
இப்போதெல்லாம் முன் போல், தெம்பான உடல் நலத்துடன் இல்லை, பரமேஸ்வரன். அடிக்கடி நெஞ்சு வலித்தது. தான் அதிக நாள் உயிருடன் இருக்க போவதில்லை என, அவருக்கு தோன்ற துவங்கியது. படுக்கையில் படுத்தவாறு அண்ணாந்து விட்டத்தை வெறித்த அவரை, சமையல்காரர், ஜம்புலிங்கம், ''அய்யா!'' என்று மெதுவாய் அழைத்தார்.
திடுக்கிட்ட பரமேஸ்வரன், ''சொல்லு ஜம்பு!'' என்றார்.
''ராத்திரி என்ன சமையல் பண்ணட்டும்?''
''மிளகு ரசம் போதும்... மதியம் பண்ணின, பூசணிக்காய் பொரியல் இருக்குல்ல, அது போதும். வேற எதுவும் வேணாம்.''
''சரிங்கய்யா,'' என்ற ஜம்புலிங்கம், சற்றே தயங்கி நின்றார்.
''இன்னும் ஏதாச்சும் சொல்லணுமா?''
''மருமக இருக்குற எடம் தெரிஞ்சுதாய்யா?''
''இன்னைக்கு, 'தினமலர்' பத்திரிகைல விளம்பரம் குடுத்திருக்கேன். பதில் வருதான்னு பார்ப்போம்.''
அறையை விட்டு ஜம்புலிங்கம் வெளியேற, பரமேஸ்வரனின் மனதில், பழைய நினைவுகள் கிளர்ந்தன.
அவருடைய ஒரே மகன் விமலநாதன், அவரை விட்டு பிரிந்து, 22 ஆண்டு ஆகிவிட்டது. அவன் இறந்தோ, 20 ஆண்டு கடந்து விட்டது.
கல்லுாரியில் படித்து முடித்ததும், அவர் நிர்வகித்து வந்த ஓட்டல் கல்லாவில் அமர்ந்து, தன்னை விடுவிக்க வேண்டும் என்று பெரிதும் விரும்பினார். அவருக்கு வந்த வருமானமோ ஆயிரக்கணக்கில். எனினும், கல்வி அவசியம் என்பதாலேயே, விமலநாதனை பட்டம் பெற படிக்க வைத்தார்.
அவன், கல்லுாரியில் படிக்கும்போதே வேற்று ஜாதிகார பெண்ணை காதலித்து, அதை அவரிடம் சொல்லவும் செய்தான்.
தாய் - தந்தை இல்லாமல் அத்தையின் வளர்ப்பில் இருந்த ஏழை பெண்;
அதிகம் படிக்காதவள்.
நண்பனின் வீட்டில், பணி பெண்ணான அத்தைக்கு, உதவியாக வேலை செய்தவள். ஒரு ஆசிரியர் மூலம் தனிப்பட்ட படிப்பின் பொருட்டு அவன், தன் நண்பனின் வீட்டுக்கு தினமும் போவது வழக்கம். அப்போது ஏற்பட்ட பழக்கம்.
பேரழகியாக இருந்தாள், அவள். அப்பாவின் ஒப்புதல் கிடைக்காது என்பது தெரியும். ஆனால், காதலை அவனால் ஒதுக்க முடியவில்லை.
விமலநாதனுக்கு, 10 வயது ஆகும் முன்பே, பரமேஸ்வரனின் மனைவி இறந்து போனாள். அவர், மறுமணம் செய்து கொள்ளவில்லை.
வேற்று இனத்தில் திருமணம் செய்து கொண்டனர் என்பதற்காக, பெற்ற மக்களையே கொல்ல தயாராகும் அளவுக்கு மனிதர்கள் இடையே ஜாதி வெறி தலைவிரித்தாடும் தமிழகத்தில், 22 ஆண்டுகளுக்கு முன், அவர் ஆட்சேபித்ததில் வியப்பேதும் இல்லை. ஆனால், விமலநாதன் மிகவும் பிடிவாதமாக இருந்தான்.
அந்த பெண்ணை மணந்தால், சொந்த சம்பாத்திய சொத்துகளில் சல்லிக்காசு கூட, அவனுக்கு கிடைக்காது என்று வழக்கமாய் தகப்பன்மார்கள் வீசும் ஆயுதத்தை தான், அவரும் வீசி பார்த்தார். அவன் எதற்கும் மசியவில்லை. 'அப்படியானால், நீ இங்கிருந்து போய்விடு...' என்று வெளிப்படையாகவே சொல்லிவிட, அவனும், ரோஷத்துடன் கிளம்பி விட்டான்.
