sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

பேத்தி வளர்ப்பு!

/

பேத்தி வளர்ப்பு!

பேத்தி வளர்ப்பு!

பேத்தி வளர்ப்பு!


PUBLISHED ON : ஆக 21, 2016

Google News

PUBLISHED ON : ஆக 21, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகளின் கைகளில், நான்கு வயது பேத்தி, ஜன்னத்துல் பிர்தௌஸ் இருந்தாள்.

பேத்தி ஜன்னத்துக்கு சீன பொம்மை போல் முகமும், ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என சந்தேகம் கொள்ளும் உடல் அமைப்பு. அடர்த்தி குறைந்த தலைகேசம்; ரோஜா நிறம்; வயதுக்கு மீறிய உயரம்.

''அத்தா... என் வீட்டுக்காரர் ரெண்டு வருஷ ஒப்பந்தத்துல மெக்சிகோ போறாரு; எனக்கு மின் வாரியத்தில் உதவி பொறியாளராக வேலை கிடைச்சுருக்கு. ஜன்னத்தை நீங்களும், அம்மாவும் தான் வளர்க்கணும். உங்க மருமகன் மெக்சிகோவுல இருந்து திரும்பி வந்ததும் பாப்பாவ கூப்பிட்டுக்கிறோம்,'' என்றாள் மகள், ஜாஸ்மின்.

''பராமரிப்பு செலவ மாதா மாதம் தந்திடுறோம்,'' என்றார் மருமகன்.

''அதெல்லாம் வேணாம் மாப்பிள்ள...'' என்று கூறி, மகளிடம், ''பாப்பா எங்களோட அழாம, ஆர்ப்பாட்டம் செய்யாம இருந்துப்பாளா...'' என்றேன் சந்தேகத்துடன்!

''அதெல்லாம் இருந்துப்பா... ஏற்கனவே அம்மாகிட்ட அவ ரொம்ப நெருக்கம்; பாப்பா சேட்டை செஞ்சா நான் திட்டுவேன்; அடிப்பேன். ஆனா, அம்மா அவள திட்டவோ, கோபப்படவோ மாட்டா. ரெண்டு பேருக்கும் இடையே பயங்கர,

அன்டர்ஸ்டாண்டிங்...'' என்றாள், ஜாஸ்மின்

'ஆம்' என்பது போல் தலையாட்டினாள், மனைவி.

ஐம்பது, அறுபது, 'செட்' ஆடைகளும், ஒரு சுமை பொம்மைகளும் அடங்கிய பைகளை வீட்டிற்குள் எடுத்து வைத்தாள், ஜாஸ்மின்.

சாக்லேட்டுகள், பழச்சாறுகள், பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் ஜெல்லி மிட்டாய்கள் என, மகளுக்காக வாங்கி குவித்திருந்தாள்.

''ஒரே நாள்ல எல்லாத்தையும் தராம, கொஞ்ச கொஞ்சமா குடுங்கத்தா...''

''சரிம்மா.''

''மாமா... என் மக ரொம்ப சுட்டித்தனம் செய்வா; அடிக்காம பாத்துக்கங்க... பத்திரமா பாத்துக்குவீங்கங்கிற நம்பிக்கையில தான், இவள உங்கிட்ட விட்டுட்டு போறேன். எங்க ரெண்டு பேரோட உயிரும், எதிர்காலமும் இவதான்,'' என்றார், மாப்பிள்ளை கண்கலங்க!

மகளும், மருமகனும் பிரியா விடை பெற்று கிளம்பி போன அன்றிரவே, பேத்தி ஜன்னத்தின் அடாவடி அரங்கேற ஆரம்பித்தது. எனக்கும், என் மனைவிக்கும் இடையே படுத்து, இடது காலை பாட்டி மீதும், வலது காலை என் மீதும் போட்டபடி துாங்கினாள்.

காலை —

படுக்கையிலேயே சிறுநீர் கழித்திருந்தாள், ஜன்னத்துல்!

''பாப்பா... ஒண்ணுக்கு வந்தா, பாட்டியை எழுப்பி, பாத்ரூம்ல போய் தான் உச்சா போகணும்,'' என்று அறிவுரை கூறியபடி, உள்ளாடைகளை மாற்றி விட்டாள், மனைவி.

