PUBLISHED ON : ஏப் 03, 2011

ஏப்., 7 - மதுரை சித்திரை திருவிழா ஆரம்பம்!
மீனாட்சி - மதுரையின் அரசி. இவளுக்கு, இந்தப் பெயர் வந்ததே, அவளது கண்களின் சிறப்பால் தான்!
காசி விசாலாட்சியை, 'விசாலம்+அட்சி' என்று பிரிப்பர். 'அட்சம்' என்றால் கண்கள். விசாலமான கண்களால் உலகைப் பாதுகாப்பவள் என்று அர்த்தம். காஞ்சி காமாட்சியை, காமம்+அட்சி என்பர். இதற்கு, 'பக்தர்களின் விருப்பங்களை, தன் கண் அசைவிலேயே நிறைவேற்றுபவள்...' என பொருள். மீனாட்சியை, 'மீன்+அட்சி' என்று பிரிப்பர். மீன் போன்ற கண்களால், பக்தர்களுக்கு அருள்பவள் என்று பொருள். மற்ற இருவருக்கும் இல்லாத தனிச்சிறப்பு, மீனாட்சிக்கு உண்டு. மற்றவர்களின் கண்கள் இமைக்க வாய்ப்புண்டு; ஆனால், மீனின் கண்கள் இமைப்பதில்லை. மீன் இமைக்காமல், தன் குஞ்சுகளைப் பாதுகாக்கும் தன்மையுடையது. அதுபோல், கயற்கண்ணியான மீனாட்சியும், தன் பக்தர்களை இரவும், பகலும் விழித்திருந்து பாதுகாக்கிறாள். அவளது கண்கள் இமைப் பதில்லை என்பதால் தான், மதுரையும் தூங்கா நகராக விளங்குகிறது.
மீனாட்சியை, மரகதவல்லி என்பர். மரகதம் பச்சை நிறமுடையது; பச்சை வண்ணம் செழுமை யின் அடையாளம். தொழில் பின்னணி அதிக மில்லாத மதுரை, இன்று, மிகப்பெரிய நகரானதற்கு காரணம், மீனாட்சியின் கைங்கர்யமே. மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களை நம்பியே இவ்வூர் உள்ளது. பச்சை, இரக்கத்தின் அடையாள மாகவும் உள்ளது. அன்னை மீனாட்சி கருணையே வடிவானவள் என்பதை அவளது நிறம் உணர்த்துகிறது.
அன்னை பார்வதி தேவியே மீனாட்சியாக மானிட அவதாரம் எடுத்து, பூமிக்கு வந்தாள். விசுவாவசு எனும் கந்தர்வனுக்கு, வித்யாவதி என்ற மகள் இருந்தாள். இவள், பார்வதி தேவியின் தீவிர பக்தை. அவளது அருட்கடாட்சம் பெற விரும்பி, தந்தையிடம் விருப்பத்தைத் தெரிவித்தாள். பூலோகத்திலுள்ள கடம்பவனத்தில் தங்கி, பார்வதி தேவியை எண்ணி தவமிருந்தால், அது நடக்குமென தந்தை சொன்னார். அதன்படி, அவள் கடம் பவனத்தில் தவமிருந்தாள். பார்வதி தேவியை தன் தாயாக மட்டுமின்றி, மகளாகவும் கற்பனை செய்தாள். கடம்பவனத்தில் இருந்த கோவிலில், அம்பாள் சன்னிதியில் பல சேவைகளைச் செய்து வந்தாள். பார்வதி தேவி, அவள் முன் தோன்றி, அருள்பாலித்தாள்; அவளது விருப்பத்தைக் கேட்டாள்.
'உன்னை என் பிள்ளை போல எண்ணி, உனக்கு பணி செய்தேன். நிஜத்தில், நீ எனக்கு பிள்ளையாக வேண்டும்...' என்று வரம் கேட்டாள்; பார்வதி தேவியும் சம்மதித்தாள். 'வித்யாவதி... நீ அடுத்த பிறவியில், சூரசேனன் என்ற சோழராஜனின் மகளாகப் பிறந்து, மதுரையை ஆளும் மலையத்துவச ராஜாவை திருமணம் செய்வாய். உனக்கு மகளாய் பிறப்பேன். பின்னர், இருவரும் பிறவா வரம் பெறுவீர்கள்...' என்றாள். அடுத்த பிறவியில், இவர்களது மகளாக யாக குண்டத்தில் இருந்து பிறந்தாள் மீனாட்சி. தெய்வத்தை உளப்பூர்வமாக வணங்கினால், அது, நம் வீட்டுக்கே சொந்தம் கொண்டாட வந்து விடும் என்பதற்கு உதாரணம் மீனாட்சியின் பிறப்பு.
மீனாட்சியை போல சொக்கநாதரும் கருணையும், வீரமும் மிக்கவர். வேண்டியன வேண்டியபடி அருள்பவர். குழந்தை இல்லாத வந்தி எனும் பக்தைக்காக, பிள்ளையாக இருந்து மண் சுமந்தவர். அதற்காக ராஜாவிடம் பிரம்படியும் பட்டவர். தருமி என்ற ஏழைக்கு, பொற்கிழியை கொடுப்பதற்காக நக்கீரரிடமும், பாண்டியராஜாவிடமும் வாதாடியவர். இதன் மூலம் தமிழின் பெருமையை நிலை நிறுத்தியவர்.
மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றி ஆடி வீதி, சித்திரை வீதி, ஆவணி மூல வீதி, மாசி வீதி, வெளி வீதி ஆகியவை உள்ளன. அந்தந்த மாத திருவிழாக்களில், சுவாமி பவனி இந்த வீதிகளில் நடந்தது. மக்கள் தொகை குறைவாக இருந்த காலத்தில், சித்திரை வீதியில், சித்திரை சுவாமி பவனி வந்ததற்கான சான்றுகள் உள்ளன. பின்னர், இவ்விழா மாசி வீதிக்கு மாற்றப்பட்டது. மேலும், தேனூர் என்ற கிராமத்தில் நடந்த அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை, மதுரை வைகைக்கு மாற்றி, சித்திரை திருவிழாவுடன் இணைத்தார் திருமலை நாயக்கர்.
சித்திரை திருவிழாவில் தான் மீனாட்சியம்மை மதுரையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் பட்டாபிஷேகம், பல நாடுகளை வென்று சிவலோகத்தையே கைப்பற்றச் செல்லும் திக்விஜயம், திருக்கல்யாணம் ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கும். இதைத் தொடர்ந்து, அழகர் வைகையில் இறங்கும் விழா நடைபெறும். சித்திரை திருவிழா காண்போம். அங்கயற்கண்ணியின் கடைக்கண் கருணை பார்வை பெற்று, பிறந்த பயனை அடைவோம்.
***
-தி. செல்லப்பா
