
'ரிஸ்க்' எடுத்ததால் வந்த வினை!
சமீபத்தில், உறவினர் பெண்ணுக்கு திருமணம், இனிதே நடந்து முடிந்தது. திருமண விழாவின் போதே, வீடியோ மற்றும் புகைப்படக் கலைஞர்களால், பெண்ணும், மாப்பிள்ளையும் படாதபாடு பட்டனர்.
'இப்படி நில்லுங்க, அப்படி நில்லுங்க... தோள் மேலே கையப் போடுங்க, கன்னத்தோடு கன்னம் வையுங்க...' என்று, 'கமென்ட்' செய்து திண்டாட வைத்தனர்.
திருமண விழா முடிந்து இரண்டு நாட்களுக்கு பின், இயற்கை சூழலில், 'போட்டோ ஷூட்' எடுப்பதாக கூறி, பெண் மற்றும் மாப்பிள்ளையுடன், நான்கைந்து இளைஞர், இளைஞிகளையும் அழைத்து சென்றனர். தோட்டம், வயல்களுக்கு மத்தியில் நிற்க வைத்து, புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.
அதன்பிறகு, மலைப்பாங்கான இடத்திற்கு அழைத்து சென்று, பாறைகளுக்கு நடுவிலும், மரங்கள், செடி, கொடிகளின் அருகில் நிற்க வைத்து, புகைப்படம் எடுத்தனர்.
அப்போது, பெண்ணின் உடம்பில் அரிப்பு ஏற்பட்டது. அட்டைப் பூச்சியோ, கம்பளிப் பூச்சியோ, விஷப்பூச்சி கடித்தோ அல்லது உடம்பில் அரிப்பை உண்டாக்கும் செடி, கொடியோ பட்டு விட்டது போலிருக்கிறது.
அரிப்பு தாங்க முடியாமல் உடம்பை சொறிய, தடிப்பு தடிப்பானது. அதன் பின், அலறியடித்து, மருத்துவமனைக்கு அழைத்து சென்று மாத்திரை, 'ஆயின்மென்ட்' வாங்கி வந்தனர்.
'ரிஸ்க்' எடுத்ததால், வந்தது வினை. ஒரு வாரமாக மிகவும் அவதிப்பட்டாள், புதுமணப்பெண். விசேஷங்களின்போது, 'போட்டோ ஷூட்' எடுப்பவர்கள் கவனமாக இல்லாவிட்டால், உயிருக்கு ஆபத்து கூட ஏற்படும், உஷார்!
- ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு.
புகைப்படக் கலையை வாழ வைக்கலாமே!
என் தோழியின் உறவினர், நல்ல வசதியானவர். ஆண்டுக்கு ஒருமுறை, அவரது உறவுக்கார மற்றும் நண்பர்களின் குடும்பத்தினரை, தன் சொந்த செலவில், பேருந்தில் சுற்றுலா அழைத்து சென்று வருவதை, வழக்கமாக வைத்திருக்கிறார்.
அவ்வாறு செல்லும் போது, புகைப்படக் கலைஞரையும் அழைத்துச் செல்வார்.
'சுற்றுலா இடங்களில், யாரும் மொபைல் போனில் படம் எடுக்கவே வேண்டாம்...' என்று கூறிவிட்டு, அந்த புகைப்படக் கலைஞரை வைத்தே, அவரவர் விரும்பும் வகையில், படம் எடுக்கச் செய்வார்.
இதற்கான காரணம் கேட்டதற்கு, 'மொபைல் போனில் படம் எடுத்தால், எடுப்பவர் அந்த படத்தில் இல்லாமல் போய்விடும் வாய்ப்பு உள்ளது. 'செல்பி' எடுத்தால், நினைத்தவாறு காட்சிகள் சரிவர அமையாது.
'அதுமட்டுமன்றி, 'செல்பி' எடுக்கும்போது செய்யும் அஷ்டகோணலான முக மற்றும் உடல் சேஷ்டைகள், பார்க்க சகிப்பதில்லை. இவற்றைவிட மிக முக்கியமாக, ஆபத்தான இடங்களில், 'செல்பி' எடுக்கும்போது, விபத்து மற்றும் உயிர்பலி போன்றவை நிகழவும் வாய்ப்பிருக்கிறது.
'அதனால் தான், சுற்றுலா வந்ததற்கான முழு மகிழ்வை, பூரணமாக அனுபவிக்கவும், அனைவரையும் இயல்பாக படம் பிடிக்கவும், அத்தோடு, புகைப்படத் தொழிலையே நம்பியிருக்கும் தொழிலாளர்களுக்கு உதவிடவும், எங்களோடு புகைப்படக் கலைஞர்களை அழைத்துப் போகிறோம்...' என்றார்.
நாமும், குடும்ப சுற்றுலா செல்லும் போது, 'செல்பி'க்கு விடை கொடுத்து, புகைப்படக் கலையை வாழ வைக்கலாமே!
ஆர்.பிரேமா, மதுரை.-
கீரைக்கார பெண்மணியின் சமயோஜிதம்!
எங்கள் தெருவில், வழக்கமாக காலை வேளையில் ஒரு பெண்மணி, பலவகை கீரைகளை எடுத்து வந்து, நியாயமான விலையிலேயே, வீடு வீடாக விற்பனை செய்வார்.
சில சமயம், நமக்கு தேவையான கீரையை முதல்நாளே கூறிவிட்டால், எப்படியாவது எடுத்து வந்து கொடுத்து விடுவார். அப்போதும், கூடுதல் தொகையை கேட்க மாட்டார்.
ஒருநாள் மாலை, அவர்கள் பகுதி கடைவீதியில் அவரை பார்த்தேன்.
தள்ளுவண்டி வைத்து, கீரை வடை, கீரை போண்டா, கீரை பக்கோடா, கீரை ராகி அடை மற்றும் கீரை சூப் என, பரபரப்பாக வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.
ஆச்சர்யப்பட்டு, அவரிடமே இதுபற்றி கேட்டேன்.
'சில நாட்களில், சரியாக கீரை வியாபாரம் ஆகாமல், நிறைய மீந்து போய், அசலே தேறாமல் போய்விடும். அப்போது தான், இந்த கடையை வைப்பதென முடிவெடுத்தேன். இப்போது, நஷ்டமும் ஏற்படுவதில்லை; கூடுதல் வருமானமும் கிடைக்கிறது...' என்றார்.
எந்த தொழிலிலும், நஷ்டம் என்று மிரண்டு, துவண்டு விடாமல், மாற்றி யோசித்தால் வெற்றி பெறலாம் என்பதற்கு, அந்த கீரைக்கார பெண்மணியே உதாரணம்!
- வி.சங்கர், சென்னை.