PUBLISHED ON : ஜூன் 18, 2017

பல தனியார் பள்ளிகள், கோடி கோடியாக கொட்டிக் கொடுக்க, தயாராக இருந்தாலும் கிடைக்காத, பள்ளிகளுக்கான, ஐ.எஸ்.ஓ., தர சான்றிதழ், நாகை மாவட்டம், கீச்சாங்குப்பம் என்ற மீனவ கிராமத்து, அரசு பள்ளிக்கு கிடைத்துள்ளது, மொத்த தமிழகத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஒருபுறம் ஆறு, மற்றொருபுறம் கடல் என இயற்கை அழகுடன் திகழும் இக்கிராமத்தில், அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.
கடந்த, டிச., 26, 2004ல் சுனாமி சூறையாடிய, 600 உயிர்களில், இப்பள்ளி குழந்தைகள், 80 பேரின் உயிர்களும் அடங்கும். சுனாமியில் பள்ளிக் கட்டடம் இடிந்து, சேதமானது.
எந்த ஆறும், கடலும் அழகூட்டியதோ, அந்த ஆறும், கடலும் பயமுறுத்தவே, தங்கள் பிள்ளைகளை, இப்பள்ளிக்கு அனுப்புவதை தவிர்த்து, தொலைவில் உள்ள நகர்ப்புற பள்ளிக்கு, அனுப்ப ஆரம்பித்தனர், பெரும்பாலான பெற்றோர்.
நானூறு பேர் படித்த பள்ளியில், 190க்கு கீழ் என, மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது. '190 மாணவர்களுக்கு, எதற்கு, 11 ஆசிரியர்கள்...' என்று, நான்கு பேரை, இடமாற்றம் செய்தது, கல்வித்துறை.
இப்படி, தாங்கள் பார்த்துப் பார்த்து பெருமைப்பட்ட பள்ளி, தங்கள் கண் எதிரே, அதன் பெருமையை இழந்து வருவதைப் பார்த்து, செய்வதறியாது திகைத்தனர், ஊர் தலைவர்கள். இச்சூழ்நிலையில் தான், இப்பள்ளிக்கு, தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார், ஆசிரியர் பாலு!
'நல்ல கட்டடத்தில், தரமான கல்வியை கொடுத்தால், மாணவர்கள், இந்த பள்ளியை விட்டு, எங்கும் போக மாட்டார்கள்; ஆகவே, தரமான கல்வியை கொடுப்பது...' என, முடிவு செய்தார். ஊர் மக்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் ஒத்துழைப்போடும், தொண்டு நிறுவனங்களின் உதவியோடும், பள்ளிக் கட்டடம், நவீனமாக புதுப்பிக்கப்பட்டது.
நூலகம், ஆய்வுக்கூடம், குடிநீர், சுகாதாரமான கழிப்பறையுடன் கூடிய பள்ளியில், ஒரு, 'ஸ்மார்ட்' வகுப்பறையையும் துவங்கினார். 'ஸ்மார்ட்' வகுப்பறையில், கம்ப்யூட்டர் மற்றும் புரஜெக்டர் உதவியுடன், டிஜிட்டல் திரையில், பாடம் நடத்தப்படும்.
உதாரணத்திற்கு, யானையை பற்றிய பாடம் என்றால், திரையில், யானை படம் ஓடும்; அதன் சத்தம், உணவு மற்றும் வாழ்க்கை முறை என்று, அனைத்து அம்சங்களும், ஒலி, ஒளியாக தெரியும். இந்தப் படத்தை பார்த்த பின், பாடம் நடத்தும் போது, குழந்தைகள், யானையை பற்றி அழியாத அறிவை பெறுவர். இதுதான், 'ஸ்மார்ட்' கிளாஸ்!
