
உ.பி., மாநிலத்தில், கிருஷ்ணர் பிறந்த ஊரான மதுராவில் உள்ளது, கோவர்த்தன கிரி மலை. இப்பகுதி மக்கள், வளமையாக வாழவும், நல்ல மழை பெய்து பூமி செழித்து, விவசாயம் பெருகவும், ஆண்டுதோறும் இந்திரனுக்கு விழா எடுப்பர்.
இது, கிருஷ்ணனுக்கு தெரிய வந்தபோது, 'உழைத்ததற்கு பலன் உண்டு. மழையும், காலமும் இயற்கையின் நியதி. ஆக, இந்திரனுக்கு எதற்கு விழா?' என, தடுத்து விட்டார்.
இதனால், கடும் கோபத்துடன், ஒரு வாரம் மழையை கொட்ட செய்தான், இந்திரன். கிருஷ்ணனின் உதவியை மக்கள் நாட, கோவர்த்தன கிரி மலையையே துாக்கி, கடும் மழையிலிருந்து காத்தான், கிருஷ்ணன்.
முடிவில், இந்திரன் கர்வம் அடங்கியது. மகிழ்ந்த மக்கள், அடுத்த ஆண்டு முதல் இந்திர விழாவுக்கு பதில், கிருஷ்ணனுக்கு விழா எடுக்க ஆரம்பித்தனர்.
பசுஞ் சாணத்தை வீட்டில் சிறு மலை போல் குவித்து, அதற்கு பூ போட்டு, அலங்காரம் செய்வர். ஒன்பது வகையான பண்டங்களை நைவேத்யமாக வைத்து, அதை உறவினர்களுக்குள் பகிர்ந்து கொள்வர் அல்லது கோவிலுக்கு சென்று விநியோகம் செய்வர்.
இதேசமயம், கோவிலிலும் பண்டங்களை மலை போல் குவித்து, கிருஷ்ணனுக்கு நைவேத்யம் செய்து, அதை பக்தர்களுக்கு விநியோகிப்பர். இதை அண்ணகூட் எனக் கூறுவர்.
மதுரா, பிருந்தாவன், கோகுலம், ராதா ஜென்மபூமி உட்பட, பல இடங்களில் மிகவும் பிரபலமான கோவில்கள் மற்றும் வீடுகளிலும் இவ்வாறு கொண்டாடுவர்.
மேலும், பஞ்சாப், அரியானா, உ.பி., மற்றும் பீகார் மாநிலங்களிலும் கோவர்த்தன பூஜையும், அண்ணகூட்டும் சிறப்பாக நடைபெறும்.
கர்நாடக மாநிலம், மைசூர் இஸ்கான் கோவிலில், 2009ல், 250 கிலோ சாதத்தை மலை போல் குவித்து, பூஜை நடத்தி, நைவேத்யம் செய்து விநியோகித்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை, ஸ்ரீமகாலட்சுமி கோவிலில், தீபாவளி அண்ணகூட்டின்போது, 56 வகையான இனிப்பு, காரங்களை நைவேத்யம் செய்து, 500 பக்தர்களுக்கு விநியோகிப்பர்.
காசியில், விசுவநாதர் - அன்னபூரணா கோவில்களில், தீபாவளி பண்டிகை, விசேஷமாக கொண்டாடப்படும். தீபாவளியன்று, தங்கத்தில் ஜொலிப்பாள், அன்னபூரணி.
அதுமட்டுமல்ல, மரத்தில் தேர் செய்து, அதை சுற்றி லட்டுகளை கட்டி, லட்டு தேராக மாற்றியிருப்பர். மேலும், நுாற்றுக்கணக்கில் தின்பண்டங்கள், தானியங்கள் சுற்றி வைக்கப்பட்டிருக்கும். இவற்றை நான்கு நாட்களுக்கு பிறகு, வாங்கி சாப்பிட கடும் போட்டி இருக்கும்.
விசுவநாதர் கோவிலிலும் அண்ணகூட் உண்டு. அன்னபூரணி கோவில் அளவுக்கு இல்லாவிடினும் இங்கும் ஏராளமான தின்பண்டங்கள், நைவேத்தியத்திற்கு நிரப்பப்பட்டிருக்கும்.
அலகாபாத், டில்லி உட்பட, பல நகரங்களில் உள்ள இஸ்கான் கோவில்களிலும், மிகப்பெரிய அளவில் அண்ணகூட் வைத்து வழிபாடு செய்யப்படும். இப்படி குறைந்தது, 56 பண்டங்களை செய்து வைத்து வழிபடுவதை, 'சாப்பான் போக்' என குறிப்பிடுவர்.
அண்ணகூட்டும், கோவர்த்தன பூஜையும், தீபாவளி சார்ந்த ஐந்து நாள் விழாவில், நான்காவது நாள் கொண்டாடப்படும்.
கோவர்த்தனகிரி சார்ந்த கிருஷ்ண லீலையை, பாகவத புராணம் எளிமையாக கூறுகிறது.
செல்வ கணபதி

