தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஆயிரம் பிறை கண்ட பாட்டி ! -எல்.முருகராஜ்

ஆயிரம் பிறை கண்ட பாட்டி ! -எல்.முருகராஜ்

ஆயிரம் பிறை கண்ட பாட்டி ! -எல்.முருகராஜ்


PUBLISHED ON : ஜூலை 25, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 25, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னையில் ஒரு கல்யாண மண்டபம் —

கூட்டம் நிரம்பி வழிந்தது. எல்லாரும் உறவுக்காரர்கள் மட்டுமல்ல, ஒரே குடும்பத்தைத் சேர்ந்தவர்கள்.

ஆம்... 102 வயது கோகிலாம்பாள் பாட்டிக்கு ஏழு மகள்கள், மூன்று மகன்கள் மற்றும் இவர்களின் மூலமாக பிறந்த 48 பேரன்கள், பேத்திகள். இவர்கள் தவிர, கொள்ளுப் பேரன், பேத்திகள் மற்றும் எள்ளு பேரன், பேத்திகள் என, ஐந்து தலைமுறையைச் சேர்ந்த குடும்பத்தினர் அவர்களது உறவினர்கள் என்று, கூட்டமாய் மட்டுமல்ல, மிகவும் குதூகலமாக ஒன்று கூடி, 100 வயது பூர்த்தியானவர்களுக்கு செய்யப்படும் கனகாபிஷேகத்தை கோகிலாம்பாளுக்கு வெகு விமரிசையாக செய்து கொண்டு இருந்தனர்.

ஒருவர், 100 வயது வரை வாழ்வதே கடினம். அப்படியே வாழ்ந்தாலும், அவர்கள் படுத்த படுக்கையாக, பெரும்பாலான உறுப்புகள் செயலிழந்து போய் காணப்படுவர்; ஆனால், கோகிலாம்பாள் பாட்டி அப்படி இல்லை.

ஒரு குழந்தையைப் போல குடு, குடுவென ஓடுவதும், உறவுக்காரர்களை அடையாளம் கண்டு பேசுவதும், வாழ்த்துவதுமாக இருந்தார். வெளிநாட்டில் இருந்து, 'மொபைல் போனில்' வந்த வாழ்த்துக்களுக்கும் பதில் சொல்லி, 'ஹைடெக்' பாட்டியாக

இருந்தார்.

'எப்படி... இப்படி?' என்றதும், தன் நீண்ட ஆரோக்கியம் மற்றும் ஆயுளின் ரகசியத்தை கூறினார்.

மதுரை சோழவந்தானில் பிறந்து, கும்பகோணத்தில் வளர்ந்து, தற்போது சென்னையில் இருப்பது வரை, 'யாதும் ஊரே யாவரும் கேளீர் பாணிதான்...' நம்முடையது. எங்கே போனாலும், அங்கே உள்ள மக்களோடு அன்பாக விட்டுக் கொடுத்து இருந்து கொள்வேன் என்கிறார்.

பாட்டி கூறுகிறார்:

என் கணவர் சீனிவாசன் ரயில்வே சீப் புக்கிங் கிளார்க்காக இருந்து இறந்து போனார். சம்பளம் அப்போ அவருக்கு 100 ரூபாய் தான். ஆனால், அதிலேயே ஏழு பெண்களையும், மூன்று மகன்களையும் படிக்க வைத்து, இன்று எல்லாரையும் பெரிய ஆளாக்கியிருக்கிறேன்.

அது மட்டுமல்ல, எங்க வீட்டுக்கு எப்பவும் விருந்தினர் வந்த வண்ணம் இருப்பர். இல்லை என்று சொல்லாமல், சாப்பாடு போடுவோம். சந்தோஷத்தையும், உறவுகளையும்தான் சேர்த்து வைக்க நினைத்தோமே தவிர, வேறு எதுவும் சேர்க்க விரும்பியதில்லை. ஆசைதான் சந்தோஷத்திற்கு கேடு என்பதில் உறுதியாக இருந்தேன்.

'சிசேரியன்' என்றால் அப்போது என்னவென்றே தெரியாது. அரசு ஆஸ்பத்திரியில் இருந்து, வீட்டுக்கே வந்து, பிரசவம் பார்த்து, கையில் குழந்தையைக் கொடுத்துவிட்டு போவாங்க. போகும் போது தட்டுல, வெத்திலை பாக்கு மற்றும் வசதியைப் பொறுத்து, மூன்று ரூபாயிலிருந்து ஐந்து ரூபாய் வரை கொடுப்போம். அவ்வளவுதான் பிரசவ செலவு.

அதே போலத்தான் கல்யாண செலவும். அப்போது மண்டப வாடகை 35 ரூபாய்தான். 'பெண்ணிற்கு கல்யாணம் வச்சிருக்கேன்...'ன்னு உறவுக்காரங்க கிட்ட சொல்வேன். அப்புறம் அவுங்களே இழுத்துபோட்டு கல்யாணத்தை செஞ்சு முடிச்சுடுவாங்க.

பாட்டி வீட்டிலே விட்டால் ஒழுக்கமாய் பிள்ளைகள் வளரும்ன்னு சொல்லி, பெரும்பாலான பேரன், பேத்திகள் என் வீட்டில்தான் வளர்ந்தனர். நான் ஒழுக்கத்தை உயிரா மதிக்கச் சொல்வேன். விருந்தோம்பலை சொல்லிக் கொடுப்பேன். எப்போதும் எளிமையாகவும், உண்மையாகவும் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவேன்.

நானும் இந்நாள்வரை அப்படித்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். உணவில் நிறைய கட்டுப்பாடு உண்டு. இதுதான் சாப்பாடு, இவ்வளவுதான் சாப்பாடு என்று வரையறுத்து, இன்றைக்கும் சாப்பிடுகிறேன். அதனாலே, இதுவரை பெரிதாக உடம்பிறகு முடியவில்லை என்று, எந்த டாக்டரிடமும் போனது கிடையாது.

காது நன்றாக கேட்கிறது. 'டிவி'யில் ஆன்மிக நிகழ்ச்சிகளை விடாமல் பார்க்கும் அளவு பார்வை இருக்கிறது. பெரும்பாலான விஷயங்கள் நன்றாக ஞாபகம் இருக்கிறது.

ரொம்ப நாள் வயலின் வாசிச்சிட்டு இருந்தேன். இப்பதான் வாசிக்கிறது இல்லை; ஆனால், இப்பவும் ஜோரா பாட்டுப் பாடுவேன் என்றவர், 'என்ன சந்தேகமா இருக்கா?' என்று கேட்டுவிட்டு, கர்நாடக இசையில் சில பாடல்களை பாடிக் காட்டினார். சந்தோஷமாக இருந்தது பாடல்களால் மட்டும் அல்ல, பாட்டியின் வார்த்தைகளாலும்.                                                                                                                    



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us