PUBLISHED ON : நவ 16, 2014

வாசம் செய்து வாழ்வோம்!
எதனால்
தடுக்கப்படுகிறது...
தட்டிக் கொடுக்கப்படும்
என் எண்ணம்!
எப்படி
உதிர்ந்து விழுகின்றன
உயரப் பறந்த
என் சிந்தனைகள்!
ஆத்திரங்கள் மட்டுமே
ஆராதிக்கின்றன என்னை!
எதிரியின்
எட்ட முடியாத வெற்றியா...
இல்லை
வெற்றியை ஈட்ட
என்னால் முடியவில்லையா!
பொறாமையென்னும்
பிரம்மாஸ்திரத்தை பிரயோகிக்க
எப்படி கற்றுக் கொண்டேன்!
தேவைகள் இல்லாத
தீப்பொறிகளை
தேடித் தேடி
தேகத்தில் பூசிக் கொள்வதேன்!.
புகழ் மாலை போர்த்தி வரும்
புத்திரர்களை வரவேற்க
புன்னகைப் பூக்கள் இருக்கையில்
ஆத்திரமென்னும்
அஸ்திரம் அள்ளித் தெளிப்பது ஏன்?
அதனால்தான்
எதிரியின் வெற்றிப்படிகளை
எட்டி உதைக்கிறேனா!
நண்பனின் நட்புப் பாதைகளில்
முட்களின் முகவரிகளை
முன்னிறுத்துகிறேனா!
என் புன்னகைப் பூக்களை
பொசுக்கி
தீப்பிழம்புகளை தெளிக்கிறேனா!
பொறாமை-
உள்ளத்தை உருக்குலைக்கும்
உலைப்பட்டறை!
சரீரத்தின் சதைகளை
வேக வைக்கும்
வெப்ப கனல்கள்!
நம் சிம்மாசன கனவுகளை
சிதைக்கும் தீப்பொறிகள்!
இதில் மனதை மழுங்கடிப்பானேன்!
மாற்றங்களை ஏற்படுத்தி
மகிழ்ச்சிகளை பரிமாறிக் கொள்ளலாமே!
வளர்த்துவிடும்
வாழ்த்துச் சொற்களை
வழங்கி மற்றவர்
வளர்ச்சியில்
வாசம் செய்து வாழலாமே!
— க.அழகர்சாமி, கொச்சி
