/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நான் சுவாசிக்கும் சிவாஜி! (7) - ஒய்.ஜி. மகேந்திரா
/
நான் சுவாசிக்கும் சிவாஜி! (7) - ஒய்.ஜி. மகேந்திரா
PUBLISHED ON : நவ 17, 2013

தமிழகத்தை சேர்ந்த, சுதந்திர தியாகிகளில், வ.உ.சிதம்பரனார் மிகவும் முக்கியமானவர். அவர் வாழ்க்கை போராட்டம் தான், சிவாஜி நடித்த, கப்பலோட்டிய தமிழன் படம். என்னை மாதிரி ஆங்கில பள்ளிகளில் படித்தவர்களுக்கு, வ.உ.சி., பற்றி அதிகம் தெரியாது.
என் தந்தை, அப்போது, பம்பாயில், மத்திய அரசு பணியில் இருந்தார். கப்பலோட்டிய தமிழன் படத்திற்காக, கப்பல்கள் சம்பந்தப்பட்ட சில காட்சிகளை படமாக்க, சிவாஜியும், இயக்குனர் பி.ஆர்.பந்துலுவும், அவரது குழுவினரும், அப்போது, பம்பாய் வந்திருந்தனர்.
அப்படக்குழுவினருக்கு, பம்பாய் துறைமுகத்தில் படப்பிடிப்பு நடத்த, அரசு அனுமதி பெற, உதவினார் என் தந்தை.
ஒய்.ஜி.பி., பம்பாயில் இருந்த போது, நாடகத் துறையில் உள்ள தமிழர் களை ஒன்று திரட்டி, நாடக குழு ஆரம்பித்து, அங்கு, தமிழ் நாடகங்களை மேடையேற்றினார். ஒருமுறை ஷூட்டிங்குங் காக, பம்பாய் வந்திருந்த சிவாஜியிடம், அன்றைய நாடகத்திற்கு தலைமை வகிக்க ஏற்பாடு செய்திருந்தார். சாதா ரணமாக நூறு, இருநுாறு பேர் தான் பார்வையாளர்களாக வருவர். ஆனால், சிவாஜி வருகிறார் என்றவுடன், அன்று, ஆயிரக்கணக்கான பேர் திரண்டு வந்திருந்தனர். சிவாஜி அன்று வர ஒப்புக் கொண்டதே நாடக கலைஞர்களுக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் தான் காரணம். பொதுவாக அந்த கால கட்டத்தில், எல்லா பெரிய நடிகர்களுமே, நாடக கலைஞர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பர்.
அன்று மாலை, நாடகத்தை ஆரம்பத்திலிருந்து பார்த்து ரசித்த சிவாஜி, நாடகத்தின் முடிவில் பேசிய போது, ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் விளக்கி, அதில் நடித்திருந்த கலைஞர்களையும் பாராட்டினார். கதாநாயகியாக ஒரு ஆண் நடிகர் நடித்திருந்ததை குறிப்பிட்டு, 'என் கடந்த கால நினைவுகள் எல்லாம், அலை மோதுகின்றன. நானும், நாடகத்தில் போட்ட முதல் வேடம் பெண் வேடம் தான்யா...' என்று அவர் பேசிய போது, பயங்கர ஆரவாரம், கை தட்டல் எழுந்தது.
மருத நாட்டு வீரன் படத்தின் படப்பிடிப் பிற்காக, புனே வந்திருந்த சிவாஜி, அங்கிருந்து, கப்பலோட்டிய தமிழன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள, பம்பாய் வந்திருந்தார்.
சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் பற்றி, பலருக்கு தெரியாது என்பது, வருத்தமான உண்மை. கப்பலோட்டிய தமிழன் படத்தில் சிவாஜி மட்டும் நடிக்கவில்லை என்றால், பி.ஆர்.பந்துலு இதை படமாக தயாரிக்கவில்லை என்றால், லட்சக்கணக்கானவர்களுக்கும், ஒரு தலைமுறையினருக்கும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.,யைப் பற்றி தெரிந்திருக்காது.