இப்படி ஒரு வகுப்பு, இந்த பள்ளியில் நடத்தப்படுவதை ஊர் மக்களிடம் சொல்வதற்காக, இலவச மருத்துவ முகாம் நடத்தினார், பாலு. மருத்துவ முகாமிற்கு வந்த பொதுமக்கள், பள்ளி கட்டடத்தையும், அதில் இருந்த வசதிகளையும் பார்த்து, அந்த ஆண்டே, தங்களது பிள்ளைகளை இந்த பள்ளியில் சேர்த்தனர். இதன் காரணமாக, பள்ளியின் மாணவர் எண்ணிக்கை இரட்டிப்பாகியது. 'தமிழகத்திலேயே அதிக மாணவர்களை சேர்த்த இரண்டாவது பள்ளி...' என்று, அரசின் பாராட்டையும் பெற்றது.
மாவட்ட நிர்வாகத்தை அணுகி, தன்னிறைவு திட்டம் உள்ளிட்ட என்னென்ன திட்டங்கள் இருக்கிறதோ, அனைத்து திட்டங்களையும், பள்ளிக்கு செய்ததன் காரணமாக, அடுத்தடுத்து வந்த மாதங்களில், அனைத்து வகுப்புகளும், 'ஸ்மார்ட்' வகுப்பறையாகின.
மேலும், பள்ளியில் சிறுவர் பூங்கா, மாடித் தோட்டம் அமைத்ததுடன், கூடுதலாக, யோகா, கராத்தே மற்றும் ஸ்போக்கன் இங்கிலீஷ் என்று, பலவும் கற்றுக் கொடுத்ததை அடுத்து, மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
தனியார் பள்ளிகள் மீதுள்ள கவர்ச்சி காரணமாக, அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், கீச்சாங்குப்பம் அரசுப் பள்ளியில் மட்டும், எண்ணிக்கை கூடிச் செல்வதை அறிந்து, பாலுவை பாராட்டினார், மாவட்ட கலெக்டர். பள்ளி ஆய்வு செய்யப்பட்டு, ஐ.எஸ்.ஓ., சான்றிதழுக்கு தகுதி பெற்றது. ஐ.எஸ்.ஓ., சான்று கிடைத்ததை விழாவாக கொண்டாடி, தலைமையாசிரியர் பாலுவிற்கு, தங்க மோதிரம் அணிவித்து, கவுரவித்தனர், ஊர் மக்கள்.
விழாவிற்கு வந்த கிராம மக்கள், மேளதாளம் முழங்க, பள்ளிக்கு, பீரோ, பேன், நாற்காலி, பெஞ்சு என, இரண்டு லட்ச ரூபாய்க்கு சீர் வரிசை கொடுத்தது, தமிழக பள்ளி வரலாற்றிலேயே இதுவரை நடவாதது.
மாநில மற்றும் தேசிய அளவிலான நல்லாசிரியர் விருது பெற்றவர், பாலு. ஆனாலும், அந்த பந்தா எதுவும் இல்லாமல், விடுமுறை நாட்களில் கூட, பள்ளியில் உட்கார்ந்து, பள்ளியின் முன்னேற்றத்திற்கு இன்னும் என்ன செய்யலாம் என யோசித்து, அதற்கான வேலைகளில் ஈடுபடுகிறார்.
''ஊர் தலைவர்கள், மக்கள், சக ஆசிரியர்கள், பெற்றோர், மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் என, பலரது உதவி, ஒத்துழைப்பு மற்றும் உழைப்பும் தான், இதை சாத்தியமாக்கியுள்ளது. ஆகவே, இதற்கான பாராட்டு அனைவருக்கும் உரித்தானது,'' என்கிறார், அடக்கத்துடன்!
அரசுப் பள்ளியை, தன் பள்ளியாக நினைத்து செயல்படும் பாலு போன்ற தலைமை ஆசிரியர்களால் தான், நாடு கொஞ்சமாவது, தன் நெஞ்சை நிமிர்த்திக் கொள்கிறது.
தலைமை ஆசிரியர் பாலுவை பாராட்ட நினைப்பவர்களுக்கு...
அவரது மொபைல் எண்: 86082 27549
எல்.முருகராஜ்