சமர்த்தாக தலையாட்டினாலும், அவளுக்கு சாப்பாடு ஊட்டுவதற்குள் பிரம்ம பிரயத்தனம் பட்டாள், மனைவி.

மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டோம்; மகன் மேற்படிப்புக்காக வெளியூர் விடுதியில் தங்கி படிக்கிறான். நானும், என் மனைவியும் தனித்து விடப்பட்ட இந்நிலையில், பேத்தி வந்து சேர்ந்திருக்கிறாள். ஒவ்வொரு நாளும் பேத்தி வளர்ப்பில் புதுப் புது அனுபவங்கள் கிடைத்தன.

நல்லி எலும்பிற்குள் இருக்கும் சதை அவளுக்கு ரொம்ப பிடிக்கும் என்பதால், நல்லி எலும்புகளை வாங்கி, வேக வைத்து, எலும்பை உடைத்து, சதை பற்றை எடுத்து அவளுக்கு ஊட்டி விடுவாள், மனைவி.

முதல் நாளிலேயே பக்கத்து வீட்டு ஏழு வயது சிறுவனோடு நட்பானாள். இருவரும் சேர்ந்து எவ்வளவு நேரம் விளையாடுகின்றனரோ அவ்வளவு துாரம் சண்டையும் போட்டனர். அந்தச் சிறுவனை விளையாட்டு பொம்மையைப் போல் நினைத்து, அவள் விளையாட விரும்பும் போதெல்லாம் அவனை கூட்டி வரச் சொல்லி அடம்பிடிப்பாள்.

அதேபோன்று, அவளுக்கு ஒப்பனை செய்து கொள்வதில் அலாதி விருப்பம். தனக்கு ஒப்பனை செய்து முடித்தவுடன், எனக்கு ஒப்பனை செய்ய ஆரம்பிப்பாள். தலைக்கேசத்தை சீவி, சோட்டி போட்டு, முகத்தில் பவுடர் அப்பி, உதட்டில் லிப்ஸ்டிக் போட்டு ஆர்ப்பாட்டம் செய்வாள். அவள் எனக்கு தலைசீவும் போது, சிறு வயதில் என் அம்மா எனக்கு தலை வாரிய ஞாபகம் கிளர்ந்தெழும்.

ஆனாலும், அவள் எங்கள் வீட்டுக்கு வந்த முதல் நாள் காலையிலேயே எனக்கும், அவளுக்கும் முதலாம், 'ரிமோட்' போர் ஆரம்பித்து விட்டது. நானோ கிரிக்கெட், நேஷனல் ஜியாகிராபிக் சேனல், நகைச்சுவை சேனல்களை பார்ப்பேன். அவளோ கார்ட்டூன் சேனல்கள் பார்ப்பாள். குறிப்பாக, டோரிமான் அவளுக்கு ரொம்ப பிடிக்கும். லஞ்சமாக, ஐஸ்கிரீமோ, விளையாட்டு சாமான்களோ தருவதாக, 'ஆபர்' செய்தாலும், நான் கிரிக்கெட் பார்க்க ஒத்துக் கொள்ள மாட்டாள்.

என் மகளை பள்ளியில் சேர்க்கக் கூட நான் இவ்வளவு சிரமப்பட்டதில்லை. கல்வி ஆண்டின் இடையில் வந்ததால், ஜன்னத்தை பள்ளியில் சேர்க்க மிகவும் சிரமப்பட்டோம். பெங்களூரில் படித்ததால், கன்னடம், ஹிந்தி நன்கு பேசுவாள். தமிழில் பேசவோ, எழுதவோ வராது.

ஒரு வழியாக பள்ளியில் சேர்த்தோம்; காலை, 6:00 மணிக்கு எழும் என் மனைவி, ஜன்னத்தை கெஞ்சி கொஞ்சி பல்துலக்க செய்து, பின், காலைக் கடன் கழிக்க வைத்து, குளிப்பாட்டி, தலை சீவி, சீருடை அணிவித்து, காலை உணவை வலுக்கட்டாயமாக ஊட்டி, பள்ளி வேன் வந்தவுடன் ஓட்டமாக ஓடி, வேனுக்குள் ஏற்றிய பிறகு தான் அவளுக்கு ஆசுவாச மூச்சு வரும்.