கப்பலோட்டிய தமிழன் படத்தில், வீர வசனங்கள், போர், சண்டை காட்சிகள் கிடையாது. நடிப்பில் சாதனை புரிய பெரிய வாய்ப்பும் இல்லை. இருந்தும் தேச பக்தி மற்றும் தன் நடிப்புத் திறமை மீது அவருக்கு இருந்த தன்னம்பிக்கை காரணமாக தான், சிவாஜி அப்படத்தில் நடித்தார். சிதம்பரனார் குடும்பத்தினர், இந்தப்படத்தை பார்த்து, கதறி அழுதனராம். 1972ல், சிவாஜி ரசிகர்களின் மாநாட்டில், வ.உ.சிதம்பரனார் மகன் பேசும் போது, 'சுதந்திரப் போராட்டத்தில், எங்க அப்பா எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறார் என்பதை, சிவாஜியின் நடிப்பை பார்த்து, தெரிந்து கொண்டோம்...' என்று, மனம் உருகி குறிப்பிட்டார். சிவாஜியின் சிறந்த நடிப்புக்கு, இந்த பாராட்டு, ஒரு அங்கீகாரம்.
ஒரே மேடை நிகழ்ச்சியில், சிவாஜி, ஒரு லட்சம் ரசிகர்களை தன் நடிப்பால், மெய் மறக்க வைத்த சுவையான நிகழ்ச்சியை பற்றி, இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
நவம்பர் மாதம், 1977ல், தமிழகத்தில் வெள்ள நிவாரண நிதிக்காக, அப்போதைய, தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., சினிமா நடிகர்கள், கலைஞர்களின் ஒத்துழைப்பை கோரியிருந்தார். 'அண்ணன் கேட்கிறாரு. நாம் அனைவரும் அதிகமாக வசூல் செய்து, வெள்ள நிவாரண நிதிக்கு தரணும். அது நம் கடமை...' என்ற சிவாஜி, நட்சத்திரங்கள், இசை கலைஞர்கள் அனைவரையும், ஒருங்கிணைக்கும் பணியை, மேஜர் சுந்தர்ராஜன் மற்றும் வி.கே.ராமசாமியிடம் கொடுத்தார். நடிகர் சங்கத்திற்கு, அப்போது, சிவாஜி தலைவராகவும், மேஜர் சுந்தர்ராஜன் காரியதரிசியாகவும் இருந்தனர். வெள்ள நிவாரண நிதிக்காக, திருச்சி, மதுரை, சேலம் மற்றும் கோவை நகரங்களிலும், மாபெரும் நட்சத்திர கலைவிழா நடத்துவ தென்று முடிவு செய்தனர்.
யாரெல்லாம் முதல் வகுப்பு, 'ஏசி' இரண்டாம் வகுப்பு, 'ஏசி' பெட்டியில் செல்லலாம் என்று, பட்டியல் தயார் செய்தார் மேஜர்.
மேஜர் கொண்டு வந்த பட்டியலை பார்த்த சிவாஜி, 'முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, 'ஏசி' எல்லாம் வேண்டாம். வெள்ள நிவாரண நிதிக்காக வசூலிக்க செல்கிறோம். செலவு குறைவாக தான் இருக்கணும். நாம் எல்லாரும், நான்கு நாட்களுக்கு, நம்முடைய சவுகர்யம், பழக்கம் எல்லாவற்றையும் மறந்து, மரக்கட்டை கம்பார்ட்மென்ட்டில், மூன்றாம் வகுப்பில், குறைந்த செலவில் தான் பயணம் செய்யப் போகிறோம். சில இடங்களில், நாம் தங்குவதற்கு, ஓட்டல்காரர்கள், இலவசமாக, அறைகளை ஏற்பாடு செய்துள்ளனர். ஆண்களுக்கு தனி ஓட்டல், பெண்களுக்கு தனி ஓட்டல்; சாப்பாடு செலவு மட்டும் தான், நாம் அரசிடமிருந்து வாங்க வேண்டும். அதற்கு மேல், இத்யாதி செலவு அனைத்தும், அவரவரே தான் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கெல்லாம் அரசு பொறுப்பு இல்லை. நான்கு நாட்கள், முழுமையாக மக்களை மகிழ்வித்து, அதற்கு அவர்கள் தருகிற பணத்தை வசூல் செய்து, அரசுக்கு தர வேண்டும்...' என்றார்.
