தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பசுமை நிறைந்த நினைவுகளே... - வெள்ளி விழா கண்ட குற்றால டூரின் அனுபவங்கள்! (1)

பசுமை நிறைந்த நினைவுகளே... - வெள்ளி விழா கண்ட குற்றால டூரின் அனுபவங்கள்! (1)

பசுமை நிறைந்த நினைவுகளே... - வெள்ளி விழா கண்ட குற்றால டூரின் அனுபவங்கள்! (1)


PUBLISHED ON : செப் 01, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 01, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தினமலர்-வாரமலர் வாசகர்களுக்கான குற்றால சீசன் டூர் இப்போதுதான் துவங்கியது போல இருக்கிறது; அதற்குள் இருபத்தைந்து டூர்கள் நடந்து விட்டன. டூரின் ஆரம்பம் முதல் விடாமல் கலந்து கொண்டு வருபவர்கள் இரண்டு பேர். ஒருவர் வாரமலர் வாசகர்களின் நெஞ்சில் நிறைந்துள்ள அந்துமணி; இன்னொருவர் சாட்சாத் நானேதான்.

கடந்த இருபத்து நான்கு ஆண்டுகளில், வாசகர்களிடம் இருந்து கற்றதும், பெற்றதும் நிறைய. வழக்கமாக டூர் நடைபெறும் மூன்று நாட்களிலும், வரக்கூடிய வாசகர்களில் பெரும்பாலானோருக்கு, அந்துமணி யார் என்பதை கண்டுபிடிப்பதிலேயே நேரம் போய்விடும். அவர்தான் அந்துமணி என்பது தெரியாமலேயே மூன்று நாட்களும் பேசிப்பழகி, ரயில் நிலையத்தில் விடைபெறும் போது, 'அந்துமணியை பார்க்கவில்லை என்ற ஒரே ஓரு குறைதான்...' என்று, அவரிடமே சொல்லிவிட்டு செல்வர். ஆனால், அடுத்த வாரம் வரும் வாரமலர் இதழில் குற்றால சீசன் டூர் கட்டுரை தொடர்பான படங்களில், தங்களுக்கு பக்கத்திலேயே நிற்கும் அந்துமணியின் படத்தை பார்த்துவிட்டு அந்த ஒரு குறையும் தங்களுக்கு இல்லை என்பதை தெரிந்து கொள்வர்.

சென்ற ஜூலை, 23,24,25 தேதியன்று நடைபெற்ற வெள்ளி விழா சிறப்பு குற்றால டூரின் விசேஷமே, அந்துமணி யார் என்பது தெரிந்து, அவருடன் வாசகர்கள் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது என்பதுதான்.

அருவி குளியலையும், உணவையும் கூட மறந்து அவரையே சுற்றிச் சுற்றி வந்து பேசினர், பேசினர் பேசிக்கொண்டே இருந்தனர். பல ஆண்டுகளாக தங்கள் மனதில் பூட்டி வைத்திருந்ததை எல்லாம், மடை திறந்தாற் போல கொட்டினர். குற்றாலம் டூர் தொடர்பாக முன்பு ஏற்பட்ட அனுபவத்தையும் இப்போது உள்ள அனுபவத்தையும் அவர்கள் விவரித்த போது, அந்த பழமையான விஷயங்கள் எவ்வளவு சுவாரசியமானவை என்பது புரிந்தது.

உடனடியாக என்னை அழைத்த அந்துமணி 'கடந்த 24 வருடங்களில், குற்றால டூர் தொடர்பான அனுபவங்களை தொடராக எழுதுங்கள்' என்று சொல்லி விட்டார். இதோ அவரது ஆசியுடன் தொடரையும் துவங்கி விட்டேன்.

அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி நான் எடுத்து தரும் படங்களையும், குறிப்புகளையும் வைத்து அந்துமணி ஒரு அருமையான கட்டுரையாக்கி விடுவார். மேலும், இந்த டூர் என்பது வாரமலர் வாசகர்கள் ஒவ்வொருவரின் கனவாக இருக்கும் என்பதையும், இந்த அளவிற்கு பேசப்படும் என்றெல்லாம் எதிர்பார்க்காததால், நான் எவ்வித குறிப்பும் பெரிதாக வைத்துக் கொள்ளவில்லை.

