PUBLISHED ON : அக் 23, 2022

ஜன., 14, 1965 - பொங்கல் அன்று, இரவும் பகலும் படம் வெளியானது.
அந்த நாளில் பிரபலங்கள் பலர், தங்கள் படத்தின் முதல் காட்சியை அண்ணாசாலையில், 'ஏசி' உள்ளிட்ட பல வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட தியேட்டரில் தான் பார்ப்பது வழக்கம். அதே தியேட்டரில் தான், தயாரிப்பாளர் தளியத் மற்றும் சில நண்பர்களுடன் படத்தை பார்த்தார், ஜெய்.
படம் துவங்கியது, 'அறிமுகம் ஜெய்சங்கர்' என, திரையில் தன் பெயர் வந்தபோது, கண்களில் நீர் முட்ட, அருகிலிருந்த தளியத்தின் கால்களை தன்னிச்சையாக தொட்டன, அவரது கைகள்.
கதாநாயகன் வேடத்தில் தோன்றி, சில மர்மங்களை துப்பறிவதான அந்த கதையில், இரு மாறுபட்ட தோற்றங்களில், இரட்டை வேட நடிப்பை அநாயாசமாக கையாண்டிருந்தார். முதல் படம் என்று சொல்ல முடியாத வகையில் அவ்வளவு உணர்ச்சிகரமான, யதார்த்தமான நடிப்பு.
ஜெய்சங்கர் வரும் காட்சிகளுக்கு பலத்த கைத்தட்டல். அவரது நடிப்புக்கு பல இடங்களில் உற்சாக விசில்கள்.
திரையிட்ட இடங்களில் எல்லாம், படம் அமோக வெற்றி. ஜெய்சங்கர் என்ற நடிகனை, சினிமா, சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றதற்கு அச்சாரமாக, இந்த வெற்றி இருந்தது. இரவும் பகலும் படத்தின் வெற்றியில், அதன் பாடல்களுக்கும் முக்கிய பங்கிருந்தது. டி.ஆர்.பாப்பா இசையில் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ரீங்காரமிட்டன.
படத்துக்கு சிறப்பான விமர்சனம் எழுதியதோடு, ஜெய்சங்கரின் படத்துடன், ஒரு பக்கம் ஒதுக்கி, 'இம்மாத நட்சத்திரம்' என்ற தலைப்பில் பாராட்டுப் பத்திரம் வாசித்திருந்தது,'பேசும்படம்' இதழ்.
அதேசமயம் வீட்டில்... ஒரே இரவில் தன் மகன் அடைந்த புகழை ஜீரணிக்க, சுப்ரமணியன் தம்பதிக்கு நீண்ட நேரம் ஆனது. தங்கள் பேச்சை மீறினாலும், தன் லட்சியத்தில் உறுதியாக நின்று சாதித்துக் காட்டிய மகனை, அவர்கள் உச்சிமோர்ந்து பாராட்ட தவறவில்லை. சோ, உள்ளிட்ட, 'விவேகா பைன் ஆர்ட்ஸ்' நண்பர்கள், ஜெய்யின் தன்னம்பிக்கையை பாராட்டினர்.
இரவும் பகலும் படம், ஜெய்சங்கரை புகழின் உச்சியில் ஏற்றிய நாளில், நந்தனத்தில் அவரது வீடு இருந்த வீதி, தயாரிப்பாளர்களால் தள்ளுமுள்ளுக்கு உள்ளானது.
'தம்பி... சினிமா என்பது, குதிரை பந்தயம் போல. முந்தியடித்து ஓடுகிற குதிரை மீதுதான் பந்தயம் கட்டுவர். குதிரை உட்கார்ந்து விட்டால், அடுத்த குதிரையை தேடி ஓடுவர். சினிமாவில் வெற்றி பெறுவதை விட சிரமம், அதை தக்க வைத்துக் கொள்வது.
'பணத்துக்காக கிடைக்கும் படங்களை ஒப்புக்கொண்டால், வந்த வேகத்திலேயே காணாமல் போக நேரிடும். அதனால், நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடி...' என்று, தளியத் சொன்ன எச்சரிக்கையை மனதில் கொண்டே, படங்களை ஒப்புக்கொண்டார், ஜெய்.
கே.சங்கரின் இயக்கத்தில் நடித்த, பஞ்சவர்ணக்கிளி படம், இரண்டாவதாக வெளி வந்தது.
எம்.ஜி.ஆர்., - சிவாஜி உள்ளிட்ட கலைஞர்களை இயக்கிய திறமையான இரட்டையர்களான, கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஜெய்யின் மூன்றாவது படமான குழந்தையும், தெய்வமும் தான் அது.
சந்தர்ப்ப சூழ்நிலையால் கணவன் - மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உருவாகி பிரிகின்றனர். அவர்களது இரட்டை குழந்தைகளில் ஒன்று தந்தையிடமும், மற்றொன்று தாயிடமும் வளர்கிறது.
