PUBLISHED ON : ஜன 12, 2014

போலி கலவர கும்பலால், எல்லாரும் சிரித்தாலும், வாசகி தெய்வானை மட்டும், சமாதானம் ஆகாமலே, குற்றாலம் வரை வந்தவர், இறங்கும் போது, பஸ்சின் இருக்கைகளுக்கு இடையே, தன் கை மாட்டிக்கொண்டதாக பெருங்குரலெடுத்து சத்தம் போட்டு அழுதார். அவரது கையை மீட்பதற்காக, பஸ்சில் இருந்த கனமான பொருட்களுடன், மொத்த வாரமலர் அணி சூழ்ந்ததும், தெய்வானை ஒரு காரியம் செய்தார். அவர் செய்த காரியத்தை, எப்போதும் மறக்க முடியாது என்றும், அப்படி என்ன காரியம் செய்தார் என்பதை, இந்த வாரம் சொல்வதாக எழுதியிருந்தேன்.
அவர் செய்தது இதுதான்!
'எல்லாரும் என் கையை காப்பாத்தறதுக்கு வந்துட்டீங்களா... எங்கே கேப்டன் முருகராஜ்... அவரை முன்னாடி வரச்சொல்லுங்க. ஓ... முன்னாடி தான் இருக்காரா... அப்ப சரி. இப்ப எல்லாரும் பார்த்துக்குங்க பார்த்துக்குங்க...' என்று சொல்லி, சீட்டின் இடுக்கில் இருந்து, தன் கையை திருப்பி, அழகாக வெளியில் எடுத்தார்.
அதாவது, நாங்கள் நினைத்தபடி, அவர் கை மாட்டவே இல்லை. கை மாட்டிக்கொண்டது போல, ஒரு நாடகம் போட்டு எங்களை ஏமாற்றி விட்டார்.
'தெய்வானை மேடம், கொஞ்ச நேரத்தில், எங்கள பயமுறுத் திட்டீங்களே... ஏன் இந்த நாடகம், எதற்காக இந்த அலறல் சத்தம்...' என்றதும் 'அப்படி கேளுங்க சொல்றேன்...' என்றவர், தொடர்ந்து, 'நீங்க மட்டும்தான், உங்க ஊழியரை வச்சு, கலவர கும்பல் மாதிரி, நாடகம் போட்டு பயமுறுத்துவீங்களா, நாங்களும் செய்வோம்ல...' என்றதும், 'அம்மா தெய்வானை...போதும்; இதோடு நிறுத்திக்குவோம். இதற்கு மேல், அதிர்ச்சியை தாங்க உடம்புலயேயும், மனசுலேயும் தெம்பு இல்லம்மா...' என்றதும், 'அந்த பயம் இருக்கட்டும்...' என்றபடி, பஸ்சைவிட்டு இறங்கினார்.
ஆனால், அந்த வருட டூரில், அனேக, 'தெய்வானைகள்' இருப்பது, மறுநாள், புலியருவியில் தெரிய வந்தது.
'வாசகர்களின் பாதுகாப்புதான் மிக முக்கியம்' என்று, அந்துமணி, படித்து படித்து சொல்லியிருப்பதால், கண்ணும் கருத்துமாய் அவர்களை பார்த்துக் கொள்வோம்; வாசகிகளும் அதற்கு ஏற்றார் போல் ஒத்துழைப்பு கொடுப்பர். ஆனால், போலி கலவர கும்பலால், நானும் பாதிக்கப்பட்டவன் என்பது புரியாமல், நான்தான் அந்த கலவர நாடகத்துக்கு மூளை என்று நினைத்து, தெய்வானையை தொடர்ந்து, மேலும் சிலர், என்னை தவிக்க விடுவது என, முடிவெடுத்து வைத்திருந்தனர்.
வாசகர்கள் பெரிதும் விரும்பும் அருவிகளில் புலியருவியும், ஒன்று. காரணம், இந்த அருவி தண்ணீர், தலையில் அடி விழுவது போல அல்லாமல், வாளிதண்ணீரை தலையில் கவிழ்த்தது போல, 'பொது பொது'வென விழும். மேலும், அருவிக்கு முன், நான்கு அடியில், தடாகம் ஒன்று உண்டு. இந்த தடாகத்தில் நிரம்பியுள்ள தண்ணீரில், குதித்து விளையாடலாம். அத்துடன் பள்ளத்தைவிட்டு வெளியேறும் தண்ணீர், ஆறு போல ஒடும். இந்த ஆற்றில், குழந்தைகளோடு மட்டுமல்ல, குழந்தைகள் போலவும் விளையாடலாம்.
இந்த அருவியைப் பற்றி சொல்லி, வாசகர்களை குளிக்க அனுப்பியதும், வாசகிகள் ரோசா, வளர்மதி, அருணா, சோபியா, தீபா, உஷாராணி, விஜயா, வசந்தமாலா, விஜயகுமாரி ஆகியோர், (அப்போது, இவர்கள் எல்லாம் கல்லூரி படிப்பை முடித்திருந்த இளம் பெண்கள். படிப்பை முடித்திருந்தாலும், கல்லூரி குறும்பை விடாமல் இருந்தனர். இப்போது, இவர்கள் எல்லாம், கல்லூரிக்கு செல்லும் மகன் அல்லது மகளுக்கு தாயாக இருப்பர்.) 'ஆமாம்... இந்த புலியருவிக்கு மேலே, ஒரு பாதை இருக்கிறதே, அது எங்கே போகிறது...' என்று ஒன்றும் தெரியாதவர்கள் போல கேட்டனர்.