இரண்டு மாதங்கள் சென்றதும், ஒரு தொழிற்சாலையில், அவனுக்கு எழுத்தர் வேலை கிடைத்தது; சொற்ப சம்பளம். இந்த தகவல், பின்னர் அவருக்கு கிடைத்தது.
திருமண அழைப்பிதழில், மரியாதை நிமித்தம், அவரின் பெயரை குறிப்பிட்டிருந்தான். அவரை அழைக்க வந்தபோது, கதவு திறக்காமல், ஜன்னல் வழியாக எட்டி பார்த்து, 'என்னடா... எதுக்கு வந்தே?' என்றார், கடுப்பாக.
திருமண அழைப்பிதழை நீட்டியதும், அதை பார்க்காமலேயே கிழித்து, அவன் மீது எறிந்தார். 'போடா நன்றி கெட்ட நாயே...' என்று கத்தினார்.
சற்று பொறுத்து, அவன் போய் விட்டதை உறுதி செய்த பின், கிழித்த அழைப்பிதழ் துணுக்குகளை சேர்த்து படித்தார். அதில், தன் பெயர் இருந்தது, எரிச்சலை கிளப்பியது. 'காரியவாதி... காக்கா பிடிக்க பார்க்கிறான்...' என்று தோன்றியது. அழைப்பிதழ் துணுக்குகளை குப்பையில் போட்டு, அவனை சபிக்கலானார்.
அதன் பின், மிக எளிய முறையில், அவளை மணம் புரிந்து கொண்டான். ஓர் ஆண்டு கழித்து, கர்ப்பிணியான அப்பெண், அவர் வீட்டுக்கு வந்தாள்.
முதலில், தம் வீட்டு வாசலில் அவளை கண்டதும், யாசகம் கேட்க வந்த ஏழை பெண் என்று தான் நினைத்தார். ஆனால், அவர் பேசும் முன், 'அய்யா... நான் உங்க மருமக... உங்களோட பேசணும்...' என்று கெஞ்சலாய் கூறினாள்.
'என்னது... மருமகளா... எனக்கு மகனே கிடையாது. என்னிக்கு இந்த வீட்டை விட்டு போனானோ, அன்னைக்கே அவனை தலை முழுகிட்டேன். போ இங்கிருந்து...' என்றார்.
'அய்யா... ஒரு நிமிஷம்...' என்று, அவள் கெஞ்சியதை காதில் வாங்காமல், கதவை அடித்து சாத்தி போய் விட்டார்.
அதன்பின், சில நாட்கள் கழித்து, அவளிடமிருந்து ஒரு கடிதம் வந்தது, அவருக்கு.அதில்:
அன்புள்ள மாமா...
வணக்கம். மாமான்னு உங்களை கூப்பிடுறது உங்களுக்கு பிடிக்காதுன்னு எனக்கு தெரியும். உங்களுக்கு பிடிக்காட்டியும், நான் உங்க மருமக தானே... உங்க மகன், காலமாகி நாலு மாசம் ஆயிடுச்சு... சாலை விபத்து ஏற்பட்டு, மரணப் படுக்கையில இருந்தப்போ, உங்களிடம் சொல்லக் கூடாதுன்னு, என்கிட்ட சத்தியம் வாங்கிட்டாரு...
அவரோட டயரியிலேர்ந்து உங்க விலாசத்தை தெரிஞ்சு, அன்னைக்கு உங்களை தேடி வந்தது, பண உதவிக்காக தான். அதை சொல்ல, நான் வெட்கப்படலே... பசி வந்துச்சுன்னா பத்தும் பறந்திடும்ன்னு சொல்லுவாங்க. எனக்கும் அப்படி தான் ஆயிடுச்சு. நான் சொல்ல வந்ததை கேட்க, நீங்க தயாராயில்ல... மூஞ்சியில அடிக்காத குறையா கதவை சாத்தி உள்ளே போயிட்டீங்க...
உங்க மகன் செஞ்சது தப்பாவே இருந்தாலும், மன்னிக்கலாம்ல... அவர் சார்பா நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். அன்னைக்கு, என்னை நேர்ல பார்த்ததால, நான் கர்ப்பமா இருக்கறதை தெரிஞ்சுகிட்டிருப்பீங்க... ஏதாச்சும் பண உதவி பண்ணினீங்கன்னா நல்லா இருக்கும்.
