PUBLISHED ON : நவ 16, 2014

தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும்' என்ற பழமொழியை பொய்யாக்கி, 'குட்டி பதினாறு அடி பாய்ந்தால், நான், 32 அடி பாய்வேனாக்கும்...' என்ற புதுமொழியை படைத்தவர்தான் போடியைச் சேர்ந்த விஜயலட்சுமி.
மகள் ஜான்சிராணியுடன் டூரில் கலந்து கொண்டவர்.
போடிநாயக்கனூரில் சிறிய வீட்டில், நிறைய சந்தோஷத்துடன் வாழ்ந்து வருகிறார். கணவர் மரவேலை செய்து தரும் பணத்தில், குடும்பத்தை நிர்வாகம் செய்து வரும் இவர், எவ்வளவு சிரமம் என்றாலும் அதை தான் தாங்கிக்கொண்டு, வீட்டில் உள்ளவர்களுக்கு அதன் பாதிப்பு தெரியாத அளவு வாழும் சுமைதாங்கி.
கல்வி தான் ஒருவரின் வாழ்வை முன்னேற்றும் என்பதில் அசாத்திய நம்பிக்கை கொண்டதன் காரணமாக, தான் பெற முடியாத உயர் கல்வியை, தன் மகனும், இரண்டு மகள்களும் பெறும்படி செய்தவர்.
வீட்டில் உள்ளோர் எங்கு இருந்தாலும் இரவு, 8:00 மணிக்குள் வந்துவிடவேண்டும்; யாராவது ஒருவர் வராவிட்டாலும் மற்றவர்கள் அவரது வருகைக்காக பசியோடு காத்திருப்பர். இதனால், யாரையும் பட்டினி போட்டுவிடக்கூடாது என்பதற்காக யார் எங்கு இருந்தாலும், 8:00 மணிக்கு சாப்பிட வந்துவிடுவர்.
'ஒன்றாய் உட்கார்ந்து பேசியபடி சாப்பிடுவதில் உள்ள சந்தோஷம் எதிலும் இல்லை. அது மட்டுமல்ல, நாங்கள் எல்லாரும் கூடியிருக்கும் அந்த நேரத்தில் தான் முக்கிய பிரச்னைகளை அலசி தீர்வு காண்போம். இதனால், எங்கள் வீட்டில் பிரச்னைகளே வந்தது இல்லை. அதனால், எங்களிடம் பணம் குறைவாக இருந்தாலும், பாசம் நிறைவாகவே உள்ளது...' என்றார் விஜயலட்சுமி.
மடியில் கனமும், மனதில் கள்ளத்தனமும் இல்லாதவர்களின் பேச்சை எவ்வளவு கேட்டாலும் சலிக்காது. தமக்கே உரிய கிராமத்து பாணியில், கலகலப்பாக பேசும் இவரைச்சுற்றி, எப்போதும் வாசகர் கூட்டம் இருந்து கொண்டே இருந்தது.
யாராவது இரண்டு பேர் ஓரமாக நின்று பேசி சிரித்துக் கொண்டிருந்தால், 'ஏன்... இங்க வந்து சபையில பேசுனா நாங்களும் சிரிப்போம்ல...' என்று, 'கிசுகிசு' பாணியில் பேசுகிறவர்களை அனைவரின் முன் கொண்டு வந்து நிறுத்தி, அவர்களது கூச்சத்தை போக்கி, பேச வைத்து விடுவார்.
இவருக்கு பிடிக்காத விஷயம் குடி! இவர்கள் குடியிருக்கும் தெருவிற்கு அருகில், டாஸ்மாக் இருக்கிறதாம். ஏழை எளிய மனிதர்கள் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில் குடித்துவிட்டு நடக்க முடியாமல், பல சமயம் இவர் வீட்டு வாசலில் விழுந்து கிடப்பராம்.
'குடித்துவிட்டு கால்கள் பின்ன, நடை தடுமாற அவர்கள் உளறுவதை பார்த்தால் பாவமாக இருக்கும்...' என்றவர், குடிகாரர்கள் குடித்துவிட்டு எப்படி ஆக்ட் கொடுப்பர் என்பதை, அச்சு அசலாக நடித்துக்காட்டிய போது, ஒரு பக்கம் வேடிக்கையாக இருந்தாலும், இனனொரு பக்கம் வேதனையாக இருந்தது.
