
அன்பு சகோதரிக்கு,
எனக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் முடிந்து விட்டன. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நாங்கள் சமுதாயப் பார்வையில், ஊர் மெச்சும் தம்பதிகள். ஆனால், என் கணவரைப் பற்றி சொல்கிறேன்... எப்படியோ இரண்டு குழந்தைகளைப் பெற்று விட்டேன். அவர் ஆசையால் அல்ல, என்னுடைய ஆசையால்.
திருமணம் முடிந்து, 19 ஆண்டுகள் என் கணவர் ஆசையா, அன்பா என் கையையோ, தோளையோ தொட்டது கூட கிடையாது. நான், அரசு வேலையில் இருக்கிறேன்.
எத்தனை மாதங்களானாலும் சஞ்சலம் இல்லாமல் இருப்பார். ஆனால், நான் தான் அவரை இழுப்பேன். நீண்ட இடைவெளிக்கு பிறகும், நானே கூப்பிட வேண்டுமே என்று, என் மனம் அழுகிறது.
நானும் பெண்தானே... எனக்கு உணர்ச்சிகள் இல்லையா? மாதக்கணக்கில் இடைவெளி இருப்பதால் உடம்புக்கும் தொந்தரவு ஏற்படுகிறது; மனதுக்கும் சந்தோஷமில்லை. வேலை செய்ய முடிவதில்லை. தற்கொலை செய்து கொள்ளலாம் என்றால், இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.
எனக்கு அன்புதான் வேண்டும். உறவு கூட வேண்டாம். என் மனதை ஒருமுகப்படுத்தி வேலை செய்ய முடியவில்லை. நான் மன நல வைத்தியரிடம் சிகிச்சை எடுக்கலாமா அல்லது லேடி டாக்டரிடம் செல்லலாமா?
பின்குறிப்பு: கணவர் நல்ல வேலையில் இருக்கிறார். ஊர் பார்வைக்கு நல்ல குணம்.
அன்பு சகோதரி,
உங்கள் கடிதம் கண்டேன்.
இன்றைக்கு உங்களிருவருக் கிடையே இருக்கும் இந்த பிரச்னை - பல தம்பதியர்களுக்கிடையே உள்ளது தான். சில இடங்களில், ஆண்கள் இப்படி எந்தவொரு உணர்வையும் வெளிக்காட்டாமல் இருப்பர். இன்னும் சில இடங்களில், பெண்கள், இது போல இருப்பர். இதற்காக அவர்களிடம் கோபித்தோ, வருத்தப்பட்டோ பலனில்லை சகோதரி...
அவரவர்கள் வளர்ந்த சூழ்நிலை காரணமாக இருக்கலாம். வீட்டில் பெற்றவர்கள் ஒருவருக்கொருவர் பேசாது, எதிரெதிர் திசையைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தால், அந்தச் சூழ்நிலையில் வளரும் குழந்தைகள் இப்படி இருக்கும் அல்லது இளம் வயதில் இது போன்றதொரு உணர்வுக்கு, பெற்றோர் பயங்கரமா எதிர்ப்பு தெரிவித்து, அவமானப்படுத்தி இருந்தாலும், நியாயமான உணர்வுகள், அப்படியே பொங்கிய பாலில் நீர் தெளித்தாற் போல அடங்கியிருக்கலாம்.
இன்னும் சில வீடுகளில் பூஜை, விரதம் இவைகளில் நாட்டம் இருப்பதால், 'இதெல்லாம் பெரிய குற்றம்' என்கிற ரீதியில் வளர்த்திருப்பர். இயல்பிலேயே கூச்ச சுபாவமுடையவர்களாகவும் சிலர் இருப்பர்.
இது, எதுவுமே இல்லாது, வேறு பெண்ணின் மீது ஆசை வைத்து, அது நிறைவேறாமல், சதா அந்த நினைப்பே மனசுக்குள் துன்புறுத்திக் கொண்டிருக்கலாம்.
இதெல்லாம், நியாயமான, மனசைப் பொறுத்த சாத்தியக் கூறுகள். இதற்கு அப்பாற்பட்டு, உடல் ரீதியாக பிரச்னை ஏதும் இருந்தாலும் தாம்பத்யத்தில் நாட்டமில்லாது போகலாம்.
எது எப்படியோ... கணவரின் அன்பும், அரவணைப்பும் இருந்தால் கூட போதும். உடல் கூட இரண்டாம்பட்சம் தான் என்று எழுதியிருக்கிறீர்கள். ஒரு பெண்ணின் சாதாரண எதிர்பார்ப்புதான் இது. இதற்காக தற்கொலை முயற்சியில் எல்லாம் ஈடுபடுவது முட்டாள்தனம். மனநல வைத்தியரிடம் போகிற அளவுக்கு உங்களிடம் பிரச்னை எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
கணவரின் மனசில் உள்ள உறுத்தலை, அப்படி ஏதேனும் இருந்தால், மெதுவாக அதை நீக்க முயற்சி செய்யுங்கள். ஒரு நல்ல நண்பனுடன் பழகுவது போல பழகுங்கள். எந்தவித எதிர்பார்ப்புமின்றி, நம்பிக்கைக்குரிய சினேகிதியாக நீங்கள் மாறும் போது, மரத்து விட்ட மனசில் கூட ஈரம் தோன்றும்.