வாகனத்துக்குள் இருக்கும் பெரிய பிள்ளைகள் ஜன்னத்தை அன்பாய் வரவேற்று, ஜன்னலோர சீட்டில் அமர வைப்பர். அவர்கள், அவளுக்கு வைத்த செல்லப் பெயர், காபித் துாள்.

மாலையில் வீடு திரும்பியதும், ஜன்னத்திற்கு ஆடை மாற்றி, கேக் ஊட்டி, டியூஷனுக்கு அனுப்புவாள், மனைவி. டியூஷனிலிருந்து வந்ததும், மீண்டும் கார்ட்டூன் சேனல் பார்க்க ஆரம்பித்து விடுவாள், ஜன்னத்.

கார்ட்டூன் பார்க்காத நேரங்களில், வளர்ப்பு நாய் மூசியை சீண்டி பார்ப்பாள். மூசிக்கும், ஜன்னத்தின் மேல் தனி பாசம்; அவள் மேல் விழுந்து புரண்டு விளையாடும்.

மகளும், மருமகனும் ஸ்கைப்பில் ஜன்னத்துடன் பேச துடிப்பர்; ஆனால், பேசாமல் ஓடுவாள். 'பொம்மை, சாக்லேட், டிரஸ்ல்லாம் வாங்கி வைத்திருக்கின்றனர்...' என்று ஆசை வார்த்தைகளை சொல்லி, பெற்றோருடன் அவளை பேச வைப்பாள், என் மனைவி. சில சமயம் அதையும் மீறி, 'நான் பிசி பேச முடியாது...' என்று கூறி, ஓடி விடுவாள்.

அவள் செய்யும் சேட்டைகளை கண்டித்தால், 'தாத்தாவை பிடிக்கவே பிடிக்காது; பாட்டியை தான் பிடிக்கும்...' என்பாள். பாட்டி கண்டிக்கும் போது, 'பாட்டியை பிடிக்காது; தாத்தாவை தான் பிடிக்கும்...' என்பாள்.

அப்பகுதி மக்களுடன் சரளமாய் பழகுவாள். 'அங்கிள்... எப்படியிருக்கீங்க... ஆன்ட்டி வாக்கிங் போறீங்களா... நானும் வரட்டுமா...' என, பெரிய மனுஷி போல் விசாரிப்பாள்.

தினமும் அப்பகுதியில் பூ விற்க வரும் பூக்கார அம்மாவை, பிரண்டு பிடித்து விட்டாள். அந்தம்மா தினமும் ஒரு முழம் பூவை அவளுக்கு இலவசமாய் பரிசளிப்பாள்.

ஒருநாள், 'ஜாஸ்மினை இன்னொரு பிள்ளை பெற்றுக் கொள்ள சொல்லி, ஜன்னத்தை நாமளே வளர்ப்போமா...' என்று என் மனைவியிடம் கேட்டேன்.

'ஏன் பேராசைப்படுறீங்க... இரவல் பொருளை சொந்தமாக்க நினைக்கக் கூடாது. ஜன்னத்தை அவங்க எப்ப வந்து கேட்டாலும், மறுக்காம குடுத்துடுறது தான் முறை....' என்றாள்.

நான் மறுகினேன்; வானத்து தேவதை, எங்கள் வீட்டுக்கு வந்து தினந்தோறும் நாட்டிய நாடகம் அரங்கேற்றினாள். தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் ஜன்னத்தின் அன்பில் நனைந்து, திக்கிமுக்காடி போனோம், நானும், என் மனைவியும்!

காலை 10மணி —

பேத்தியை அழைத்துப் போக மகளும், மருமகனும் வீட்டிற்கு வந்திருந்தனர்.

அம்மாவை பார்த்ததும், ஓடிச்சென்று கட்டி அணைத்து, ''ஏன்ம்மா... என்னை விட்டுட்டு போனீங்க... உங்களுக்கு என் மேல பாசமே இல்லையா; ஊருக்கு போகும் போது என்னையும் கூட்டிட்டு போங்க...'' என்று அழுதாள் ஜன்னத்.

