sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

பசுமை நிறைந்த நினைவுகளே (11)

/

பசுமை நிறைந்த நினைவுகளே (11)

பசுமை நிறைந்த நினைவுகளே (11)

பசுமை நிறைந்த நினைவுகளே (11)


PUBLISHED ON : நவ 17, 2013

Google News

PUBLISHED ON : நவ 17, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடந்த, 92-ம் ஆண்டு, இரண்டாவது முறையாக நடைபெற்ற குற்றால டூரில் கலந்து கொண்ட வாசகர்கள் அந்துமணியை சந்திக்க வேண்டியதன் அவசியத்தை சில விஷயங்களோடு விளக்கினர். அது என்ன விஷயம் என்று இந்த வாரம் சொல்வதாக கூறியிருந்தேன்.

இனி, அந்த விஷயங்கள்...

நாச்சியார் கோவிலில் இருந்து ருக்மணி என்ற வாசகி வந்திருந்தார். எப்போதும் மஞ்சள் அல்லது சிவப்பு சேலை கட்டி நெற்றி நிறைய விபூதி,பெரிய குங்குமப் பொட்டுடன் மங்களகரமாக, ஒரு பெண் பூசாரி போலவே இருப்பார். கையில் ஐந்தாறு மஞ்சள் பை வேறு வைத்திருந்தார். அதெல்லாம் கோவில் பிரசாதங்கள் என்றும், அனைத்தையும் அந்துமணியிடம் மட்டுமே கொடுக்க வேண்டும் என்றும் சொன்னார்.

காரணம் கேட்டபோது... அவருக்கு ஜோசியத்திலும் நிறைய பற்று உண்டாம். குற்றால டூருக்கு கூப்பன் போட்டு கிடைக்காவிட்டால், மனது ஒடிந்து விடும் என்பதால், டூருக்கு வாய்ப்பு இருக்கும் என்றால் கூப்பன் போடுவது, இல்லாவிட்டால் பேசாமல் இருப்பது என்று முடிவெடுத்து இருந்திருக்கிறார். சரி வாய்ப்பு இருக்கா, இல்லையா என்பதை எப்படி தெரிந்து கொள்வது? அதற்கு, அவர் நம்பிய ஜோசியத்தில் இறங்கி விட்டார்.

பலவித ஜோசியர்களிடம் அணுகி, நேரடியாவே, 'நான் குற்றால சீசன் டூருக்கு தேர்ந்தெடுக்கபடுவேனா, மாட்டேனா...' என்ற கேள்வியை வைத்திருக்கிறார்.'நீ நினைச்சது நடக்கும்மா. ஆனா...' என்று இழுத்திருக்கிறார். 'இந்த இழுவையெல்லாம் வேண்டாம், நடக்கும், நடக்காது என்று மட்டும் பதில் சொல்லுங்க...' என்று கறாராக கேட்டு இருக்கிறார்.

'இதற்கு பதில், ஜோசியத்தில் இல்லை...' என்று பலரும் கைவிரித்துவிட, கடைசியில் மயிலாடுதுறை போய் ஓலைச்சுவடி ஜோசியம் எல்லாம் பார்த்து இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல், சொந்த ஊரிலேயே ஒரு பெரிய ஜோசியர் இருப்பது நினைவு வர, அவரை போய் பார்த்து இருக்கிறார்.

அவர், ருக்மணியிடம், 'இந்த, 92-ல், நீ டூர் போகும் பாக்கியம் கட்டாயம் உண்டு...' என்று சொல்லி, ஆசீர்வாதித்து, கணிசமான தொகை மற்றும் பரிகார செலவு எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டார். அந்த நம்பிக்கையுடன் டூர் கூப்பன் போட்ட ருக்மணி தேர்வாகவில்லை. ரத்தம் கொதிக்க, உடல் உஷ்ணம் அடைய ஜோசியரை 'நல்லபடியாக' நாலு வார்த்தை வாழ்த்த, நாள் பார்த்துக்கொண்டிருந்தார்.

அச்சமயத்தில் தான், அவரே எதிர்பாராதவிதமாக இரண்டாவது டூர் கூப்பன் வெளியாகி, அதற்கு விண்ணப்பித்து, தேர்வாகி விட்டார், ஆக, 92-ல் டூர் போகும் பாக்கியம் அவருக்கு கிடைத்து விட்டது, ஜோசியமும் பலித்து விட்டது. 'நான் வணங்கிய கடவுள் என்னை கைவிடவில்லை...' என்று பல ஊர் கோவில்களுக்கு போய் அந்த கோவில் பிரசாதத்தை எல்லாம் மஞ்சள் பையில் சுமந்தபடி கொண்டு வந்திருந்தார், 'அந்துமணியிடம் தான் கொடுப்பேன்' என்று அடம்பிடித்தார், பையை வாங்கிப்பார்த்த போது உள்ளே இருந்த பொருட்கள் எல்லாம் ஒன்றாகி, பஞ்சாமிர்தமாக காணப்பட்டது; பையைவிட்டு பிரிய மாட்டேன் என்று வேறு அடம் பிடித்தது.