'இதற்காக' மட்டும் தான் கணவரை, உங்கள் பக்கம் திருப்ப வேண்டும் என்று நினைப்பதைத் தவிருங்கள். முதலில் அவருக்கு என்னவெல்லாம் பிடிக்கும், எதெல்லாம் பிடிக்காது என் பதைக் கூர்ந்து கவனியுங்கள். 'பதினெட்டு வருடங்களாகக் குடித்தனம் செய்கிறேன்; இது கூடவாத் தெரியாது' என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது...
என்ன செய்வது... பல சமயங்களில் எத்தனையோ ஆண்டுகளாக ஒரே கூரையின் கீழ் சேர்ந்து வாழ்ந்தாலும், நம் அன்பிற்குரியவர்களின் மனசை புரிந்து கொள்ளத் தவறி விடுகிறோம். அப்படியே புரிந்தாலும், நமக்கும் அதில் பிடித்தம் இருந்தால்தான் அதை ஏற்றுக் கொள்கிறோம்.
கணவருக்கு, ஜி.என்.பி., எம்.எல்.வி., போன்ற இசை மேதைகளின் சங்கீதம் பிடித்திருக்கும். மனைவிக்கு முகேஷ், லதா மங்கேஷ்கர் பிடிக்கும் அல்லது - சங்கீதம் என்றாலே, 'கிலோ என்ன விலை' என்று கேட்கிற ரகமாக இருக்கலாம்.
மனைவிக்கு தன் கணவர், தன்னுடன், சினிமாவுக்கும், ஓட்டலுக்கும் வர வேண்டும்; ஆபீசிலிருந்து வரும் போதே மல்லிகைப்பூ, அல்வா சகிதம் - சினிமா கதாநாயகன் போல ஆர்வம் ததும்ப ஓடி வர வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கலாம்; கணவருக்கு, மூன்றாமவர், அது, தன் இரண்டு வயசுக் குழந்தையாகவே இருந்தாலும் அதனெதிரில் பெண்டாட்டியின் பக்கத்தில் நிற்பது கூட லஜ்ஜைக்குரிய விஷயமாக இருக்கலாம்.
இருபத்தியைந்து அல்லது முப்பது வயசு வரையில் அம்மாவின் சமையல், அப்பாவின் கெடுபிடி, அக்கா, அண்ணன்களின் விரட்டல், பள்ளியில் - கல்லுாரியில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காமல், அப்படியே கிடைத்தாலும் உடனே வேலை கிடைக்காமல், வேலை கிடைத்தாலும் அதிலே போட்டி, பொறாமை, அடுத்துக் கெடுத்தல் இத்தனையையும் சமாளித்து, தம்பிகள் படிப்பு, தங்கைகள் திருமணம், பெற்றோர் வியாதி இப்படி அத்தனையிலும் பந்தாடப்பட்டு, பிறகு உங்களிடம் வரும் மனிதர் - ஒன்று, அடிபட்டக் குழந்தையாக உங்கள் மார்பில் ஒண்டி கொள்பவராக இருப்பார். இல்லாவிட்டால், தான், தன் சுகம் இது மட்டுமே கருத்தில் கொள்பவராக இருப்பார். நடுநிலையாக இருந்து, 'மனைவிக்கும் மனசு என்று ஒன்று உண்டு; அவளது விருப்பு, வெறுப்பிலும் நாம் அக்கறை காட்ட வேண்டும்' என்று எண்ணுகிறவர்கள் மிகச் சிலரே...
கணவர் - வாழ்க்கையில் எந்தப் பாதையில், எப்படி போராடி வந்திருக்கிறார் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். ஆறுதலா, நட்பா நாலு வார்த்தை... 'எது வந்தாலும் நான் இருக்கிறேன்' என்கிற நம்பிக்கை... பிறகு, அவரது ருசியறிந்து இதமாக பரிமாறுங்கள்; உணவு, - உணர்வு இரண்டையுமே!
உங்களது நியாயமான உணர்வுகளை நான் மதிக்கிறேன். 'கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்' என்று நான் சொல்வது சரியில்லை... அதே சமயம், மனசை வேறு சில வழிகளில் திசை திருப்பிக் கொள்ள முயற்சியுங்கள் என்று சொல்லலாம் இல்லையா?
இரண்டு குழந்தைகள்... அவர்களை தங்கமா வளர்த்து ஆளாக்குங்கள். நிறைய, நல்ல புத்தகங்களைப் படியுங்கள். புத்தகங்களைப் படிப்பதற்கு முன் கணவரைப் படியுங்கள். 'கணவர்' என்கிற புத்தகத்தையும், 'மனைவி' என்கிற நாவலையும் நிறைய பேர் எடுத்துப் படிக்காமலேயே, தூசி படிந்து, செல்லரிக்க வைத்து விடுகின்றனர். அப்புறம், 'அவசரத்துக்கு, அவசியத்துக்கு' என்று புத்தகத்தைப் புரட்டும் போது, அது மக்கி, 'பொல பொல'வென உதிரத் துவங்கி விடுகிறது.
அன்பைக் கொடுங்கள், அரவணைப்பைக் கொடுங்கள், ஆறுதலா, ஆதரவா இருங்கள். தானாகவே, நீங்கள் கேட்டதெல்லாம் கிடைக்கும்.
-- அன்புடன்
சகுந்தலா கோபிநாத்.

