PUBLISHED ON : செப் 22, 2013

திரும்பிப் பார்!
* திரும்பிப் பார்!
வெற்றிப் பாதையில்
வீறு நடை போட்டாலும்
கடந்து வந்த பாதையை
சற்றேனும் திரும்பிப் பார்!
* அன்னை இல்லையென்றால்
அகிலத்தில் நீயேது
அன்பு ஊட்டிய அவளை
முதியோர் இல்லத்திலே விடலாமா?
சற்றேனும் திரும்பிப் பார்!
* வேண்டியது கொடுக்க
வசதியில்லாவிட்டாலும்
நீ வேண்டியதை எல்லாம்
கொடுக்க அயராது உழைத்த
உன் அப்பாவை
தோள் கொடுத்து தாங்கியதுண்டா?
சற்றேனும் திரும்பிப் பார்!
* தன் நலம் கருதாது
உன் நலம் கருதி
உனக்கு அறிவூட்டி
உன் உயர்வில் பெருமையடைந்த
ஆசிரியன் போல்
யாருக்கேனும் வழிகாட்டினாயா நீ?
சற்றேனும் திரும்பிப் பார்!
* உன்னையே சுற்றிச் சுற்றி
உயிராய் உணர்வாய்
உன் துயரம் துடைத்திட்ட
நண்பன் நல்லாயிருக்கானா?
சற்றேனும் திரும்பிப் பார்!
* மரம் வெட்டி
ஜன்னல் செய்தோம்
கதவு செய்தோம்
பீரோ செய்தோம்
கட்டில் செய்தோம்
ஒரு மரமாவது நட்டு வைத்தோமா?
சற்றேனும் திரும்பிப் பார்!
* குளத்து நீரில் குளித்தோம்
ஊரணி நீரைக் குடித்தோம்
ஆற்று நீரில் பயிர் செய்தோம்
ஏரி நீரில் உல்லாச பயணம் போனோம்
என்றேனும் எதையேனும்
சுத்தப்படுத்தினோமா?
சற்றேனும் திரும்பிப் பார்!
* திரும்பிப் பார்...
இருளடைந்த வாழ்க்கை பலருக்கு
சிறு வெளிச்சமாவது அதில்
ஏற்ற முடியுமாவென
சற்றேனும் திரும்பிப் பார்!
— சுபானு, கழனிவாசல்.
