
இன்றாவது நினைத்துப் பார்!
கட்டடங்களை
பார்க்கும்போதெல்லாம்
அஸ்திவாரம் நினைவுக்கு
வந்ததுண்டா...
இன்றாவது நினைத்துப் பார்!
ஆடை அணியும்போதெல்லாம்
அங்காடிகளை தவிர
அதை நெய்தவன் நினைவு
எப்போதாவது வந்திருக்கிறதா...
இன்றாவது நினைத்துப் பார்!
தீப்பெட்டிகளை திறக்கும்போது
தீக்குச்சியின் மருந்து தலைகளை
பார்க்கும்போதும்
பாஸ்பரஸ் நெடியில் பணி செய்யும்
மழலைகள் நினைவுக்கு வருமா...
இன்றாவது நினைத்துப் பார்!
உன் வியர்வை நாற்றம் போக்கும்
வாசனை சோப்பை
பயன்படுத்தும்போதெல்லாம்
அதற்காக உழைத்தவனின்
வியர்வை வாசம் உணர முடிகிறதா...
இன்றாவது நினைத்துப் பார்!
சாலையில் நடந்து போகையிலும்
வாகனங்களில் செல்கையிலும்
தகிக்கும் வெயிலில்
தாரை உருக்கி ஊற்றியவனை
நினைத்து பார்த்திருக்கிறாயா...
இன்றாவது நினைத்துப் பார்!
நீ பசித்து உண்ணும்போதெல்லாம்
தன் பசியை போக்க முடியாமல்
போனாலும்
விடாப்பிடியாக விவசாயம் செய்யும்
உழவனை
நினைத்து பார்த்திருக்கிறாயா...
இன்றாவது நினைத்துப் பார்!
அது போகட்டும்...
சமையல் அறையிலிருந்து
வரும் உணவின் வாசம்
உன் நாசியை துளைக்கும்போதும்
நாவில் எச்சில் வழிய காத்திருக்கும்போதும்
வீட்டு பெண்களின் சலியா உழைப்பையாவது
சற்றே நினைத்திருப்பாயா...
இன்றாவது நினைத்துப் பார்!
டி.என்.முரளிதரன், சென்னை.