'இன்னைக்கு கூலி, ௨௦௦ ரூபா கிடைச்சுருக்கு; பையன் பாடபுத்தகம் வாங்க, ௧௦௦ ரூபா கேட்டான். பொண்டாட்டி ரொம்ப நாளா இனிப்பும், பூவும் கேட்டா... அதுக்கு ஒரு, ௨௦ ரூபாய் போக, மீதி முப்பது ரூபாய்க்கு ஒரு ஸ்மால் கட்டிங் போடலாம்...' என்று உள்ளே போகிற ஒருவன், ௩௦ ரூபாய்க்கு குடித்துவிட்டு, 'கிக்'பத்தலையே என்று நினைத்து, பூ, இனிப்பு மற்றும் புத்தகத்தை இன்னொரு நாளைக்கு வாங்கிக்கலாம் என்று தனக்குதானே சொல்லி, ௨௦௦ ரூபாய்க்கும் சரக்கடித்து, கடன் சொல்லி சைடு டிஷ் சாப்பிட்டுவிட்டு நடக்க முடியாமல் நடந்து, சாக்கடையில் விழுந்து கிடப்பதை ஓரங்க நாடகமாக, இவர் நடித்துக்காட்டியபோது, கைதட்டல் பலமாக எழுந்தது.
'இதை கைதட்டலுக்காக செய்யவில்லை; உங்களுக்கு தெரிஞ்சு யார் குடிச்சாலும், அதை நீங்க தடுக்கணும்; அதுக்காகத்தான், அந்த கொடுமையை விளக்க இப்படி நடிச்சுக் காட்டினேன். அது மட்டுமல்ல, வீட்டு வாசல்ல விழுந்து கிடக்கிறவங்கள பார்த்ததும் கதவை அடைச்சு, ஒளிஞ்சுக்க மாட்டேன். அவங்க குடிக்கவும், சுத்தம் செய்யவும் தண்ணி கொடுத்து, குடிக்கறது தப்புப்பான்னு எடுத்துச்சொல்லுவேன். எத்தனை பேர் திருந்தியிருக்காங்கன்னு தெரியாது; ஆனா, நான் சொல்றத சொல்லிக்கிட்டேதான் இருக்கேன்; இனியும் இருப்பேன்...' என்று சொல்லி முடித்த போது, 'அக்கா... சூப்பர்...' என்று சொல்லி, கைதட்டி பாராட்டினார் அந்துமணி.
அந்துமணி, 'அக்கா' பட்டம் கொடுத்த பின், டூர் வாசகர்கள் அனைவருக்குமே விஜயலட்சுமி அக்காவாகிப் போனார். அதிலும், அந்துமணி யார் என்பது தெரியாமலேயே அவரிடம் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். பதிலுக்கு அவரிடம் இரண்டு விஷயங்களை கேட்டுப் பெற்றார்.
அந்த இரண்டு விஷயங்கள் என்னவென்று அடுத்த வாரம் பார்ப்போம்.
— அருவி கொட்டும்
குற்றாலமும், துவரங்காடும்...
திருநெல்வேலி மாவட்டம், வீரகேரளம்புதூர் வட்டம், கீழவெள்ளக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம், துவரங்காடு. குற்றாலத்தில் இருந்து, 30 கி.மீ., தூரத்தில் உள்ளது.
இக்கிராமத்து மக்கள் இயல்பாகவே கடும் உழைப்பாளிகள். சூதுவாது அற்ற விவசாயிகள்; எளிமையான வாழ்வு வாழ்பவர்கள். அவர்களை பகடைக் காய்களாக பயன்படுத்தி, கள்ளச்சாராய சந்தைக்கு ஊறுகாயாக்கி இருந்தனர் சமூக விரோதிகள். இதனால், இங்கு, எந்நேரமும் சண்டை சச்சரவு தான். இவ்வூர், மாவட்டத்தின் ஒரு கரும்புள்ளியாகவே கருதப்பட்டது.
உலக சமுதாய சேவா சங்கம், இக்கிராமத்தை தத்தெடுத்து யோகா, தியானப் பயிற்சியை அளித்தனர். மரம் வளர்ப்பில் உதவியதுடன் சுத்தமும், சுகாதாரமும் கடைபிடிக்க கற்றுத் தந்தனர். இளைஞர்களை மையப்படுத்தி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்தனர். இதன் காரணமாக கடந்த ஓராண்டுக்குள் பல்வேறு மாற்றங்களை இந்த கிராமம் சந்தித்தது.
இப்போது எந்த சண்டை, சச்சரவுகளும் கிடையாது. முக்கியமாக குடிப்பவர்களே இந்த கிராமத்தில் இல்லை. விவசாயம் செய்து மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். ஒரு காலத்தில் மது மலிந்திருந்த துவரங்காடு, இப்போது சொர்க்க பூமியாகியிருக்கிறது. இது, எல்லாவற்றுக்கும் பிரதான காரணம், மன உறுதியோடு மதுவை தூக்கி எறிந்த இந்த கிராம மக்கள்தான்.
சிறந்த கிராம ஊராட்சிக்காக மத்திய அரசு வழங்கும், 'நிர்மல் கிராம் புரஸ்கார்' விருது பெறும் அளவுக்கு, துவரங்காட்டில் முன்னேற்றங்கள் முளைத்துள்ளன. இது, மதுவை ஒழித்து, உழைப்பில் கவனம் செலுத்தியதற்கான பரிசு!
-எல்.முருகராஜ்