என் மனதில் உள்ள பழைய நினைவுகளின் அடிப்படையிலும், வாரமலர் செல்வி அவர்கள் பரணில் இருந்து எடுத்துக் கொடுத்த பழைய வாரமலர் இதழ்களின் துணையோடும் கட்டுரை செல்ல இருக்கிறது. கட்டுரைக்கு தேவையான பழைய படங்களை கொடுத்து உதவிய வாசகர்களுக்கு மிகவும் நன்றி. கட்டுரைக்கு உதவும் வகையில் பழைய குற்றால டூர் படங்களையும், குறிப்புகளையும் கொடுத்து உதவ இருக்கிற வாசகர்களுக்கும் இப்போதே நெஞ்சம் நிறைந்த நன்றிகளை சொல்லிக் கொள்கிறேன்.

ஆரம்பத்தில், மதுரையில் வாசகர்களை வழியனுப்ப நடந்த நிகழ்வை படமாக்குவதற்கு மட்டுமே நான் அழைக்கப்பட்டேன். பின்னர் நானே மூன்று நாள் குற்றால முழு நிகழ்வையும் படமெடுக்க அனுமதிக்கப்பட்டேன். அதன் பின் இந்த நிகழ்வை நடத்திச்செல்லும், 'கேப்டன்' பதவியும், அந்துமணியால் கொடுக்கப்பட்டு, ஆசீர்வதிக்கப்பட்டேன்.

இந்த டூர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு, வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தவரே அந்துமணிதான். அவர் கோடு போட்டு கொடுத்த விஷயத்தில்தான், இன்றைக்கு ரோடு போட்டுக்கொண்டு இருக்கிறோம். ஆரம்பத்தில், இதற்காக அனைத்து சுமைகளையும் அப்போது அவரே தன் தோள்களில் சுமந்தார். இதற்காக எத்தனை ஆலோசனை கூட்டம் நடத்தி, எவ்வளவு விரிவாக சிந்தித்தார் என்பதெல்லாம் தனிக்கதை.

இந்த பொறுப்பை என்னிடம் கொடுக்கும் போது, ஒரே ஒரு வார்த்தை தான் சொன்னார்... அது, 'வாசகர்களைப் பொறுத்தவரை மாப்பிள்ளை வீட்டார் போல, நம்மைப் பொறுத்தவரை, பெண் வீட்டார் போல, பெண் வீட்டாராகிய நாம் நடத்தும் திருமணத்திற்கு வரும் வாசகர்களாகிய மாப்பிள்ளை வீட்டாரை, கொஞ்சம் கூட முகம் கோணாமல் கவனித்துக் கொள்ள வேண்டும்' என்றார். அந்த வார்த்தை பசுமரத்தாணி போல, பதிந்து போனதன் காரணமாக, தேர்வு செய்யப்பட்ட வாசகர்களை, பத்திரிகை வைப்பது போல, வீட்டிற்கே போய் நேரில் அழைக்க ஆரம்பித்தேன்.

அதே போல இன்றைக்கு ஏசி பஸ், தனித்தனி காட்டேஜ், அருவியில் விசேஷக் குளியல், அதற்கென தனி சீருடை, கலை நிகழ்ச்சி, நகைச்சுவை, நாடகம் என்று கலக்கலாக நடக்கும் டூர், ஆரம்பத்தில் எப்படியெல்லாம் நடந்தது தெரியுமா?

குற்றாலத்தில் அப்போது தங்குவதற்கு பெரிதாக விடுதிகள் கிடையாது. குற்றாலம் நகரத்திற்கு சொந்தமான பழங்கால விடுதி மட்டுமே உண்டு. இந்த விடுதிக்கு வாசகர்கள்தான் புதியவர்கள். ஆனால், இங்குள்ள சேட்டைக்கார குரங்குகளுக்கு, விடுதி ரொம்பவும் பழசு மட்டுமல்ல, மிகவும் பழகிப்போனதும் கூட.

இதன் காரணமாக என்ன நடந்தது என்பதை அடுத்த வாரம் சொல்கிறேன்...

எஸ்.ஆர்.சாந்தி அன்றும், இன்றும்!

