
பா - கே
ஒருநாள் காலை, அலுவலகத்தில், 'பிசினஸ் ஸ்டாண்டர்டு' என்ற ஆங்கில நாளிதழை படித்துக் கொண்டிருந்த லென்ஸ் மாமா, 'மணி... இந்த செய்தியை பாரேன். ஆப்ரிக்காவின், எத்தியோப்பிய நாட்டு ஏர்லைன்சை சேர்ந்த, குறைந்த துாரமே பயணம் செய்யக்கூடிய விமானம் ஒன்று, இறங்க வேண்டிய இடத்தில் இறங்காமல், கொஞ்ச துாரம் பயணித்து, பின் மீண்டும் உரிய இடத்துக்கு வந்து இறங்கியுள்ளது...' என்றார்.
'ஏன்... என்ன காரணம், விமானத்தில் ஏதாவது கோளாறா...' என்றேன், நான்.
'அதெல்லாம் ஒன்றும் இல்லை. விமானத்தை இயக்கிய இரண்டு பைலட்டுகளும், ஒரே சமயத்தில் துாங்கி விட்டனராம்...' என்று கூறி சிரித்தார், லென்ஸ் மாமா.
'ஏன் மணி... நம்மூரில் வெகு துாரம் செல்லும் எக்ஸ்பிரஸ் பஸ்சிலோ, ரயிலிலோ இரண்டு டிரைவர்கள் இருப்பரே... ஒருவர் ஓய்வு எடுக்கும்போது, மற்றொருவர், பஸ் அல்லது ரயிலை இயக்குவார். விமானத்திலும் அதுபோலதானே இருக்கும். அதெப்படி இரு பைலட்டுகளும் ஒரே நேரத்தில் துாங்க அனுமதித்தனர்?' என்று அப்பாவியாக கேட்டார், உதவி ஆசிரியை ஒருவர்.
'உள்நாட்டுக்குள் சிறிது துாரம் மட்டும் செல்லும் விமானங்களில் இரண்டு பைலட்டுகள் மட்டுமே இருப்பர். நீண்ட துாரம் செல்லும் விமானங்களில், நான்கு பைலட்டுகள் இருப்பர்.
'இரண்டு பைலட் செல்லும் விமானத்தில், ஒருவருக்கு துாக்கமோ, திடீர் தளர்ச்சியோ ஏற்பட்டால், அருகில் உள்ள பைலட்டிடம் கூறி, தன் இருக்கையை பின்புறமாக சாய்த்துக் கொண்டு துாங்கவோ, ஓய்வு எடுக்கவோ முடியும்.
'நான்கு பைலட்டுகள் உள்ள விமானத்தில், ஓய்வு எடுக்கவென்றே சுவரோடு இணைக்கப்பட்ட இருக்கை இருக்கும். அதில் அமர்ந்து ஓய்வு எடுக்கலாம்.
'ஒருநாளில், ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும், திடீரென துாக்கமோ அல்லது தளர்ச்சியோ வரலாம்.
'அதேபோல், பொதுவாகவே, அதிகாலை, 2:00 மணி முதல் காலை, 6:00 மணி வரை திடீரென துாக்கம் வரலாம். இதற்கு அவர் ஓட்டிய முந்தைய விமான நேரம் கூட ஒரு காரணமாய் இருக்கலாம்.
'ஏர் இந்தியா, தன்னுடைய போயிங் 747 விமானத்தில் ஒரு புதிய கருவி பொருத்தியுள்ளது. அது, 20 நிமிடம், ஓட்டும் பைலட்டுகள் அந்த இடத்தில் உள்ள எந்த சுவிட்சையும் தொடவில்லை என அறிந்தால், எச்சரிக்கை செய்யும்.
'விமானம் புறப்பட்டு வானத்தில் பறக்கும் போதும், இறங்கும் போதும், ஒரு மணி நேரத்துக்கு துாங்கக் கூடாது. உயர்ந்த மலைப் பகுதிகளின் மீது பயணிக்கும் போது, ஓய்வு எடுக்கவே கூடாது.
'பொதுவாக பைலட்டுகள் துாங்கும் முன், பயணிகளுக்கு உதவும் விமான ஊழியர்களிடம் கூற வேண்டும். 20 நிமிடத்திற்கு பின், விமான ஊழியர் உள்ளே வந்து, பயணம் நல்லபடியாக தொடருகிறதா என, கண்காணிப்பார். விமான பைலட்டுகள் இருவருமே ஒரே சமயத்தில் துாங்கியது தவறு...' என்று, உ.ஆ., சந்தேகத்தை தீர்த்து வைத்தேன், நான்.