- அவள் எழுதியிருந்த கடிதத்தின் முடிவில், முகவரியையும் எழுதியிருந்தாள்.
விமலநாதனின் மரணம் பற்றிய வாக்கியத்தை படித்ததும், அவரது சதை ஆடத்தான் செய்தது. அடக்க முடியாமல், குலுங்கி குலுங்கி அழுதார். ஆனால், அந்த பெண் மீது அவருக்கிருந்த எரிச்சல், துளியும் குறையவில்லை. மாறாக, அவளால் தான் எல்லாம் என்று எண்ணியதில், ஆத்திரம் மேலும் தீவிரமாயிற்று. எக்காரணத்தை முன்னிட்டும், அவளை மன்னிக்க தயாராக இல்லை. முகவரியை மனதில் வாங்காமல், கடிதத்தை சுக்கலாய் கிழித்தெறிந்தார்.
காலம் செல்ல செல்ல, வயோதிகத்தின் தளர்வாலும், அக்கம் பக்கத்து கலப்பு மண சேதிகள், அவை சார்ந்த கொலைகள்... அவற்றை கண்டித்து, நாளேடுகளில் வந்த கட்டுரைகளின் தாக்கத்தாலும், சுய பரிசீலனைக்கு தம்மை தாமே ஆட்படுத்திக் கொண்டார். அதன் விளைவாக, சிறிது சிறிதாக மன மாற்றத்துக்கு ஆளானார்.
ஒரே மகனிடம், அவ்வளவு கல் மனசோடு தான் நடந்து கொண்டிருக்கக் கூடாது என்று, கழிவிரக்கம் ஏற்பட்டது.
மகனின் மகனுக்கோ அல்லது மகளுக்கோ, 20 வயதுக்கு மேல் இருக்கும் என்று கணக்கு போட்டு, உள்ளூர ஏக்கமடைந்தார். மகனின் வாரிசை காணத் துடிக்கலானார். மருமகளின் கடிதத்தில் இருந்த முகவரியை மனதில் முற்றாக வாங்கிக் கொள்ளாவிட்டாலும், திருவல்லிக்கேணி எனும் சொல்லை கவனித்திருந்தார்.
காரில், திருவல்லிக்கேணியில் சுற்றத் துவங்கினார். பயன் ஒன்றும் இல்லை. அதன் பின்னரே, தன் மகனை மணந்த பெண்ணுக்காக, அவனின் பெயருடன், தன் பெயர், தொழில், வீட்டு முகவரி, தொலைபேசி விபரங்களை அளித்து, தன்னை சந்திக்குமாறு, நாளிதழில் விளம்பரம் செய்தார்.
ஒரு வாரம் கழித்து, அவரது இல்லம் தேடி வந்தாள், ஒரு பெண். கதவு திறந்தவர், திகைத்து போனார். அழகே உருவான அந்த பெண், தன் பேத்தி என்பதை, அவள் சொல்லாமலே உணர்ந்தார்.
விமலநாதனுக்கு பெண் வேடம் போட்டது போன்ற தோற்றம், அவரை நெகிழ்த்தியது. கண்கள் கலங்கின. இழந்த சொர்க்கம் அவருக்கு புரிந்தது.
''வணக்கம்!''
''வணக்கம்மா... நீ... நீ!''
''நான் மிஸ்டர் விமலநாதனின் மகள்.''
''உ... உள்ளே வாம்மா... வா!''
அவளை, வாரி எடுத்துக் கொள்ள, ஒரு துடிப்பு கிளர்ந்தது. ஆனால், பண்பாடு தடுத்தது. 20 வயது கடந்த பெண்ணாகிய அவளை தொட துடித்த கையை, இழுத்துக் கொண்டார்.
''உக்காரும்மா!''
அவர் காட்டிய சோபாவில் உட்கார்ந்தாள். முகத்தில் புன்னகை இல்லை; இறுகியிருந்தது.
''உங்க விளம்பரம் பார்த்தோம்!''
''ரொம்ப சந்தோஷம்மா!''
''ஜம்புலிங்கம்... ரெண்டு காபி எடுத்து வாப்பா!''
''காபியெல்லாம் வேணாம்... என் அம்மா, போக வேண்டாம்ன்னு சொன்னாங்க... நான் தான் சட்டை பண்ணாம, அவங்க பேச்சுக்கு எதிரா வந்திருக்கேன்.''
''உங்க அம்மாவோட கோவம் நியாயமானதுதாம்மா... உன் பேரென்னம்மா?'' கேட்டபோதே, அவருக்கும் கண்கள் கலங்கின; குரலும் தழுதழுத்தது. அழுகையை அடக்க முயன்றும், உதடுகள் துடித்தன.