சிவாஜி மற்றும் முத்துராமன், மேஜர், மனோரமா, சுமித்ரா, விஜயகுமாரி, லதா, மஞ்சுளா, நாகேஷ், வி.கே.ராமசாமி, ஆர்.எஸ்.மனோகர், தேங்காய் சீனிவாசன், எம்.எஸ்.வி., மற்றும் இசைக் கலைஞர்கள், பின்னணி பாடகர்கள், பாடகிகள் மற்றும் பலர் வந்திருந்தனர். நானும், இக்குழுவில் இடம் பெற்றிருந்தேன்.
முத்துராமன், தேங்காய் சீனிவாசன், சுமித்ரா மற்றும் நானும் சேர்ந்து ஒரு காமெடி நாடகத்தில் நடித்தோம். சிவாஜி, அன்னையின் ஆணை படத்தில் வரும், சாம்ராட் அசோகன் ஓரங்க நாடகத்தில் நடித்தார். மாலை, 7:00 மணி முதல், இரவு, 11:00 மணி வரை, ஆடல், பாடல், நாடகம் என, கலை நிகழ்ச்சிகள் நடக்கும். சிவாஜி நடிக்க வேண்டிய ஓரங்க நாடகம், இரவு 10:00 மணிக்கு வரும். இரவு 8:00 மணிக்கே முழு, 'மேக் -- அப்' போட்டு, கவசம், கத்தி, கிரீடம் அணிந்து, மேடையில் தயாராக இருந்தார் சிவாஜி. சரியாக இரவு, 10:00 மணிக்கு, மேடையில் நுழைந்து, 'எங்கே கலிங்கம்?' என்று, சிவாஜி கர்ஜித்த காட்சியில், அந்த திறந்த வெளி அரங்கில் உட்கார்ந்திருந்த, ஒரு லட்சம் பேருக்கு மேற்பட்ட அனைவரும், ஒரே நொடியில் அமைதியாகி விட்டனர். எங்கும் நிசப்தம். அடுத்த முறை, 'எங்கே கலிங்கம்?' என்பதை, ரகசிய குரலில் சொல்வார். நடிகர், நடிகைகள், நாங்கள் என அனைவரும், மேடையின் பக்கவாட்டிலிருந்து, அவரையே பார்த்துக் கொண்டிருந்தோம். பதினைந்து நிமிடங்கள், அப்படியே, ஏதோ மந்திரத்திற்கு கட்டுப் பட்டவர்கள் போல, மெய் மறந்து உட்கார்ந் திருந்தனர் ரசிகர்கள்.
நாகேஷ் என்னிடம்,'டே, சலசலன்னு பேசிக் கொண்டிருக்கும் இவ்வளவு பெரிய ஆடியன்சை, 'டக்'கென்று அடக்குவதற்காக, 'எங்கே கலிங்கம்?' என்று இரைந்து, கர்ஜனை செய்து, ஆடியன்ஸ் அமைதியாகி, அடுத்த முறை, மெதுவான குரலில், அவர் சொன்னாலும், அவர்களுக்கு கேட்கும். சிவாஜி ஒரு மந்திரக்காரன்...' என்று ரசித்து, அனுபவித்தவாறே கூறினார்.
கடந்த, 1975ம் ஆண்டு, சென்னை ஏ.வி.எம்., ஸ்டுடியோவில் பிரத்யேக, 'செட்' போட்டு, சிவாஜியின், ஓரங்க நாடகமான, 'சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்' என்ற நாடகத்தை, 45 நிமிடங்களில் சிவாஜி நடித்து, படமாக்கினர். 45 நிமிடங்களும் சிவாஜி, 'மோனோ ஆக்டிங்' செய்திருப்பார். நடிப்புக் கலையிலே, 'மோனோ ஆக்டிங்' மிகவும் கஷ்டமான வடிவம். ஒரே நடிகர் எல்லா வசனங்களும் பேசி, இல்லாத பல பாத்திரங்களை இருப்பதாக பாவித்து, நடிக்க வேண்டும். இந்தியா முழுவதும் ஒளிபரப்பான, இந்த ஓரங்க நாடகத்தை, தூர்தர்ஷனுக்கு பணமே வாங்காமல், இலவசமாக நடித்துக் கொடுத்தார். இந்தியாவே, சிவாஜியின் நடிப்பை கண்டு, வியந்து பாராட்டியது.
- தொடரும்.
எஸ்.ரஜத்

