தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பூஜைக்கு உதவும் புஷ்பம் எது?

பூஜைக்கு உதவும் புஷ்பம் எது?

பூஜைக்கு உதவும் புஷ்பம் எது?


PUBLISHED ON : ஏப் 03, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 03, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு கோவிலில், நிறைய பக்தர்கள் வந்து போய் கொண்டிருந்தனர். ஒரு சிலர், கோவிலுக்காக எண்ணை, திரி, பழம், தேங்காய் என்று சிலவற்றை கொண்டு வந்தனர்; சிலர், ஒரு ஆழாக்கு அரிசி, ஒரு பிடி பருப்பு இப்படியாக கொண்டு வந்து, அதற்கான கூடைகளில் போட்டு சென்றனர்; எல்லாமே கைங்கர்யம் தான்.

ஒருவர், வேட்டி மடியில் கொஞ்சம் புஷ்பங்களை கொண்டு வந்து, அங்கிருந்த புஷ்பக் கூடையில் போட்டார். இதைப் பார்த்து கொண்டிருந்த பெரியவர் ஒருவர், புஷ்பம் போட்டவரை கூப்பிட்டு, 'இப்போது புஷ்பம் கொண்டு வந்து போட்டாயே... இதை, ஒரு குடலையிலோ, ஒரு இலையிலோ எடுத்து வந்து போட்டிருக்க வேண்டும்; மடியில் கட்டி வருவது பூஜைக்கு உதவாது...' என்றார்.

அதற்கு, அவர், 'அப்படியா... எனக்கு அதெல்லாம் தெரியாது. கோவிலுக்கு புஷ்பம் கொடுத்தால், புண்ணியம் என்றனர். அதனால், இங்கு வரும் போது, அடுத்த வீட்டு காம்பவுண்டு சுவர் பக்கமாக நிறைய புஷ்பம் பூத்திருந்தது; கீழேயும் கொஞ்சம் விழுந்திருந்தது. அவைகளை, அப்படியே எடுத்து மடியில் கட்டி, இங்கு வந்து போட்டேன்...' என்றார்.

'நீ செய்த எதுவுமே புண்ணியத்தை கொடுக்காது; மேலும், நீ செய்ததும் சரியல்ல...' என்றார்

பெரியவர். புஷ்பம் கொண்டு வந்தவர், 'சரி... நான் செய்தது தவறாக இருக்கலாம். சரியான முறையை எனக்கு சொன்னால், அதன்படி செய்கிறேன்; தவறு வராமல் பார்த்துக் கொள் கிறேன்...' என்றார்; பெரிய வரும் சில விதிமுறைகளை சொன்னார்:

சிவலிங்கத்தின் தலையில் புஷ்பம் இல்லாமலிருக்கக் கூடாது; புஷ்பங்களில் சாத்வீகம், ரஜசம், தாமசம், மிச்ரம் என்ற நான்கு வகைகள் உண்டு. வெண்மையான புஷ்பங்கள் சாத்வீகம், சிவந்தவை ரஜசம், கருநிற புஷ்பங்கள் தாமசம், மஞ்சள் வர்ணமுள்ளது மிச்ரம். மூன்று தளங்கள் உள்ளதும், சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணமுள்ளதுமான ஒரு வில்வத்தை, சிவனுக்கு, அர்ப்பணம் செய்தால், மூன்று ஜென்மாவின் குலோத்தாரணம் செய்து, சிவலோகத்தில் கொண்டாடப்படுவான். வில்வ பத்ரம் புதிதாக இருந்தாலும், காய்ந்திருந்தாலும், சிவனுக்கு அர்ச்சிப்

பதால், சகல பாவங்களும் விலகும்.

வில்வ பத்திரத்தை ஒரு முறை அர்ச்சித்தபின், மறுதினம் அதையே தண்ணீரில் கழுவி, மீண்டும் அர்ச்சிக்கலாம்; தோஷமில்லை. சுவர்ண புஷ்பம், மூன்று நாளும்; வில்வம், ஐந்து நாளும்; துளசி, பத்து நாளும் திரும்பத் திரும்ப எடுத்து, பூஜிக்கலாம்; பழசு என்ற தோஷமில்லை.

ஸ்நானம் செய்தபின், அப்படியே புஷ்பம் பறித்து வந்தால், அது, பூஜைக்கு உதவாது. ஈரவேட்டி மாற்றி, காய்ந்த வேட்டி உடுத்தி, நெற்றிக்கிட்டு, வாழை இலை அல்லது பூக்குடலையில் கொண்டு வர வேண்டும். கீழே விழுந்த புஷ்பம், வஸ்திரத்தில், கையில் கொண்டு வந்த புஷ்பம், வாடியது, புழு அரித்தது, கேசம் சேர்ந்தது ஆகிய புஷ்பங்களைத் தள்ள வேண்டும்.

அட்சதையால் விஷ்ணுவையும், துளசியால் விநாயகரையும், அருகினால் தேவியையும், வில்வத்தால் சூரியனையும் பூஜிக்கக் கூடாது. ஊமத்தை, எருக்கு புஷ்பங்கள், விஷ்ணுவுக்கு கூடாது. பூஜைக்குரிய எருக்கு, செண்பகம், புன்னை, நந்தியாவட்டை, பாதரீ, கண்டங்கத்தரி, அரளி, நீலோற்பலம் ஆகிய இந்த எட்டும், அஷ்ட புஷ்பங்கள் எனப்படும். புஷ்பத்தை கிள்ளி, கிள்ளி பூஜை செய்தால் தரித்ரியம் ஏற்படும்.

பல நாமாக்களுக்கு ஒரு முழு புஷ்பம் அர்ச்சிக்கலாம். பத்திரத்தை கிள்ளி அர்ச்சிக்கலாம். வில்வம், துளசியை தளம், தளமாக அர்ச்சிக்க வேண்டும். தாமரை பூவில் சரஸ்வதியும், அரளிப் பூவில் பிரம்மாவும், வன்னியில் அக்னியும்... இப்படி ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு தெய்வம் உள்ளது. இன்னும் நிறைய விதிகள் உண்டு என்றார் அந்த பெரியவர்.

***

ஆன்மிக வினா-விடை!

ஜெப - மந்திர தோஷம், எதனால் ஏற்படுகிறது? இதற்கு பரிகாரமென்ன?

மந்திரங்களைச் சரியாகத் தெரிந்து, பிழையில்லாமல் உச்சரித்தால், தோஷம் ஏற்படாது.

***

- வைரம் ராஜகோபால்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us