அடுத்ததாக சென்னையைச் சேர்ந்த ரோஸ்லின், எண்பது பக்க கோடு போட்ட நோட்டை எடுத்து வைத்தார். நோட்டு முழுவதும் முத்து, முத்தான கையெழுத்தால் நிறைய கேள்விகளை எழுதியிருந்தார். இந்த கேள்விகள் எல்லாம் அவர் தபால் மூலம் அந்துமணியிடம் கேட்டு, இதுவரை பதில் வரவில்லையாம், 'ஏன் பதில் வரவில்லை; என் கேள்விகளில் என்ன குறை?' என்று அந்துமணி முன் வாசித்துக்காட்டி, பதில் பெற வேண்டும் என்று அந்த நோட்டை கொண்டுவந்து இருந்தார்.

'அவ்வளவுதானே... என்று அந்த நோட்டை இப்படி கொடுங்கள்...' என்று கேட்ட போது, 'இருங்க இது கேள்வி நோட்டு, இன்னும் நான் எழுதியுள்ள கதை, கவிதை நோட்டெல்லாம் பாக்கி இருக்கு...' என்று இரண்டு குயர் நோட்டுகளை எடுத்துப் போட்டார். லேசாக மயக்கம் வந்தது என்னவோ உண்மை.

அடுத்ததாக, திருச்சியில் இருந்து வந்திருந்த லோகநாதன், 'சார் நான் குற்றாலம் பின்னணியில் ஒரு மர்ம கதையை வச்சிருக்கேன், அந்த கதையை எப்படி முடிக்கிறதுன்னு ஒரு சின்ன குழப்பம். அந்துமணி ஐயாட்ட சொன்னா, சரியான முடிவை சொல்வார். நல்ல தொடரா வரும். கதையைப்பத்தி நேத்து ராத்திரி துாக்கம் வராம சிந்தித்த போது, நானே பயந்துட்டேன்னா பார்த்துக்குங்களேன், கதை அவ்வளவு பயங்கரமானது...' என்று அவர், 'பில்ட்--அப்' கொடுத்ததுடன் நிற்காமல், 'இப்ப அந்துமணி கிடைச்சார்ன்னா அவர்ட்ட சொல்றேன், இல்லைன்னா ராத்திரி எல்லாரும் துாங்கின பிறகு வந்து, உங்ககிட்ட சொல்றேன்...' என்று அவர் கூறிய போது, எனக்கு பயம் பிடித்துக் கொண்டது.

தனியாக அந்துமணி கிடைத்தால் அவரிடம் பகிர்ந்து கொள்ள இப்படி பல பல விஷயங்களுடன் வாசகர்கள் காத்திருப்பதை அறிந்த அந்துமணி, அடுத்து என்ன செய்வது என்ற யோசனையில் இருந்த போது, ஓரு அவசர அழைப்பு வர, 'அனைவரையும் தபால் எழுதச் சொல்லுங்கள் அவசியம் தொடர்பு கொள்கிறேன்...' என்று சொல்லி, கிளம்பி விட்டார்.

எல்லாம் சரி... வாசகர் சொன்ன 'திடுக்' கதையை நான் கேட்டேனா இல்லையா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால், கதையில் ஏற்படும், 'திடுக்' சம்பவங்களை மிஞ்சும் வண்ணம், 93-ம் வருட டூர் சம்பவங்கள் நடந்தன. அது என்ன சம்பவம்... அடுத்த வாரம் சொல்கிறேன்.

குற்றாலமும் தேனருவியும்...

குற்றாலம் மெயின ருவியில் இயற்கையை ரசித்தபடி மலை மேல் ஏறி சிற்றருவி, செண்பகா அருவிகளைத் தாண்டிச் ஆறு கிலோ மீட்டர் துாரம் சென்றால், தேனருவி வரும். செண்பகா அருவி வரை பாதை உண்டு. அதற்கு மேல் இரண்டு கிலோ மீட்டர் துாரத்திற்கு பாதை கிடையாது. கரடு முரடான பாறை வழியாகத்தான் செல்ல வேண்டும்.

குற்றாலம் அருவிகளிலேயே அபாயகரமான அருவி இதுதான். இங்கு போவதும் சிரமம்; குளிப்பது அதைவிட சிரமம். இந்த அருவிக்கு மேற்புரத்தில் இருந்துதான் தண்ணீர் ஊற்றெடுத்து, அருவியாக பிரவாகமெடுக்கிறது. இந்த இடம் தேனீக்கள் கூடுகட்டி வாழும் பகுதி என்பதால், தேனருவி என்றழைக்கப்படுகிறது. இந்த தேனீக்கள் சாதாரணமானவை அல்ல; கடும்விஷம் கொண்ட மலைத்தேனீ. இதன் விஷம் எவ்வளவு கடுமையானதோ, அதே அளவிற்கு இங்குள்ள மலைத்தேன் மிகுந்த சுவையுள்ளது.

தேனருவியில் போய் குளித்துவிட்டு வருவதை வீரமாக கருதிச் செல்லும் இளைஞர்கள் சிலர், அருவியின் அபாயகரமான தடாகத்தில் சிக்கி இறந்த சம்பவங்களும் நடந்துள்ளன. அதனால், இப்போது எல்லாம் சீசன் நேரத்தில், இந்த அருவிக்கு செல்ல யாரையும் அனுமதிப்பது இல்லை.

-அருவி கொட்டும்.

-எல்.முருகராஜ்






      Dinamalar
      Follow us