'ஓஹோ... இதில் இவ்வளவு விஷயம் இருக்கா?' என்று வியந்தார், உ.ஆ.,
'சட்டுன்னு வாயை மூடிக்கோம்மா... ஈ என்ன, அந்த விமானமே வாய்க்குள் போய் விடும் போலிருக்கே...' என்று கலாய்த்தார், லென்ஸ் மாமா.
மாமாவை ஒரு பார்வை பார்த்து, தன் வேலையில் தொடர ஆரம்பித்தார், உ.ஆ.,
ப
திண்ணை நாராயணனின் ஜோல்னாபையை துழாவியதில், கிடைத்த ஒரு புத்தகத்தில், கணவன் - மனைவி இடையே கருத்து வேற்றுமை ஏற்பட காரணம் என்ன என்று, ஒரு அத்தியாயம் கண்ணில் பட்டது. அதிலிருந்து ஒரு சிறு பகுதி இது:
மனைவி, கணவனை வெறுக்க காரணங்கள்...
* எல்லாவற்றையும் விட்டு விட்டு, உங்களையே நம்பி வரும் மனைவியை சந்தோஷமாக வைத்திருக்கவில்லை என்றால்
* பிறர் முன் தாழ்த்திப் பேசுவதால்
* அவளை மிஷின் போல வேலை செய்ய வைத்தாலும், மிஷினுக்கும் ஆயில் தேவைப்படுகிறது. இவளுக்கும் சுற்றுலா, நகை இன்னும் சில பிடித்த தேவைகள் இருக்கும். அது கிடைக்காத போது
* பொருளாதார ரீதியாக அவள் சம்பாதித்தாலும், இல்லை என்றாலும் வீட்டுக்கு அவள் தான் அரசி என்ற இடத்தை தராமல் இருப்பது
* தாழ்வு மனப்பான்மை கொண்ட ஆண்களே, சந்தேக புத்தி கொண்டவர்களாக இருந்து, தன் மனைவியின் வாழ்க்கையை நரகம் ஆக்கும்போது
* மனைவியின் முக்கிய தேவைகள் என்ன என்று தெரிந்து, அதைக் கொடுக்க தவறும் போது
* பல நாட்கள், வார கணக்கில் பேச்சு வார்த்தைகள் இல்லாமல் இருப்பது. மனைவிக்கு பேச்சு சுதந்திரம் மற்றும் நட்பான பேச்சு ரொம்ப முக்கியம் என்று உணராதது
* கடுமையான கோபக்காரன் நான் என்ற பெருமை எல்லாம் ஊரார்கிட்ட காட்டி, அதே பெருமையை மனைவியிடமும் காட்ட வேண்டும் என்று நினைத்தால், வெறுப்பு தான் மிஞ்சும்
* பெண்ணின் உணர்வுகள் அதிக ஏற்ற இறக்கம் கொண்டது என்பது உண்மை. அதனால், அவளின் உயர்வு, தாழ்வுக்கு ஆதரவு நாம் தான் தரவேண்டும் என்று உணர்ந்தால், உங்களுக்கு கிடைத்த பொக்கிஷமாக மாறுவாள்
* உங்களுக்கு சமைத்து போடவும், குழந்தைகள் பெற்றுக் கொடுக்க மட்டுமே அவர்கள் வரவில்லை. உங்கள் வாழ்க்கையில் பங்கு கொள்ளவே வந்தவர்கள் என்பதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்
* தாய்மை மிக முக்கியம் தான். ஆனாலும், 'உன் ஆசைக்கு பிள்ளை பெற்றாகி விட்டது. நீ மட்டுமே குழந்தையின் எல்லா தேவைகளுக்கும் உழைக்கணும், பார்த்துக்கணும்...' என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். உங்களுக்கும் குழந்தை வளர்ச்சியில் சம பங்கு உள்ளது என்பதை உணர்ந்து, மனைவிக்கு ஒத்துழைப்பு தாருங்கள்.
இறுதியாக, தன் பெற்றோர், உறவினர்களிடமும் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் என்று நினைக்காமல், மனைவியை சார்ந்தவர்களிடமும் அதே உறவை பேணிக் காக்க வேண்டும்.
இதில் ஒன்று குறைந்தாலும், உங்கள் மீது, டன் கணக்கில் வெறுப்பு வரத்தான் செய்யும்.
- இப்படி குறிப்பிடப்பட்டிருந்தது.
வாசகர்களே... உங்கள் வீடுகளில் எப்படி?

