பசுமை நிறைந்த நினைவுகளே... - வெள்ளி விழா கண்ட குற்றால டூரின் அனுபவங்கள்! (4)
பசுமை நிறைந்த நினைவுகளே... - வெள்ளி விழா கண்ட குற்றால டூரின் அனுபவங்கள்! (4)
PUBLISHED ON : செப் 22, 2013

குற்றால டூரை சுவாரசியமாக்க, அந்துமணி, பல அசத்தல் ஐடியாக்களை கொண்டு வந்தார் என்று, கடந்த வாரம் சொல்லியிருந்தேன் அல்லவா... அந்த ஐடியாக்களில் ஒன்று, நடிகர் லூஸ் மோகன், டென்ஷன் பாஸ்கர், மீசை முருகேசன், ஓமகுச்சி நரசிம்மன், மயில்சாமி, தவக்களை போன்ற சினிமா பிரபலங்களை டூரில் பங்கேற்க வைத்தது.
இவர்கள் ஒவ்வொருவரும், வெவ்வேறு காலகட்டத்தில், டூருக்கு வருகை புரிந்தவர்கள். இதில், அதிக வருடம் வந்தவர்கள், லூஸ் மோகனும், அவரது உதவியாளர் டென்ஷன் பாஸ்கரும் தான்.
லூஸ் மோகன் வாசகர்களிடம், 'என்ட்ரியாவதே' மிக வித்தியாசமாக இருக்கும். சாமியார், ரவுடி, பிச்சைக்காரர், பெண் வேடம் என்று, வருடத்திற்கு ஒரு, 'கெட் அப்'பில் வருவார்.
கண்ணை சிமிட்டியபடி, மெட்ராஸ் பாஷையில், 'இன்னா நைனா... நல்லாக்கீரியா?' என்று கேட்பது, அவரது தனிப்பாணி. அந்த பாணியை வைத்துதான், வாசகர்கள், அவரை அடையாளம் கண்டுபிடிப்பர். 'திரையில், எவ்வளவோ பேரை மகிழ்வித்திருக் கிறேன். ஆனால், எனக்கு, மகிழ்ச்சியை தந்தது, இந்த, குற்றால டூர் தான் ...' என்று, அடிக்கடி சொல்வார்.
நகைச்சுவை நடிகராக ரசிகர்களால் அறியப்பட்டிருந்தாலும், அவருள் இருந்த அன்பும், குறும்பும் அசாத்தியமானது.கொஞ்சம் கூட கோபித்துக் கொள்ளாமல், எந்நேரமும் சிரித்தபடி இருப்பார். அருவியில், தன்னை சூழ்ந்தபடி, ஆர்வத்தால் கிள்ளவும், தள்ளவும் செய்யும் ரசிகர்களை பொறுத்துக் கொள்வார்.
தினமலர் - வாரமலர் குற்றால டூர் அறிவிப்பு வெளிவந்த உடனே, அவரே போன் செய்து, 'நானும் வருதுப்பா' என்று, தன் வருகையை, பதிவு செய்து விடுவார். டூர் ஆரம்பித்து, தொடர்ந்து பல வருடங்கள் வரை வந்தவர், பின், உடல்நிலை காரணமாக வர முடியாமல் போனது. கடைசி காலத்தில்(2002ல் இருந்து)நடமாடவே முடியாமல் சிரமப்பட்டார். ஆறுதல் தரும் விதத்தில், அவர் வீட்டிற்கு, சென்றிருந்த போது, அவரிடம் இருந்தவை, குற்றால டூரின் போது, எடுத்து கொடுத்த, புகைப்பட ஆல்பங்களும், அந்த நினைவுகளும் தான்.
'குற்றாலம் டூரில் கலந்து கொண்டது தான், என் வாழ்வின் வசந்த காலம்' என்று நினைவு கூர்ந்தவர், 'உடம்பு சரியானதும், அவசியம் வருகிறேன். முதலில் பார்த்த இடங்களை எல்லாம், மீண்டும் பார்க்க வேண்டும்; வாரமலர் வாசகர்களோடு அரட்டை அடிக்க வேண்டும் என்று, ஆசையாக இருக்கிறது...' என்று சொல்லியிருந்தார். ஆனால், காலமும், காலனும் அதற்கு வாய்ப்பு கொடுக்காததால், செப்.,16, 2012ல் இறைவனடி சேர்ந்து விட்டார்.
