PUBLISHED ON : ஆக 27, 2023

ஆகஸ்ட் 29 - தேசிய விளையாட்டு தினம்
இந்தியாவின் ஹரியானா மாநிலம், சார்க்கி தாத்ரியில் உள்ள கத்மா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர், ராம்பாய், வயது: 106. அண்மையில் நடந்த, தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு, மூன்று தங்கப் பதக்கங்களை வென்று, சாதிக்க, வயது ஒரு பொருட்டே அல்ல என்பதை நிரூபித்துள்ளார்.
ராம்பாய், தன், 104 வயதில் தான், தடகளப் போட்டியில் பங்கேற்க துவங்கினார். அதுவும், 'மான் கவுர் எனும் பஞ்சாப் பெண்மணி, 100வது வயதில், 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் கலந்து கொண்டு, உலக சாதனை படைத்தது, எனக்கு துாண்டு கோலாக இருந்தது...' என, குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு, குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்த, 85 வயதிற்கு மேற்பட்டோருக்கான, 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓடி, உலக சாதனை படைத்தார். அந்த போட்டியில், மான் கவுர் சாதனையை முறியடித்து, இரண்டு தங்கப் பதக்கங்களையும் வென்று சாதித்தார்.
இந்நிலையில், இந்த ஆண்டு ஜூனில் நடைபெற்ற, 18வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்ட ராம்பாய், 100 மீட்டர் ஓட்டத்தில், ஒரு தங்கம்; 200 மீட்டர் ஓட்டத்தில், ஒரு தங்கம் மற்றும் குண்டு எறிதலில் ஒரு தங்கம் என, மூன்று தங்கப்பதக்கங்களை வென்று, சாதித்துள்ளார்.
இதே போட்டியில் கலந்து கொண்ட, 31 வயதான, அவரது பேத்தி சர்மிளா, 3,000 மீட்டர் ஓட்டத்தில், வெண்கலம் தான் வெல்ல முடிந்தது. ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் இடையே, கனரக வாகனம் ஓட்டி வருகிறார், சர்மிளா. இவரும், தடகள வீராங்கனை.
இந்தியா மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் என, 14 போட்டிகளில், மூதாட்டி ராம்பாய் பங்கேற்று, 200 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில், யுவராணி விளையாட்டு கமிட்டி சார்பில் நடந்த, தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க சென்றார். மஞ்சள்பூர் விளையாட்டு மைதானத்தில் நடந்த போட்டியில், மூத்த வீரர்கள், 1,440 பங்கேற்றுள்ளனர். அதில் மூன்றிலிருந்து ஐந்து சக விளையாட்டு வீரர்களை எதிர் கொண்டு, மூன்று பதக்கங்களை வென்றுள்ளார், ராம்பாய். இந்த போட்டியில் கலந்து கொள்ள, 12 மாதங்கள் பயிற்சி எடுத்துள்ளார்.
ராம்பாய் வீட்டினர் அனைவருமே, விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள். அதோடு, ராம்பாய்க்கு சிறு வயதிலிருந்தே ஓட்டப்பந்தயம் என்றால் மிகவும் பிடிக்குமாம். அதனால், வீட்டில் மற்றும் அவர்களின் விவசாய நிலங்களில் வேலை பார்த்த பின், கிடைக்கும் ஓய்வு நேரங்களில் ஓட்ட பயிற்சி செய்வாராம்.
ஓட்டப்பந்தயங்களில் கலந்து கொள்ள தொழில் முறை உடற்பயிற்சிகளும் மேற்கொள்வாராம். தன் உடலை, 'பிட்' ஆக வைத்துக் கொள்ள, வீட்டில் தயாராகும் பால் மற்றும் தன் மேற்பார்வையில் விளையும் பழங்கள் மற்றும் காய்கறிகள் மட்டுமே உட்கொள்வார்.
கோவீ. ராஜேந்திரன்
