PUBLISHED ON : ஏப் 20, 2014

கடந்த, 99-ம் வருட குற்றால டூர், கார்கில் போர் முடிந்த சமயத்தில் துவங்கியதால், மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியுமாக நடந்தது என்று குறிப்பிட்டேன்.
'இவர் இருக்கும் இடத்தில், செல்வம் கொழிக்கும்' என்று, பிள்ளையார்பட்டி விநாயகர் காலண்டரில் எழுதியிருப்பர். அது போல, 'இவர் இருக்கும் இடத்தில், கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது...' என்று, ஒருவரது படத்தை போட்டு, அதற்கு கீழ் தாராளமாக எழுதலாம். அவர்தான் மதுரை சமூகவியல் கல்தூரி முதல்வர் பேராசிரியர் கண்ணன்.
ஆசிரியர் பணியுடன், மது ஒழிப்பு பிரசாரம் செய்வது, முனைவர் பட்டம் பெறுபவர்களுக்கான வழிகாட்டி, ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு அறிவுரை வழங்குதல், பிரபல மனநல மருத்துவர் ராமசுப்பிரமணியனுடன் இணைந்து, மனநலம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி வழங்குதல் என்று, நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் கண்ணன், வருடத்தில் மூன்று நாள் இளைப்பாறும் இடம், குற்றால டூர்.
டூரின் முதல் நாள், வாசகர்களை வரவேற்று பேசும்போது, 'குற்றால டூர் எனும் கோவிலுக்குள் நுழைவதற்கு முன், வாசலிலேயே உங்களது கவலை எனும் செருப்புகளை கழற்றிவிட்டு வரவும். அப்போதுதான், முழுமையான ஆனந்தத்தை அனுபவிக்க முடியும்...' என்று சொல்வார்.
பேராசிரியர் கண்ணனைப் பொறுத்தவரை, கவலைகளை மட்டுமல்ல, தான் ஒரு முனைவர், பேராசிரியர், மனநல ஆலோசகர் என்பது போன்ற கல்வி கிரீடங்கள் அனைத்தையும் கழற்றிவைத்து, பெயருக்கேற்ற குதூகல கண்ணனாக, நெல்லை தமிழில் பேசி, அந்துமணியின் கிராமத்து ரசிகராக, உள்ளே நுழைவார்.
நுழையும் போதே 'நா ஒண்ணு சொல்லுதேன் கேப்பீகளா?' என்பார்; எல்லாரும், 'சொல்லுங்க கேட்கிறோம்...' என்று, ஆர்வமுடன் காதை தீட்டிக்கொண்டு அவரை பார்க்கும் போது, அனைவருக்கும் நடுவில் வந்து நின்று, ஒரு மெல்லிய அமைதியை உருவாக்கி, முகத்திற்கு நேராக, தன் கைவிரல் ஒன்றை காட்டி, 'ஒண்ணு' என்று சொல்லி, சட்டென உட்கார்ந்து விடுவார். இதனால், சட்டென வாசகர்கள் கடுப்பானாலும், அடுத்தடுத்த இது போன்ற இவரது குறும்புகளால், கலகலப்பாகி விடுவர்.
இப்படி வசீகரமான வார்த்தைகள், வினோத விளையாட்டுகள், பாடல்கள், பட்டிமன்றங்கள் என்று, மூன்று நாளும் வாசகர்களை குஷிப்படுத்தும் இவர், பேராசிரியர் என்ற நிஜமுகத்துடன், வாசகர்களிடம் வெளிப்படும் தருணம் அழகானது.
இப்படி மகிழ்ச்சியை மொத்த குத்தகை எடுத்துக் கொண்டிருந்த பேராசிரியர் கண்ணன், 99-ம் வருட டூரின் போது, ரொம்பவே நெகிழ்ச்சியடைந்து போனார். காரணம், கார்கில் போர்!
'நமக்காக இறந்தவர்களில் ராம், ரகீம், ராபர்ட்டுகள் உண்டு; ஆனால், இறக்கும் போது, யாரும் ராமாக, ரகீமாக, ராபர்ட்டாக இறக்கவில்லை. ஒரு இந்தியனாகவே இறந்து, நம்மிடையே இந்திய வீரனாகவே வாழ்கின்றனர்...' என்று உணர்ச்சிகரமாக பேசி, டூர் முழுவதும், கார்கில் போர் நினைவு தந்த, அந்த உணர்வு அலைகளால், உணர்ச்சிபூர்வமாக இருந்தார்.