நானும் வெள்ளந்தியாக, 'இந்த புலியருவியில் விழும் தண்ணீரின் வேகம் போதாது என்று, கருதக்கூடிய இளமைப்பட்டாளம் இந்த ஒத்தையடிப் பாதை வழியாக, மலை மீதேறி, ஒரு கிலோ மீட்டர் தூரம் போய், அங்கு கொஞ்சம் வேகமாக விழக்கூடிய நீர்வீழ்ச்சியில் குளிப்பர்...' என்றதும், 'ஒஹோ' என்றனர்.
அந்த, 'ஒஹோவிற்கு' பின், அப்படி ஒரு சிக்கல் ஏற்படும் என்று, அப்போது கொஞ்சமும் நினைக்கவில்லை.
புலியருவியில் அவர்களை குளிக்க சொல்லி, குழந்தையுடன் வந்தவர்களை ஆற்றில் விளையாடவிட்டு, வயதில் பெரியவர்களை புலியருவியின் அருகே உள்ள கோவில் வளாக நிழலில் உட்கார வைத்து, பஸ்சைவிட்டு இறங்காதவர்களுக்கு, மிளகாய் பஜ்ஜி வாங்கி சாப்பிடக் கொடுத்து, பஜ்ஜி சாப்பிட்டு முடித்ததும், டீ வாங்கிக் கொடுத்து, 'இங்கேயே இருங்க. இந்த நேரம் புலியருவிக்கு குளிக்க போன நம்ம வாசகியர் குளிச்சு முடிச்சு மேலே வந்திருப்பர். அவர்களை, அழைத்துக்கொண்டு வந்து விடுகிறேன்...' என்று, சொல்லி விரைந்தேன்.
புலியருவியில் குளித்து முடித்து, தலையை துவட்டிக்கொள்ளும் இடத்தில், வாசகிகளைக் காணோம். 'சரி இன்னும் குளித்து முடியவில்லை போலும்...' என்று, அருவிப்பக்கம் போனால், அங்கேயும் காணோம். 'ஆற்றில் விளையாடுகின்றனர் போலும் என்று, ஓடிப்போய் பார்த்தால், ஆற்றிலும் காணோம். அங்கு இருந்த போலீஸ்காரரிடம், வாசகிகளின் விவரம் சொல்லி கேட்டபோது, 'ஆமா அவுங்கள்லாம் உங்க வாசகிகளா... நீங்க இங்க இருந்து போனதும், 'இந்த அருவிக்கு மேலே ஒரு அருவி இருக்காமே... எப்படி போகிறது' என்று வழி கேட்டனர்...' என்று, அந்த போலீஸ்காரர் சொல்லச் சொல்ல, அடிவயிறு பகீரென்றது.
குற்றாலமும், திருக்குற்றாலநாதரும்...
குற்றாலத்தின் கீதம், அருவிகள் என்றால், மெயினருவிக்கு போகும் வழியில் உள்ள குற்றாலநாதர் கோவில் நாதமாகும். அருவியின் மேலிருந்து பார்த்தால், சங்கு வடிவில் காணப்படும் குற்றாலநாதர் கோவிலுக்கு, பலவித சிறப்புகள் உண்டு. சேக்கிழார் போற்றிய 14 திருத்தலங்களில், இதுவே, தொன்மையானது.
இங்குள்ள மூர்த்தியின் பெயர் குற்றாலநாதர்; இறைவி குழல்வாய் மொழியம்மை. உற்சவர் சோமாஸ்கந்தர். மகுடாகமம் எனும், ஆகம விதிப்படி, இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. தலவிருட்சம், குறும்பலா மரம். கு என்றால் பிறவிப்பிணி, தலம் என்றால் தீர்ப்பது. ஆகவே, பிறவிப்பிணி தீர்க்கும் நாதரே, இங்குள்ள குற்றாலநாதர் என்பது, பக்தர்கள் நம்பிக்கை.
அகத்தியர் விரல்பட்டதால், லிங்கத்தின் மீது, விரல் அழுந்திய பள்ளம் உள்ளதாம். அகத்தியர் அழுத்தியதால், தலை வலிக்கக் கூடாது என்பதற்காக, இப்போதும், மூலிகை தைலக் காப்பு நடைபெறுகிறது. இங்குள்ள தீர்த்தம், சிவமது கங்கை, வட அருவி, சித்ரா தீர்த்தம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. மெயினருவியின் மேலிருந்து பறவை பார்வையில், கொட்டும் அருவியின் அருகில், கேமரா வைத்து, ரிஸ்க்குடன் எடுக்கப்பட்ட படம். தொலைவில், கோவிலின் முழு வடிவத்தை காணலாம்.
— அருவி கொட்டும்
எல்.முருகராஜ்