பின்னாளில், அந்த குழந்தைகள் தங்கள் புத்திசாலித்தனத்தால் பெற்றோருக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமையை களைந்து, அவர்களை ஒன்று சேர்ப்பது தான், குழந்தையும் தெய்வமும் கதை. பேரஸ்ட் ட்ராப் என்ற ஆங்கில படத்தின் தழுவல் இது.
ஆங்கில கதையின் திரைக்கதையை, சீதாராமன் என்ற எழுத்தாளர், தமிழ் கலாசாரத்துக்கு ஏற்றபடி மாற்றித் தந்தார்.
உழைப்போடு, அதிர்ஷ்டமும் ஜெய்சங்கருக்கு துணை நின்றது. ஏவி.எம்., பேனர், புகழ்பெற்ற இயக்குனர்கள், கிருஷ்ணன் - பஞ்சு, இந்த இரட்டை மகிழ்ச்சியில் திளைத்து கிடந்தவருக்கு, மேலும் ஓர் இனிப்பான செய்தியாக, அந்த படத்திற்கு ஜனாதிபதி விருது வந்து சேர்ந்தது.
ஏவி.எம்., நிறுவனத்திற்கு முதல் ஜனாதிபதி விருதை பெற்றுத் தந்த திரைப்படம் ஜெய்சங்கருடையது. டில்லியில் நடந்த விழாவில், அன்றைய செய்தி ஒளிபரப்பு துறை அமைச்சரும், பின்னாளில் இந்திய பிரதமருமான இந்திராவிடமிருந்து விருதை பெற்றது, ஏவி.எம்., நிறுவனம்.
இரவும் பகலும் படத்திற்கு பிறகு, பெரும் நிறுவனங்களும், பிரபல இயக்குனர்கள் பலருமே ஜெய்சங்கரை அணுகினர். விஜயா வாஹினியின் அதிபர் நாகி ரெட்டி, எங்க வீட்டு பெண் படத்திற்கு, ஜெய்சங்கரை ஒப்பந்தம் செய்தார்.
இந்த படத்தின் இயக்குனர், சாணக்யா, அதற்கு முந்தைய ஆண்டு தான், எம்.ஜி.ஆரின் வெற்றி படமான, எங்க வீட்டு பிள்ளை படத்தை இயக்கியிருந்தார். ஆனால், எங்க வீட்டு பெண்ணை இயக்குவதிலிருந்து எதிர்பாராத விதமாக அவர் விலகியதால், வேறு வழியின்றி, நாகி ரெட்டியே படத்தை இயக்கி, முடித்தார்.
இந்த குழப்பங்கள் படத்தின் வெற்றியை பாதித்தன. படம், ஆஹாவென இல்லையென்றாலும், ஐயோவென இல்லை. இரவும் பகலும் படத்தை தொடர்ந்து அறிமுக ஆண்டிலேயே வெளிவந்த மூன்று படங்களும் மக்கள் மனதில், ஜெய்சங்கருக்கு ஓரிடத்தை உருவாக்கித் தந்தன.
கடந்த, 1966ல், ஜெயலலிதாவுடன் இணைந்து நடித்த முதல் திரைப்படமான, நீ வெளியானது. இதற்கு முந்தைய ஆண்டு, எம்.ஜி.ஆருடன் நடித்த, ஆயிரத்தில் ஒருவன் மூலம் பெரும் புகழடைந்திருந்தார், ஜெயலலிதா. இதனால், அவருடன் சகஜமாய் பழகுவதில், ஜெய்சங்கருக்கு சங்கடம் இருந்தது.
ஜெயலலிதாவும் அநாவசியமாக யாருடனும் பேசுபவர் அல்ல. காட்சி எடுக்கப்பட்டதும் அடுத்த நொடி, புத்தகமும், கையுமாக ஒதுங்கி விடுவது அவரது வழக்கம். முதல் நாள் ஒரு சின்ன, 'ஹாய்' என்ற பரஸ்பர அறிமுகத்துக்கு பிறகு, இருவருமே சகஜமாக பேசிக் கொள்ளவில்லை.
சில நாட்கள் இப்படியே நீண்டன. ஆனாலும் ஜெய்யை தொடர்ந்து கவனித்த வண்ணம் இருந்தார், ஜெயலலிதா.
படத்துக்கு ஜெய் அளிக்கும் ஒத்துழைப்பு, யாரிடமும் நாகரிகமாக பழகும் தன்மை, 'லைட்மேனுக்கும்' மரியாதை தரும் பண்பு ஆகியவை, ஒரு கட்டத்தில் ஜெய் மீது, ஜெயலலிதாவுக்கு மரியாதையை ஏற்படுத்தின.
ஒருநாள் படப்பிடிப்பில், நாயகன் - நாயகி இருவரையும், எதிரிகள் ஓர் அறையில் வைத்து பூட்டி விட, அதிலிருந்து இருவரும் தப்பித்து வெளிவரும் காட்சி படமாக்கப்பட்டது. 'ஷாட்' முடிந்ததும், வழக்கம்போல் அங்கிருந்த ஊஞ்சலில் வந்து அமர்ந்தார், ஜெய்.
அப்போது...
— தொடரும்.இனியன் கிருபாகரன்

