sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

பசுமை நிறைந்த நினைவுகளே.... (12)

/

பசுமை நிறைந்த நினைவுகளே.... (12)

பசுமை நிறைந்த நினைவுகளே.... (12)

பசுமை நிறைந்த நினைவுகளே.... (12)


PUBLISHED ON : நவ 24, 2013

Google News

PUBLISHED ON : நவ 24, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடந்த, 93ம் வருட டூரின் போது, சில, 'திடுக்' சம்பவங்கள் நடந்ததாக குறிப்பிட்டு இருந்தேன். அது என்ன சம்பவங்கள் என்பதை, இப்போது சொல்கிறேன்...

கடந்த, 92-ம் வருடம், டிசம்பர் மாதம், தமிழகத்தையே உலுக்கி எடுத்த புயல், மழை,வெள்ளமானது, குற்றாலத்தை கொஞ்சம் கூடுதலாகவே புரட்டிப் போட்டது.

மெயினருவிக்கு அழகு சேர்க்கும், 'ஆர்ச்' என சொல்லப்படும் அரைவட்ட வளைவு, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. மலை மீதிருந்து, பெரும் பெரும் பாறைகள் உருண்டோடி வந்ததில், குற்றாலத்தின் தோற்றமே உருமாறிப் போனது. நின்று குளிக்க இடமில்லாமல், அருவியை நெருங்க வழியில்லாமல், பாதைகள் எல்லாம் பாறைகளாக, குற்றாலம் ரொம்பவே சிதைந்து போனது.

அடுத்த நான்கு மாதங்களில், சீசன் டூர் நடைபெற இருக்கும் நேரத்தில், இப்படி ஆகிவிட்டதே என்ற கவலையை விட, லட்சக்கணக்கான மக்களின் மனதையும், உடலையும் மகிழ்வித்த இயற்கையின் நன்கொடைக்கு, இப்படி ஒரு சிக்கல் வந்துவிட்டதே என்பதை நினைக்கையில், பெரிய கவலையாக இருந்தது.

வெள்ளத்தால் குற்றாலத்திற்கு ஏற்பட்ட பேரழிவுகள் குறித்த செய்தியும், படங்களும் 'தினமலர்' நாளிதழில் விடாமல் வெளியிட்டதன் விளைவு, அரசு, போர்க்கால நடவடிக்கை எடுத்து, குற்றாலத்தை புதுப்பித்தது. மயன் கட்டிய மாளிகை போல, குற்றாலம் முன்னிலும் அழகாக மெருகேறியது. மெயினருவிக்கு கம்பீரம் சேர்த்த, 'ஆர்ச்' அதே அழகுடன் எழுந்து நின்றது.

இப்படி புதுப்பிக்கப்பட்ட குற்றாலத்தில் குளிப்பதற்கு, பழைய வாசகர்களும், புதிய வாசகர்களும் ரொம்பவே ஆசைப்பட, 93-ம் வருட டூருக்கு, வாசகர்களிடம் இருந்து கூப்பன்கள் வழக்கத்தை விட கூடுதலாக வந்து குவிந்தன.

டூர் வாசகர்களை மகிழ்விக்க, ஒரு நடிகரை வரவழைப்பது வழக்கம். ஆனால், அந்த வருடம், ஒரு நடிகரே, கூப்பன் போட்டு தேர்வாகி வந்திருந்தார். அவர்தான், நடிகர் அருள்மணி.வித்தியாசமான கேமரா லென்ஸ் மற்றும், 'ஷோல்டர் ட்ரைபாடு'டன் வந்திருந்த அவர், தான் குளித்த அருவிகளை எல்லாம், கேமராவில் பதிவு செய்து கொண்டார்.

நடிகர் அருள்மணி நல்ல பாடகரும் கூட. மேடையில் நின்று பேச உபயோகப்படும், 'போடியம்' என்ற மேசை மீது, கையால் தாளம் போட்டபடி, பாடல்களைப் பாடி, வாசகர்களை மகிழ்வித்தார். தாளம் போட்டு பாடும் போது, கையில் கட்டியிருந்த தங்க, 'பிரேஸ்லெட்' கழண்டு விழுந்து விட்டது. அதைக் கவனிக்கவில்லை அருள் மணி. அதன்பின், வாசகர்களோடு சாப்பிட்டு, அரட்டை அடித்து, இரவு துாங்கப் போகும் போதுதான்; கையில், 'பிரேஸ்லெட்' இல்லை என்பதை, கவனித்திருக்கிறார். .

பதறிப் போய் என்னிடம் வந்தார். 'பதற்றம் வேண்டாம்...' என்று சொல்லி, எங்கே விழுந்திருக்கும் என்று, மனதில் சம்பவங்களை ஓடவிட்டு, பிறகு, அவர் பாட்டுப் பாடிய அரங்கத்தில்தான் விழுந்திருக்க வேண்டும் என்று, அங்கே தேடிப் போனோம். ஆச்சர்யம்! அவரது, 'பிரேஸ்லெட்' அங்கேயே கிடந்தது. 'அப்போ... தங்கத்திற்கு மதிப்பு அவ்வளவுதானா...' என்று கேட்காதீர்கள். தங்கத்திலும், சொக்கத்தங்கமான மனசு கொண்ட வாசகர்கள் புழங்கிய இடம் என்பதால், தங்களுக்கு சொந்தமில்லாத எதையும் சொந்தம் கொண்டாடாத வாசகர்கள், இதையும் சொந்தம் கொண்டாடவில்லை என்பதே விஷயம்!