அவர் கூறியது போல, அவர், வாசகர்களுக்காக வந்த காலங்கள், வசந்த காலங்கள்தான். அவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பார்; அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார். எப்போதும், 'அத்தர்' என்ற, வாசனை திரவியத்தை பூசிக் கொள்வார்.
இந்த, அத்தரின் தூக்கலான வாசனை, அந்துமணியின் நண்பரும், ஆந்திரா பேங்கில் பணிபுரிபவருமான, அருணுக்கு, சுத்தமாக ஒத்துக் கொள்ளாது. ஆனால், அவரைத் தான், அருகில் வரச் சொல்லி, அடிக்கடி பேசுவார் லூஸ்மோகன். அருண், அவர் அருகில் சென்று, வாயையும், மூக்கையும், கைகளால் பொத்திக் கொண்டு பேசுவார். அதை, 'பவ்யம்' என்று, வாசகர்கள் நினைத்து இருப்பர்.
உண்மையில், அத்தர் வாடையினால், 'வயிற்றுக்குள்' இருப்பது, வெளியே வந்துவிடக் கூடாது என்ற, பாதுகாப்பின் அடையாளமே அந்த, 'பவ்யம்' என்பது, எங்களைப் போன்றோருக்குத்தான் தெரியும்.
டூர் ஆரம்பித்த இரண்டாவது வருடம், அதாவது, 1990 ம் ஆண்டு, 'நடிகர் லூஸ் மோகன் நம்முடன் வருகிறார்' என்று, அந்துமணி சொல்லி விட்டார். ஆனால், எங்கே, எப்படி வரப் போகிறார் என்று சொல்லவில்லை. டூர் ஆரம்பித்து, பஸ் மதுரையை விட்டு கிளம்பி விட்டது. அப்போதும், லூஸ்மோகன் வந்து சேரவில்லை.
திருமங்கலம் தாண்டி பஸ், டி.கல்லுப்பட்டியை நெருங்கிக் கொண்டிருந் தது. 'லூஸ் மோகன் இனி எங்கே வரப் போகிறார். 'அந்துமணி, தமாசுக்கு சொல்லியிருக்கிறார்' என்று மனதிற்குள் நினைத்தபடி, பஸ்சிற்குள் ஓடிக் கொண்டிருந்த வீடியோ திரைப்பட காட்சியில் வாசகர்கள் மூழ்கியிருந்த நேரம், பஸ் டிரைவர் பாட்சா, திடீரென, பிரேக் அடித்தார்.
பஸ் பயங்கரமாக குலுங்கி நின்றது. என்னவோ ஏதோவென்று, வாசகர்கள் அனைவரும், அதிர்ந்து, வெளியே எட்டிப் பார்த்தால்... அங்கே, பஸ்சின் எதிரே...
குற்றாலமும் வாஞ்சிநாதனும்...
குற்றாலம் என்றதும், தென்பொதிகை தென்றலும், தேகம் தழுவிச் செல்லும் பூஞ்சாரலும், மூலிகை வளம் கொண்ட அருவிகளும், வித்தை காட்டும் மந்திகளும், மலை முகடுகளை முத்தமிட்டு செல்லும் வெண் மேகங்களும் தான், நினைவுக்கு வரும்.
ஆனால், அதையும்தாண்டி, குற்றாலத்திற்கென்றே, பல சிறப்புகள் உண்டு. அந்த சிறப்புகளை, டூரின் போது, வாசகர்களிடம் குறிப்பிடுவதுண்டு. இனி, உங்களுக்காக, அந்த குறிப்புகள், இங்கே தொடர்ந்து இடம்பெறும்.
