்ற சாது அமர்ந்திருந்தார்.
அவரைப் பார்த்ததும், 'என்னடா இது, இந்த ஆள் நமக்கு இடைஞ்சலாக இருப்பான் போலிருக்கிறதே...' என்று எண்ணி, உதங்கரைப் பிடித்து தள்ளி, காலால் மார்பை மிதித்தபடி, அவரை வெட்டுவதற்காக, வாளை ஓங்கினார், நட்சத்திர வர்மன்.
பகவானை மனதில் பூஜித்து வரும், உதங்கர், அந்த நிலையிலும் மனம் கலங்கவில்லை.
'நட்சத்திர வர்மா... உனக்கு ஒரு தீங்கும் இழைக்காத என்னை ஏன் கொல்லுகிறாய். பொருட்களைக் கொள்ளையிடும்போது, நான் குறுக்கே நிற்பேன் என, எண்ணினாயா... என்னப்பா இது, நியாயமான வழியில் தேடிய செல்வமே நிலைப்பதில்லை. நாம் தேடும் பொருளால் வளரும் மனைவி, மக்கள் எனும் சொந்தம் எதுவும், பாவத்தில் பங்கு கொள்வதில்லை.
'நம் பாவத்தின் பயனை, நாமேதான் அனுபவித்தாக வேண்டும். ஒருவன் பிறக்கும்போதே, அவனுக்கு ஆயுளும், செல்வமும் இவ்வளவு தான் என, நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அதை மீறி, நீ என்ன தான் சேர்த்தாலும் அந்த செல்வம் உன்னிடம் நிலைக்காது...' என, தர்ம உபதேசம் செய்தார்.
உதங்கரின் வார்த்தைகள், நட்சத்திர வர்மனின் மனதில் மாறுதலை உண்டாக்கின. உதங்கரைப் பிடித்திருந்த பிடியை விட்டு, வாளை உறையில் இட்டார். அவரின் மார்பிலிருந்து காலை எடுத்தார்; மன்னரின் மனதிலிருந்த இருள், முழுமையாக விலகியது.
'அளவில்லாத பாவம் செய்தேனே... எத்தனை கொலை, கொள்ளை, பாவங்களுக்கு பரிகாரம் செய்யக்கூட வழி தெரியவில்லையே...' என்று கதறிய, நட்சத்திர வர்மன், கீழே விழுந்து புரண்டார்; சில நொடிகளில் அவர் உயிர் பிரிந்தது.
'என்ன விந்தை... செய்த பாவங்களுக்காக, மரணப் பிராயச்சித்தமே செய்து விட்டானே...' என்று வியந்த உதங்கர், பகவானுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தால், நட்சத்திர வர்மனின் உடம்பை நனைத்தார். மிச்சம் மீதி இருந்த பாவமும் விலகி, துாயவனாகி, வைகுண்டத்தை அடைந்தார், நட்சத்திர வர்மன்.
தீயவர்களையும் திருத்தக்கூடிய நல்லவர்கள் என்றும், எங்கும் உண்டு என்பதை, விளக்கும் கதையிது.
நல்லவர்களுடன் சேர்வோம், நலம் பெறுவோம்!
பி. என். பரசுராமன்

