sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : நவ 24, 2013

Google News

PUBLISHED ON : நவ 24, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எனக்கு வயது 34. நான் +2 படித்தவள். படிக்கும்போதே, என் கணவர் வலிய வந்து என்னை காதலித்தார். பெற்றோரின் சம்மதத்துடன், +2 முடித்ததும் கல்யாணமும் செய்து கொண்டார். மணமுடித்து 15 வருடங்கள் ஆகிவிட்டன. தற்போது, எனக்கு, மூன்று குழந்தைகள் உள்ளனர்.

என் கணவர் சபலப் புத்திக்காரர். திருமணமான மூன்றாம் ஆண்டில், ஒரு பெண்ணுடன் பழகினார். அது, எனக்கு தெரிய வந்து, சண்டை போட்டு, அந்த பெண்ணின் வீட்டிற்கு போவதைத் தடுத்தேன். இது முடிந்து, மூன்று வருடங்களுக்குப் பின், மீண்டும் இப்படி ஒரு பழக்கம் எனக்குத் தெரிய வர, சண்டை போட்டு ரகளை செய்ததில், 'நான் பேச மட்டும் தான் செய்வேன்; தப்பாக நடக்க மாட்டேன். என்னை ஏன் வீணாக சந்தேகப்படுகிறாய்?' எனக் கூறி, என்னை அடக்கி விட்டார்.

இடையில், பிசினஸ், அது இது என்று, ஆறு லட்சத்திற்கும் மேல் தொலைத்து, பின், இரண்டு வருடம் குடும்பத்தை பிரிந்து, வெளிநாட்டுக்கு சென்று சம்பாதித்து வந்தார்.

இதெல்லாம் முடிந்த பின்னர், சுமூகமாக காலம் சென்று கொண்டிருக்கையில், 18 மாதங்களுக்கு முன், ரொம்ப மோசமான பெண்ணிடம் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டார். இதனால், ஒரு மாதம், குடும்பத்தில், பெரிய யுத்தமே நடத்தி, பின், என் சொந்தக்காரர் ஒருவர் எடுத்துச் சொல்லி, அங்கு போவதை நிறுத்தினார். அங்கு போவதைத்தான் நிறுத்தினாரே ஒழிய, அவளை இன்னும் இவர் மறக்கவில்லை என்று நினைக்கிறேன்.

அதிலிருந்து தொடர்ந்து, எங்கள் குடும்பத்தில் பிரச்னை. எதற்கெடுத்தாலும், சண்டை. குழந்தைகளுக்காகத் தான், நான் உயிரோடு இருக்கிறேன். இதையெல்லாம் பார்த்து, குழந்தைகள், மனதளவில் பாதிக்கப்படுவார்களோ என்று பயமாக உள்ளது.

இப்பொழுது, சரிவர பேச்சு வார்த்தை கூட இல்லை. இதனால், வாழ்க்கையை வெறுத்து, சாகவும் துணிந்தேன். ஆனால், என் குழந்தைகளை நினைத்து தான், நான் இன்னும் உயிரோடும், அவரோடும் இருக்கிறேன். என் பிறந்த வீட்டிலும் அவ்வளவு வசதியில்லை. என்னால், நிம்மதியாக ஒரு நிமிடம் கூட வீட்டில் இருக்க முடியவில்லை. எங்காவது கண் காணாமல் போய் விடலாமா என தோன்றுகிறது. வர வர என் கணவரை பார்க்கவோ, பேசவோ பிடிக்கவில்லை. அவர் எது பேசினாலும், எனக்கு, அது பொய்யாகவே தோன்றுகிறது.

இந்த சமீபத்திய சக்களத்தியை, தினமும், வீதியில் பார்க்க வேண்டியுள்ளது. பார்க்கும் போதெல்லாம், என் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை.

தனிமையில், இதைப் பற்றியே சிந்திப்பதால், மனநோயாளியாக மாறி விடுவேனோ என்று பயமாக உள்ளது. ஆறுதல் கூற கூட ஆள் இல்லாமல், தனியே உட்கார்ந்து அழுகிறேன். தனிமையில் இருக்கும் போது, என்னையே நான் வருத்திக்கொள்ள வேண்டும் போல் உள்ளது.

எனக்கு தெரிந்து, அவருக்கு, நான், தாம்பத்தியத்தில் எந்தக் குறையும் இதுவரை வைத்ததில்லை.