''விமலான்னு, அம்மா வெச்சிருக்காங்க... எங்கப்பா பேருல பாதி!''
''உங்கம்மாவை எப்படியாச்சும் சமாதானப்படுத்தி, கூட்டிட்டு வந்துடும்மா... நீங்க ரெண்டு பேரும், இனிமே இங்கேயே இருக்கலாம்!''
புன்னகைத்தவள், ''நான் சமாதானமாயிட்டதா யார் சொன்னது... அம்மா, நாலஞ்சு வீடுகள்ளே பணிப்பெண் வேலை செய்து, என்னை படிக்க வெச்சாங்க... வளர்க்கவும், படிக்க வைக்கவும் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்க...
''உங்களை சந்திக்க போறதா நான் சொன்னப்ப கூட, 'எதுக்குடி அவரோட சங்காத்தமெல்லாம்... கஷ்டப்பட்டப்ப, உதவி பண்ணலே... இப்ப என்னடி புது உறவு...'ன்னு தடுத்தாங்க. நாந்தான், 'உறவை புதுப்பிச்சுக்கறதுக்காக போகலேம்மா... அந்தாளுகிட்ட, 'நறுக்'குன்னு நாலு வார்த்தை சொல்லிட்டு வர்றதுக்கு தான் போகணும்...'ன்னு தோணுதுன்னேன்.''
திகைத்து, திடுக்கிட்டு அவளை பார்த்தபடியே இருந்தார், பரமேஸ்வரன்.
எதிரே இருந்த முக்காலியில், காபி கோப்பைகளை வைத்துச் சென்றார், ஜம்புலிங்கம்.
''செஞ்சது சரியில்லைதாம்மா... நான் இருக்கப் போறது, இன்னும் கொஞ்ச நாள் தான். அதுக்குள்ள என் சொத்துக்கெல்லாம் ஒரு வழி பண்ணணும்ன்னு தான் விளம்பரம் குடுத்தேன். ஓட்டல் உரிமையை வித்துட்டேன்; அதில், 30 லட்சம் ரூபாய் வந்துச்சு... இது, என் சொந்த வீடு. எல்லாத்தையும் உன் பேருக்கு எழுதிடணும்ன்னு இருக்கேன்!''
''நாங்க சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டப்போது, உதவாத உங்க சொத்து, எங்களுக்கு இப்ப தேவையில்லே... எனக்கு, பெரிய, ஐ.டி., கம்பெனியில, மாசம், 60 ஆயிரம் சம்பளம். எங்கம்மாவோட உழைப்பாலயும், தியாகத்தாலயும் வந்தது.
''உங்க சொத்தை விட, தன் மனைவி தான் பெரிசுன்னு உங்களை உதறிட்டு போன, உங்க மகனோட ரத்தம் தான் என் உடம்பிலேயும் ஓடுது... உங்க சொத்துக்கு ஆசைப்பட்டு, எங்க அம்மாவோட இங்க வந்திருந்தா, அப்பாவுடைய ஆன்மா எங்களை மன்னிக்காது... நான் வர்றேன்... முக்கியமா, இதை சொல்லிட்டு போக தான் வந்தேன்.''
அவள் எழுந்தாள்.
''அம்மா... ஒரு நிமிஷம்!''
விசுவாமித்திரர் பாணியில் கையை உயர்த்தி, ''அன்னைக்கு, 'அய்யா... ஒரு நிமிஷம்...'ன்னு எங்கம்மா கெஞ்சினப்ப, அப்பாவுடைய சாவு செய்தியை கூட சொல்ல விடாம, அவங்களை தடுத்தீங்கல்ல... கதவை படீர்ன்னு சாத்திட்டு போனீங்கல்ல... இப்ப, நான் மட்டும், நீங்க சொல்ல போறதை கேக்கணுமா...
''தேவையில்லே பெரியவரே... தப்புக்கு நிஜமாகவே பரிகாரம் பண்ணணும்ன்னு நினைச்சீங்கன்னா, உங்க சொத்தை, ஏழை பொண்ணுங்க திருமணதுக்குன்னு உயில் எழுதி, வெச்சிடுங்கோ,'' என, எழுந்து சென்றாள்.
காபி ஆறிக்கொண்டிருந்தது; பரமேஸ்வரனின் உடம்போ ஆடிக் கொண்டிருந்தது.
ஜோதிர்லதா கிரிஜா