
சர்க்கிள் இன்ஸ்பெக்டர் கோவிந்தன், 'தீச்சட்டி' கோவிந்தனானது, ஒரு சுவாரசியமான கதை. அந்நாட்களில், மதுரை தத்தனேரி சுடுகாட்டை ஒட்டியுள்ள காலியிடத்தில், ஒரு கும்பல், எந்நேரமும் பணம் வைத்து, சீட்டாடிக் கொண்டிருக்கும். அந்த கும்பலை, காவல் துறையினரால், பிடிக்க முடியவில்லை. காவலர்களைக் கண்டதும், ஆட்கள் ஓடி விடுவர். இன்ஸ்பெக்டர் கோவிந்தன், ஒரு தந்திரம் செய்தார். பாடை ஒன்றை தயாரித்து, அதில், துப்பாக்கிகளை மறைத்து வைத்து, ஒரு காவலரை, பிணம் போல் படுக்க வைத்தார். நான்கு காவலர்கள், சாதாரண உடையணிந்து, அந்தப் பாடையைத் துாக்கி கொண்டு வந்தனர். ஒருவர், சங்கை ஊதியபடி வந்தார்; நான்கைந்து பேர், அவர்களை, பின் தொடர்ந்து வந்தனர்.
இன்ஸ்பெக்டர் கோவிந்தன், சட்டை அணியாமல், கையில் தீச்சட்டி ஒன்றை ஏந்தி, வந்தார். சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் அருகில், பாடை இறக்கப்பட்டது. ஏதோ சடங்குகள் செய்யப் போகின்றனர் என நினைத்து, சூதாட்டக் கும்பல், கருமமே கண்ணாக இருந்தது. அடுத்த கணம், பாடையிலிருந்த பிணம் எழுந்து, அவர்களை நோக்கி துப்பாக்கியை காட்டிற்று; இன்ஸ்பெக்டரும், மற்ற காவலர்களும் சூதாட்டக் கும்பலை சூழ்ந்து கொண்டனர். சூதாடிகளால், தப்ப முடியவில்லை. அனைவரும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்துக்குப் பின், இன்ஸ்பெக்டர் கோவிந்தன், 'தீச்சட்டி' கோவிந்தனானார்.
— பழம்பெரும் பத்திரிகையாளர், மாஜினி ஒரு கட்டுரையில்...
காஞ்சிபுரம் ராஜகோபால், அண்ணாதுரையின் இளமைக் கால நண்பர். அவர், நகராட்சி உறுப்பினராகவும், மேலவை உறுப்பினராகவும் இருந்தவர். அண்ணாதுரையின், 'சந்திரோதயம்' நாடகத்திலும் நடித்திருந்தார். பெரும்பாலும், அண்ணாதுரையின் கூடவே இருப்பார். அவரது தோற்றமும், பேச்சும், வேடிக்கையாக இருக்கும்.
ஒரு முறை, காஞ்சியில், அண்ணாதுரை தலைமையில், இலக்கியக் கூட்டம் நடைபெற்றது. அதில், ராஜகோபால் பேசும்போது, 'ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று தொல்காப்பியர் குறிப்பிட்டது போல...' என்று முழங்கினார். (ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது திருமூலர் வாக்கு.)
உடனே மேடையில் அமர்ந்திருந்த அண்ணாதுரை, 'தொல்காப்பியரா கூறினார்?' என்று, ராஜகோபாலனை பார்த்து கேட்டார்.
ராஜகோபால், அண்ணாதுரை பக்கம் திரும்பி, உரத்த குரலில், 'ஆம்; தொல்காப்பியர் தான் கூறினார்...' என்று சொல்லி, அதே வேகத்தில், தன் சொற்பொழிவை தொடர்ந்தார்.
பேசி முடித்து, தன் அருகில் வந்து அமர்ந்தவரிடம், அண்ணாதுரை, 'ஏனய்யா, நான் தான் கேட்கிறேனே... அப்போதாவது, நீ புரிந்து கொள்ள வேண்டாமா... ஏதோ, எனக்கு சந்தேகம் ஏற்பட்டு, நான் உன்னிடம் கேட்டது போல, நீ உரக்க பதில் சொல்லி, உன் முட்டாள்தனத்தை உறுதிப்படுத்தி விட்டாயே...' என்று, உரிமையோடு கடிந்து கொண்டார்.
— 'அண்ணாதுரையின் மேடைப் பேச்சு' என்ற நூலிலிருந்து...
வ.ரா.,வின் அறுபதாவது வயது நிறைவை முன்னிட்டு, ஒரு விழா நடத்த வேண்டுமென்று தீர்மானித்து, அதற்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அன்று பேசிய நண்பர்கள் எல்லாரும், வ.ரா.,வை பாராட்டி, அவரது குணாதிசயங்களைப் சிலாகித்தனர். மணிவிழாவை சிறப்பாக நடத்தி, அவருக்கு பணமுடிப்பு ஒன்று அளிக்க வேண்டும் என்று கூறினர். ஒரு பிரபல எழுத்தாளர், 'இந்த வயதான காலத்தில், வ.ரா.வைத் தரித்திரம் பிடிக்கும்படி விடலாமா, அன்ன, வஸ்திரத்துக்கு அவரைக் கஷ்டப்பட விடலாமா...' என்று உணர்ச்சியுடன் பேசினார்.
கூட்டம் முடிந்த அரை மணி நேரத்துக்கு பின், வ.ரா.,வின் வீட்டுக்குப் போனேன். வ.ரா., உற்சாகமாக இருப்பார் என்று எண்ணினேன். அதற்கு மாறாக, சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். எனக்கு முன்னாலேயே, ஒருவர் சென்று, ஆலோசனைக் கூட்டத்தில் நடந்ததை சொல்லி விட்டார். வ.ரா.,வின் வறுமையைப் பற்றி குறிப்பிட்டது, அவருக்குப் பிடிக்கவில்லை. ஆகையால், சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.
என்னைக் கண்டதும், 'ஏங்காணும், நான் தரித்திரன் என்பதற்காகவே, எனக்கு பணமுடிப்பு அளிக்கப் போகிறீர்களா... நான் ஒன்றும் தரித்திரன் இல்லை. இந்த உலகத்து செல்வம் எல்லாம், என்னுடையதாயிற்றே! என்னுடைய ஏழ்மைக்காக, பணம் கொடுப்பதாக இருந்தால், என்னை விட, எத்தனையோ ஏழைகள் இருக்கின்றனர். அவர்களுக்கு கொடுங்கள். நான் எழுத்தாளன். என் தமிழ் தொண்டுக்காக, பணமுடிப்பு கொடுப்பதாயிருந்தால், கொடுங்கள். இல்லாவிடின் வேண்டாம்...' என்று சீறினார் வ.ரா.,
—கல்கி எழுதிய, 'யார் இந்த மனிதர்கள்...'என்ற நூலிலிருந்து...
நடுத்தெரு நாராயணன்