டூர் முடிந்து திரும்பும் போது, ஒரு தகவல் வந்தது. காவிரி பிரச்னை காரணமாக, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, திடீரென, சென்னையில், உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார் என்பதுதான், அந்த தகவல். இதன் காரணமாக, தமிழகமெங்கும் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. இது வாசகர்களுக்கு தெரியாது. அவர்களை கலவரப்படுத்த வேண்டாம் என்று எண்ணியபோது, தென்காசி தாய்பாலா தியேட்டர் மானேஜர், 'பஸ் தான் ஓடலை. நம்ம தியேட்டர்ல சினிமா ஓடுது வாங்க'ன்னு சொல்லி, இரண்டு ரீல் ஓடிய, அரண்மனைக்கிளி படத்தை, திரும்பவும் முதலில் இருந்து ஓட்ட ஆரம்பித்தார்.

கொஞ்ச நேரத்தில், நிலைமை மாறி, பஸ் போக்குவரத்து சீராகியது. அடுத்து, மதுரை போய், ரயிலை பிடித்து விடுவது என்று முடிவு செய்து, தியேட்டருக்குள் போய், 'ஸ்லைடு' போட்டு, வாசகர்களை வெளியே வரச் செய்து, ஊர் திரும்பினோம்.

வெளியில் நடப்பது எதுவுமே தெரியாத,மொபைல் போன் இல்லாத காலம் என்பதால், சில வாசகர்கள், 'படம் முடிஞ்சபிறகு போவோமே...' என்றனர். 'மிச்ச படத்தை, பஸ்ல போடுறோம். இப்ப வாங்க...' என்று சொல்லி, அழைத்துக்கொண்டு கிளம்பினோம்.

இப்படி, எதிர்பார்க்காத பல சந்தோஷங்களுடனும், சம்பவங்களுடனும் நடைபெற்ற, அந்த வருட குற்றால டூர் நிறைவடைந்த பின், விருத்தாச்சலம் வாசகர் பன்னீர் செல்வத்திடம் இருந்து, ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தை படித்த போது, எத்தனை இன்னல்கள் வந்தாலும், இனி வரும் காலங்களிலும், டூரை விடாமல் நடத்த வேண்டும் என்ற உத்வேகத்தை தந்தது.

அப்படி என்ன அந்த கடிதத்தில் எழுதப்பட்டு இருந்தது என்பதை, அடுத்த வாரம் சொல்கிறேன்.

குற்றாலமும்,பழைய குற்றாலஅருவியும்...

குற்றாலம் மெயினருவியில் இருந்து, ௭ கி.மீ., தூரம் பயணம் செய்தால், பழைய குற்றால அருவி வரும். பழைய குற்றால அருவிக்கு போகும் பாதையின் இருபுறங்களிலும் காணப்படும் பசுமை, மனதை கொள்ளை கொண்டு, கனவுலோகத்திற்கு கொண்டு செல்லும்.

இந்த அருவியின் பெயர்தான் பழையது; ஆனால், இது தான், குற்றாலத்தில் உள்ள அருவிகளிலேயே புதிய அருவி.

அழகனாறு என்ற ஆறுதான், பழைய குற்றால அருவியாக விழுகிறது. ஆரம்பத்தில், இந்த அருவி, குளிப்பதற்கு ஏற்றதாக இல்லாமல், வெகு உயரத்தில் இருந்து விழுந்தது.

அப்போதைய முதல்வராக இருந்த காமராஜர், ஒரு முறை, இந்த அருவியை பார்க்க வந்திருந்தார். 'இந்த அருவியை மக்கள் பயன்படுத்தும்படி செய்ய முடியாதா...' என, அருகிலிருந்த பொறியாளர்களிடம் கேட்டார்.பின், அவரே, 'தண்ணீர் விழாத காலத்தில், மலையை, படிப்படியாக செதுக்கி விடுங்கள். இதனால், தண்ணீர் செங்குத்தாக விழாமல், ஒவ்வொரு தடுப்பிலும் விழுந்து, வேகம் குறைந்து, கடைசியில் மக்கள் தலையில் விழும்போது, பூவாளி தண்ணீர் போல விழும்...' என்றார்.

அந்த தீர்க்கதரிசி சொன்னது போலவே, மலையை செதுக்கி முடித்த பின், அருவி அழகாக உருமாறியது. இந்த அருவி தண்ணீரானது, அழுத்தம் அதிகம் இல்லாமல், 'ஷவரில்' குளிப்பது போன்ற சந்தோஷத்தை தரும். இதன் காரணமாக, இது குழந்தைகளின் விருப்பமான அருவியாகவும் மாறிப் போனது. இப்போது, இந்த அருவியில் குளிக்கும் மக்கள், காமராஜரை நன்றியோடு நினைத்து பார்த்தபடி, ஆனந்தமாக குளித்து மகிழ்கின்றனர்.

-- அருவி கொட்டும்.

- எல்.முருகராஜ்






      Dinamalar
      Follow us