குற்றாலத்திலிருந்து, 5 கி.மீ., தூரத்தில் உள்ளது செங்கோட்டை. தமிழக-கேரளா மாநில எல்லையும் இங்குதான் ஆரம்பமாகிறது. இந்த பார்டர் பகுதியில் உள்ள புரோட்டா கடையை, (ரஹமத் புரோட்டா ஸ்டால்)தெரிந்து வைத்திருக்கும் அளவிற்கு, பக்கத்திலேயே சிலையாக நிற்கும், சுதந்திர போராட்ட வீரன் வாஞ்சிநாதனை பற்றி பலருக்கு தெரியாது.
செங்கோட்டையில், 1886-ம் ஆண்டு ரகுபதி - ருக்மணி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் வாஞ்சிநாதன். அவ்வூரிலேயே, தன் பள்ளிப் படிப்பை முடித்த வாஞ்சி, வ.உ.சிதம்பரம், சுப்ரமணிய சிவா போன்ற, தலைவர்களின் பேச்சால் பெரிதும் கவரப்பட்டார். இதனால், சுதந்திர உணர்வானது, அவரது இளம் ரத்தத்தில், இயல்பாக ஊறியது.
கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு, அரசாங்கத்தில் வேலை. ஆனால், ஆங்கிலேயர்களின் ஆட்சிமுறை, வாஞ்சிநாதனின் மனதை, வேலையில் ஒட்டவிடாததால், வேலையை உதறி, முழுமூச்சாக ஆங்கிலேயர்களுக்கு எதிராக களமிறங்கினார்.
இந்நிலையில், தான் மிகவும் நேசித்த, வ.உ.சி., சுப்ரமணிய சிவா போன்றோரை, கைது செய்து சிறையில் தள்ளினார் நெல்லை கலெக்டர் ஆஷ் துரை. இச்சம்பவத்தை கண்டித்து நடந்த போராட்டத்தின் போது, நடத்திய துப்பாக்கி சூட்டினால், நான்கு பேர் இறந்தனர்.
இது வாஞ்சியின் மனதை வாட்டியது. இதற்கு காரணமான, ஆஷ் துரையை, பழிவாங்க உறுதி பூண்டார்.
இதற்கான சரியான தருணம் வாய்த்தது. ஜூன் 17, 1911, காலை, மணியாச்சி ரயில் நிலையத்தில் இருந்து, கலெக்டர் ஆஷ், தன் குடும்பத்தாருடன், கொடைக்கானலுக்குச் புறப்படத் தயாராக இருந்தார். யாரும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில், ரயில் பெட்டிக்குள் நுழைந்து, திட்டமிட்டபடி, கலெக்டர் ஆஷை, சுட்டுக் கொன்றார் வாஞ்சிநாதன்.
வாஞ்சியை, சூழ்ந்து கொண்டனர் போலீசார். எதிரிகளின் கையில் சிக்கி, உயிரை விடுவதைவிட, தானே, தன் உயிரைப் போக்கிக் கொள்வது மேல் என்று கருதிய வாஞ்சி, நொடிப் பொழுதையும் வீணடிக்காமல், அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு, வீர மரணம் எய்தினார். அப்போது, அவருக்கு வயது, இருபத்தைந்துதான்.
இளம் வயதிலேயே, தான் கொண்ட லட்சியத்திற்காக, தனக்குத்தானே முடிவுரை எழுதிக் கொண்டார். ஆனால், அன்று, தமிழகத்திலுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களிடம் உறங்கிக் கொண்டிருந்த சுதந்திர வேட்கை, தன் துயிலைக் கலைத்தது. இதைக் குறிப்பிட்டு, 'சுதந்திரம் என்பது சும்மா வரவில்லை என்பதை, நாம் உணர்ந்தது போல, வரக்கூடிய தலைமுறைக்கும் உணர்த்துவோம்...' என்றதும், வாசகர்கள் பஸ்சைவிட்டு இறங்கி, வாஞ்சிநாதன் சிலைக்கு, ஒரு பெரிய வணக்கத்தை செலுத்தினர்.
***
— அருவி கொட்டும்
எல். முருகராஜ்
