PUBLISHED ON : ஜன 03, 2021

கிரகபிரவேசம் செய்யும் வீடுகளில், பால் காய்ச்சிய பிறகே சாப்பிடுவது வழக்கம். ஆனால், பால் காய்ச்சுவதற்கு முதல் நாளே, இனிப்புடன் விருந்து படைத்து, அம்பாளை வழிபடும் வித்தியாசமான நடைமுறை இருப்பது தெரியுமா?
நாக கன்னியின் மகளான செல்வி, தன் தங்கைகளான சந்தனமாரி, காந்தாரியுடன் சிவ பூஜை செய்வதற்காக, குற்றாலத்தில் உள்ள, குற்றாலநாதர் கோவிலுக்கு வந்தாள்.
நாக வடிவம் கொண்ட இவர்களை, நந்திதேவர் தடுத்து விட்டார். எனவே, கோபத்துடன், கொடி மரத்தின் கீழ் அமர்ந்து விட்டனர். குற்றாலநாதர் கோவில் திருவிழா கொடியேற்ற காலங்களில், யாராவது ஒரு இளைஞனை பலி கொள்வது, இவர்களின் வழக்கமாகி விட்டது.
இதனால், கலவரமடைந்த ஊரார், கேரள நம்பூதிரிகளின் உதவியுடன், ஒரு தங்கச் செம்பில் இவர்களின் சக்தியை அடைத்து, செண்பகாதேவி அருவிக்கரையில் புதைத்து விட்டனர்.
செங்கோட்டையை சேர்ந்த ஒருவர், காட்டில் மரம் வெட்ட சென்ற போது, பெரும் மழை பெய்து, செம்பு வெளிப்பட்டது. அதை திறந்து பார்த்த போது, உள்ளிருந்த சக்திகள் வெளிப்பட்டனர்.
அவர்களில் பெரியவளான செல்வி, 'நான் காளியின் அம்சம். இங்கு எனக்கு கோவில் கட்டினால், பெரும் செல்வம் தருவேன்...' என்றாள். அவரும் கோவில் கட்ட, அவள், செண்பக செல்வி என, அழைக்கப்பட்டாள்.
ஒருமுறை, திருநெல்வேலியைச் சேர்ந்த, விஸ்வநாத பிள்ளை, தன் வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு புனித நீர் எடுக்க, குற்றாலம் வந்தார். செண்பக அருவியில் நீர் பிடித்து திரும்புகையில், தன்னை வணங்காமல் செல்வதைக் கண்ட செல்வியம்மன், அவரை சோதிக்க எண்ணினாள்.
பட்டுப்பாவாடை உடுத்தி, 10 வயது சிறுமி வடிவில், அவரை வழிமறித்து, தன்னையும் திருநெல்வேலிக்கு அழைத்துச் செல்லக் கூறினாள்.
வீட்டுக்கு சென்றதும், 'எனக்கு, புது வீட்டில் விருந்து வையுங்கள்...' என்றாள்.
'பால் காய்ச்சாத வீட்டில், எச்சில் படுத்தக்கூடாது...' என்று, விஸ்வநாத பிள்ளையின் மனைவி, காமாட்சி கூறினார்.
'சாப்பிட்டால், இங்கு தான் சாப்பிடுவேன்...' என, அடம் பிடித்தாள் சிறுமி.
'குழந்தை தானே...' என பிள்ளையும் சம்மதிக்க, தலை வாழை இலையில் விருந்து பரிமாறப்பட்டது.
'எல்லாம் தந்தாயே... சர்க்கரை பொங்கல் இல்லையா...' என்றாள், சிறுமி.
'பால் காய்ச்சிய பின்தானே, புது வீட்டில் பொங்கல் வைக்க முடியும்...' என்றார், காமாட்சி.
'பரவாயில்லை. ஒரு வெல்லமாவது குழந்தைக்கு கொடு...' என்றார், பிள்ளை.
வெல்லத்துடன் வந்து பார்த்த போது, குழந்தையைக் காணவில்லை.
அப்போது, 'நான் செல்வியம்மன். எனக்கு, தாமிரபரணி கரையில், கோவில் கட்டி வழி படு. மக்களுக்கு நல்லது நடக்கும்...' என, அசரீரி ஒலித்தது.
அதன்படி சிந்துபூந்துறை என்னுமிடத்தில், கோவில் எழுந்தது. பிறகு, தென் மாவட்டம் முழுவதும், எட்டு கைகளுடன் கூடிய, வடக்கு வாசல் செல்வி கோவில்களும், சந்தனமாரி, காந்தாரி கோவில்களும் கட்டப்பட்டன.
'கிரகப்பிரவேசத்துக்கு முன், வடக்குவாசல் செல்வி அம்மனுக்கு வீட்டில் படையலிட்டு, அதை, 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பிரசாதமாக கொடுத்தால், அந்த வீட்டில் செல்வம் நிரந்தரமாக தங்கும்...' என்கின்றனர்.
தி. செல்லப்பா