என் வாழ்க்கையில் நான் செய்த ஒரே தப்பு, இவர் என்னை காதலிக்கும்போதே, இடையில், நான், இவரை கல்யாணம் செய்ய மறுத்தது தான் காரணம். பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர், சாதாரணமாக பேசி பழகியவர், கடைசியில், 'நீ, என்னை கல்யாணம் செய்து கொள்ளாவிட்டால், செத்து விடுவேன்...' என்று கூறினார்.

அதற்கு பயந்துதான், நான், என் கணவரை மறுத்தேன். ஆனால், என் சகோதரர் என்னென்னமோ சொல்லி, எதிர்காலத்தைப் பற்றி பயமுறுத்தி, இவருக்கே திருமணம் செய்து வைத்தார். கல்யாணமான பின், இதற்காக, பலமுறை இவரிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறேன். இன்னும் கூட, என் மனசாட்சிப்படி, 'அது தப்பு' என்று உணர்ந்து, மனதிற்குள், 'பீல்' பண்ணுகிறேன்.

என்னை உங்கள் சகோதரியாக நினைத்து, பதில் அளிக்கவும்.

அன்புடன்,

உங்கள் சகோதரி.


அன்பு சகோதரி,

உன் கடிதம் கிடைத்தது. தாலி கட்டிய கணவன், பல பூக்களை நாடும் வண்டாக இருந்தால், சமாளிப்பது கஷ்டம் தான்.

ஆனால், சகோதரி, உன் கணவர் இப்படி நடந்து கொள்வதற்கானக் காரணத்தை, நீ கண்டுபிடிக்க வேண்டுமல்லவா... நல்ல மனைவி, காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டவர்; நீ சொல்வது போல, தாம்பத்ய சுகத்திலும் எந்தக் குறைவும் வைக்கவில்லை. அப்புறம் ஏன், உன் கணவர், இப்படி, ஒவ்வொரு பெண்ணையும் தேடி அலைய வேண்டும்? அதுவும் மோசமானப் பெண்களாய் பார்த்து தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும்?

இங்கே நான் சொல்வதை, உன்னால் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ள முடியுமோ தெரியவில்லை. ஆண் ஆனாலும், பெண் ஆனாலும் வெறும், 'செக்ஸ்' மட்டுமே முழுமையான வாழ்க்கையாகாது. இது, நிறைய பேருக்குப் புரிவதில்லை. 'செக்ஸ்'சுக்கு முன்பும், பின்பும் அன்பான அரவணைப்பு, ஆதரவான பேச்சு, இனிமையான சிரிப்பும், விளையாட்டும் தேவை.- எல்லாவற்றுக்கும் மேல், 'எதுவானாலும், இவரிடம் அல்லது இவளிடம் பேசலாம்' என்கிற நம்பிக்கையும் வேண்டும் கண்ணம்மா.

பெண், காதலில்லாத வாழ்க்கையை ஒப்பேற்றி விடுவாள். ஆனால், ஆண்களால் அது முடியாது. காதல் என்றால், சினிமாக்களில் வருவது போல, காட்டிலும், மேட்டிலும் ஓடி, 'உயிரே... உயிரே...' என்று பாடுவது என்று நினைக்காதே... உன் கணவனுக்கு, ஒரு நல்ல சிநேகிதி வேண்டியிருக்கிறது. நீ திருமணத்துக்கு முன், காதலியாக இருந்த வரையில், நல்ல சிநேகிதியாக இருந்திருப்பாய். அப்போது, உன் காதலருடைய சிரிப்பும், பேச்சும், அச்சுப்பிச்சு நடவடிக்கைகளும் உனக்குப் பிடித்தமானவைகளாக இருந்திருக்கக் கூடும். திருமணத்திற்கு பின், அவர், பொறுப்புள்ள குடும்பத் தலைவராக இருக்க வேண்டும் என்று, நீ நினைத்திருப்பாய். பெண்களிடம், அவர் சிரித்துப் பேசினால் உனக்கு எரிச்சலும், கோபமும் வந்திருக்கும்.