பேத்தி பேசியதைக் கேட்டதும், அர்த்த புஷ்டியாய் என்னைப் பார்த்தாள், மனைவி.

''பாப்பா... இனி நீ எங்களோடயே இருக்கலாம்; அத்தா மெக்சிகோவிலிருந்து வந்திட்டாரு; நானும் சென்னைக்கு மாற்றலாகி வந்துட்டேன். உன்னை கூட்டிட்டு போகதான் வந்திருக்கிறோம்,'' என்றாள், மகள்.

''ஏம்மா ஜாஸ்மின்... இன்னும் ரெண்டு, மூணு வருஷம் ஜன்னத் எங்ககிட்டயே இருக்கட்டுமே...'' என்றேன்.

''இல்லத்தா... அவளை பிரிஞ்சு இந்த ரெண்டு வருஷம் நானும், என் புருஷனும் நரக வாழ்க்கை வாழ்ந்துட்டோம்; இனி, ஒரு நொடி கூட பிரிய முடியாது,'' என்றாள், பட்டென்று!

எங்களின் இடையே படுத்த ஜன்னத், இப்போது அவள் அம்மாவின் நெஞ்சில் படுத்து, ''அத்தாவை ஏழு வானம் நிறைய பிடிக்கும்; அம்மாவை வானம் நிறைய பிடிக்கும்; பாட்டியை கொஞ்சம் பிடிக்கும்; தாத்தாவை கொஞ்சமே கொஞ்சம் பிடிக்கும்; மாமாவை பிடிக்கவே பிடிக்காது,'' என, புதிதாய் அபிநயித்தாள்.

மாலையில் ஊருக்கு கிளம்பிய போது, இயந்திர கதியாய் டாட்டா காட்டினாள், ஜன்னத்.

கண்கள் கலங்கியபடி, ''பாப்பா... தாத்தாவுக்கு ஒரு முத்தம் கொடுத்துட்டு போ,'' என்றேன்.

அவசர கதியாய் என் கன்னத்தில் முத்தமிட்டாள், ஜன்னத்.

என் மனைவி அழுதபடி ஜன்னத்தின் முகத்தில் இரு கை வைத்து நெட்டி முறித்து, ''அமோகமா இரு செல்லக்குட்டி; எங்களை மறந்திராத...'' என்றாள்.

பெற்றோருடன் ஜன்னத் கிளம்பி போன பின், எங்களது நெஞ்சத்திலும், வீட்டிலும் ஒரே வெறுமை.

பேத்தி எங்களுடன் இருந்த இரண்டு ஆண்டுகள், ஒரு நிலா காலம்; கோடி ரூபாய் கொட்டி கொடுத்தாலும், அவள் பொழிந்த அன்புக்கு ஈடாகாது.

ஒரு ஆணுக்கு, அவன் தாயிடமிருந்து கிடைக்கும் தாய்ப்பாசத்தை விட, மனைவியிடமிருந்து கிடைக்கும் காமம் கலந்த காதலை விட, மகளிடமிருந்து கிடைக்கும் அன்பை விட, பேத்தியிடமிருந்து கிடைக்கும் நேசமும், பிரியமும் ரொம்ப அதிகம்.

வாழ்க்கையில் வாலிபத்தை தொலைத்து, அனுபவ கல்வி பெற்று, முழுமையான மனிதனான பின், பரிபூரணமாய் அன்பை பெறவும், அன்பை பொழியவும், ஒரு ஆண், தன் பேரன், பேத்திகளிடமிருந்தே கற்றுக் கொள்கிறான். தாத்தாக்களுக்கு ஆணாதிக்க மனோபாவம் அறவே கிடையாது. மேலும், எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பை பொழியும், வயது இது!

இதோ, என்னைப் போன்று எத்தனையோ தாத்தாக்கள், தங்கள் பேத்தியின் அன்பு மழையில் நனைந்த அனுபவங்களை அசை போட்டபடி வாழ்நாளை கடத்துகின்றனரோ!

இந்த பூமி உருண்டை இயங்க உதவும் மசகு எண்ணெயாய் உலகம் உள்ளவும் தாத்தா, பேத்தி பாசம் இருக்கும்!

ஆர்னிகா நாசர்






      Dinamalar
      Follow us