இந்த 2013 ம்ஆண்டு சிறப்பு வாசகராக கலந்து கொண்டவர்களில் மதுரை எஸ்.ஆர்.சாந்தியும் ஒருவர். இவர் கடந்த 1991-ம் ஆண்டு தன் அண்ணன் சரவணனுடன் கலந்து கொண்டார்.

மிகவும் அமைதியான சுபாவம் கொண்ட இவருக்குள் அப்போது இரண்டு கவலைகள் இருந்தன... ஒன்று, படித்த படிப்பிற்கு வேலை கிடைக்க வேண்டும். இரண்டாவது தட்டிப்போகும் திருமணம் நடக்க வேண்டும் என்பது.

முத்து முத்தான இவரது கையெழுத்தை பார்த்து ரசித்த அந்துமணி, டூரின் போது நேரில் அழைத்து, 'அடுத்து நான் உன்னை சந்திக்கும் போது உன் கவலைகள் எல்லாம் பறந்து போயிருக்கும்...' என்று, ஆசீர்வதித்தார்.

அடுத்த சந்திப்பு என்பது, கிட்டத்தட்ட 23 வருடங்கள் கழித்து, சென்ற ஜூலை மாத டூரின் போதுதான் நிகழ்ந்தது. இந்த சந்திப்பின் போது, அவர் ஆசீர்வதித்தது போலவே இரண்டு விஷயங்களும் நடந்தேறியிருந்தன.

கடந்த, 91-ம் வருட டூர் முடித்து திரும்பியவருக்கு, அரசு பள்ளியில் வேலை கிடைத்து, படிப்படியாக உயர்ந்து தற்போது அப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக இருக்கிறார்.

அடுத்ததாக வெளிநாட்டில் வேலை பார்க்கும், ஜி.ஜி.கோகுலன் என்பவர், இவரை கரம் பிடிக்க, திருமதி சாந்தி கோகுலனாகி விட்டார். மகிழ்ச்சியான குடும்பத்தின் அடையாளமாக தோள் தொடும் உயரத்திற்கு வளர்ந்துள்ள இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

அதிலும் மூத்தவர் ஸ்ரீநிதி அற்புதமான பாடகியும் கூட. முதல் நாள் டூரில் பஸ்சுக்குள் ஏறி மைக்கை பிடித்தவர், 'ஐயயோ... ஆனந்தமே, பஸ்சுக்குள்ளே ஆரம்பமே...' என்று, கும்கி பட பாடலை கொஞ்சம் மாற்றி பாடி கலகலப்பூட்டியவர். இளையவர் ஹேமாஸ்ரீ குட்டிக்கதைகள், ஜோக்குகள் சொல்லி அனைவரின் செல்லப்பிள்ளையாக மாறியவர்.

'அந்துமணி சார்... இவுங்கதான் என் இரண்டு செல்லங்கள்...' என்று, டூரின் போது அறிமுகம் செய்த போது, 'இது உன் செல்லங்கள் மட்டுமல்ல... தினமலரின் செல்லங்கள்' என்று, இரண்டு பேரையும் அந்துமணி அன்புடன் வாழ்த்தினார்.

எஸ்.ஆர். சாந்தி பற்றிய இன்னொரு சுவாரசிய தகவல், 91-ம் ஆண்டு வாரமலர் சார்பாக டூரில் கலந்து கொண்டவர், அதன்பிறகு 23 வருடங்களாக குற்றாலம் பக்கமே போகவில்லை. இத்தனைக்கும் மதுரைக்கும்-குற்றாலத்திற்கும் ரயில் கட்டணம் 30 ரூபாய் தான். ஏன் என்று கேட்ட போது '91-ம் வருட அனுபவம் மட்டுமே என் நெஞ்சில் நிற்க வேண்டும் என்பதால் தான்' என்று, கூலாக சொன்னவர், 'வாரமலர் தந்த குற்றால டூர் அனுபவத்தை விட சிறந்த அனுபவத்தை தருவதற்கு வாரமலர் இதழால் மட்டுமே முடியும் என்பதால், 23 வருடம் கழித்து இப்போது வந்துள்ளேன்...' என்றார்.

***

— அருவி கொட்டும்.

எல். முருகராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us