ஆனால், அவருக்கோ, தன் எண்ணங்களை, உணர்வு களைப் பகிர்ந்து கொள்ள (அவை, கீழ்த்தரமானதாகக் கூட இருக்கலாம்) ஒரு துணை, தேவையாக இருக்கிறது. உன் கணவருக்கு மட்டுமல்ல, பல ஆண்களுக்கும், இது மாதிரி, 'டூயல் ரோல்' போட வேண்டிய நிர்ப்பந்தம் வாழ்க்கையில் ஏற்படுவதுண்டு.

இதற்கு காரணம், மனைவியிடம், தன் வக்கிர ஆசைகளை, எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள பயம்; காம்ப்ளக்ஸ்... அதனால் தான், இவர்கள், தன் மனைவியை விடவும் பல படிகள் கீழேயுள்ள, மோசமான நடவடிக்கைகள் கொண்ட பெண்களை நாடிப் போகின்றனர்.

ஏன் என்றால், பெண்டாட்டியிடம் கொச்சையாக பேச முடியாது; குடித்து விட்டு ரகளை பண்ண முடியாது; அசிங்கமாக நடந்து கொள்ள முடியாது.

காரணம், பெண்டாட்டி, அவனது குடும்பத்தின் தலைவி; கோவிலின் மூல விக்கிரகம். இந்த உறுத்தல், அவனுள், சதா ஊகா முள்ளாய் உறுத்திக் கொண்டே இருக்கும்.

அலுவலகம் முடிந்து வீடு வந்து, மனைவி தரும் அர்ச்சனையுடன், காபியையும் குடித்து, காய்கறி வாங்க கடைக்குப் போகும் ஆண்களில் பலர், காய்கறிக் கடையில், பெண் வியாபாரிகளிடம் தான், வாடிக்கையாக வியாபாரம் வைத்துக் கொள்வர். அந்தப் பெண்களிடம் சிரித்துப் பேசும்போதும், ரசக்குறைவான ஜோக்குகளை உதிர்க்கும் போதும், 'அப்பாடா' என்கிற, விடு தலை உணர்வு இவர்களுக்குக் கிடைக்கிறது.

அது போலத்தான், மனைவியுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும்போதும்...

பெண்டாட்டி, ஏதோ ஒரு கடுப்பில், சுவரைப் பார்த்து திரும்பிப் படுத்தால், ஓரளவுக்கு மேல், கணவனால், அவளை நிர்பந்தப்படுத்த முடியாது.

இதுவே, விலை மகளிடம் அப்படியில்லை. திட்டலாம்... 'காசு கொடுக்கறேனில்ல' என்று பேசலாம்.

புரிகிறதா... இதுபோன்ற சுவர், கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் விழாமல் இருக்க வேண்டுமென்றால், அதட்டியோ, ஆத்திரப்பட்டோ, அழுதோ பிரயோஜனம் இல்லை.

கணவனை ஒரு சிநேகிதனாக நடந்து. நீங்கள் இருவரும் தெருவில் நடக்கும் போது, உன் கணவன், உனக்குத் தெரியாமல், மற்ற பெண்களை ஓரக் கண்ணால் பார்ப்பதை விடுத்து, 'ஏ... அந்தப் பச்சைப் புடவை அழகா இருக்கா இல்லே' என்று, மனசு விட்டு, உன்னிடம் பகிர்ந்து கொள்ள வை.

'அதெப்படி என்னைப் பக்கத்துல வச்சுகிட்டு, அடுத்தவளை, 'சைட்' அடிக்கலாம்,...' என்று நீ அவரிடம் பாய்வதற்கு பதில், 'ஆமா... அழகா இருக்கா... அவ கூடப் போறானே... அசப்புல பார்த்தா ஷாருக்கான் மாதிரி இல்லே...' என்று, நீயும் வெளிப்படையா பேசு.

இப்படியொரு வாழ்க்கை அமைந்தால், எந்தவொரு ஆணும், தனக்கென, ரகசியமாக இன்னொரு துணையை வைத்துக்கொள்ள மாட்டான். முயற்சி செய்து பாரேன்...

அதை விடுத்து, பழைய காதல், அது இது என்று, ஏன் அநாவசியமாக மனதை குழப்பிக் கொள்கிறாய்.

கணவனுக்கு உண்மையான அன்பைக் கொடு; அன்பினால் ஆகாதது, எதுவுமே இல்லை.

-- என்றும் தாய்மையுடன்,

சகுந்தலா கோபிநாத்.






      Dinamalar
      Follow us