இதன் காரணமாக, டூரின் முதல் நாள் வர வேண்டியவர், இரண்டாம் நாளான்று, நேராக குற்றாலத்திற்கு, திடீரென வந்திறங்கினார். இரண்டு நாளாக அந்துமணியை தேடி களைத்து போயிருந்த வாசகர்கள், புதியவரான இவரைப் பார்த்ததும், அந்துமணி என்று நினைத்து, சூழ்ந்து கொண்டனர்.
'தாய்க்குலங்களே... ஆளைவிடுங்க. நான், அவன் இல்லை; சத்தியமாக அந்துமணி இல்லை...' என்று சொல்ல, 'நீங்க அந்துமணி இல்லன்னு வேண்டுமானால் சொல்லுங்கள்; ஆனால், நான், 'அவன்' இல்லன்னு அந்துமணி சாரை, எப்படி நீங்கள், 'அவன்' என்று, மரியாதை இல்லாமல் சொல்லலாம்...' என்று, வாசகியரான ஜெயந்தி, ஹேமலதா, நளினி, கலாராணி, லதா ஆகியோர் கடுமையான கோபத்துடன், சண்டைக்கு போய் விட்டனர்.
'இதென்னடா புது கலாட்டாவாக இருக்கு... ஒரு, 'புளோல' வந்துடுச்சு; தாய்க்குலங்களே மன்னிச்சுக்குங்க...' என்று சொன்னதும், 'இப்ப வந்ததோடு சரி; இனி எப்பவும் வரக் கூடாது...' என்று எச்சரித்தனர்.
அந்த இறுக்கமான சூழலை மாற்றுவதற்காக, அந்த வருடம் ஒரு புது விளையாட்டை அறிமுகப்படுத்தினார். அது அவர், 'ஹாய்' என்று சொன்னால், பதிலுக்கு வாசகர்கள் அனைவரும், 'ஹலோ' சொல்ல வேண்டும். அவர், 'ஹலோ' சொன்னால், பதிலுக்கு, 'ஹாய்' சொல்ல வேண்டும்.
'ஹாய் ஹாய் ஹாய்...' என்று விடாமல் சொன்னால், 'ஹலோ ஹலோ ஹலோ...' என்று விடாமல் சொல்ல வேண்டும். இந்த ஹாய்,ஹலோ விளையாட்டு வாசகர்களுக்கு பிடித்து போய்விடவே, குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, பழத்தோட்ட அருவி என்று, எல்லா அருவிகளிலும் இந்த, 'ஹாய், ஹலோ' வார்த்தைகள் எதிரொலித்தது.
அதிலும், தற்போது குளிக்க தடைவிதிக்கப்பட்டு, பூந்தோட்டமாக மாற்றப்பட்டுவிட்ட பழத்தோட்ட அருவியில் குளிக்கும் போது, வாசகர்கள் முப்பது பேர்தான்... அவர்கள் குளித்து முடித்ததும். 'ஹலோ... குளிச்சாச்சா, கிளம்பலாமா?' என்று கேட்டதும், 'ஹாய்... குளிச்சாச்சு, கிளம்பலாமே...' என்று அறுபது குரல்கள் பதிலளித்தன.
புதிதாக எதிரொலித்த அந்த முப்பது குரல்களுக்கு சொந்தக்காரர்கள் யார் என்பதை, அடுத்த வாரம் சொல்கிறேன்.
குற்றாலமும், மேக்கரையும்...
வயல்களும், மலைகளும் சூழ, எங்கும் பச்சைப் போர்வையை போர்த்திக் கொண்டது போல் காணப்படும் அழகிய ஊர், மேக்கரை கிராமம். மேக்கரையில் நுழையும் போதே நெற்கதிர்களின் வாசமும், 'ஜில் ஜில்' காற்றும், ஆரத்தழுவி வரவேற்கும். எங்கே வறட்சி ஏற்பட்டாலும், இங்கு வறட்சி ஏற்படாது. செயற்கை தன்மை கலக்காது, இயற்கையான இனிமையை தன்னகத்தே வைத்துக் கொண்டுள்ளது இக்கிராமம்.
திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை வட்டத்தை சேர்ந்த இந்த வருவாய் கிராமம், தென்காசியில் இருந்து, 14 கி.மீ., தொலைவில் உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வற்றாது வரக் கூடிய தண்ணீர், குறவன் பாறை, எருமைச்சாவடி என்ற பெயர்கள் கொண்ட ஆறாக, இக்கிராமத்தை சூழ்ந்து ஓடுவதால், 3,500 ஏக்கருக்கு நெல் பயிரிடுகின்றனர். இது தவிர, மரவள்ளிகிழங்கு, தென்னை, வாழை போன்ற பயிர்களும் பயிரிடப்படுகின்றன. இப்படி நீர்வளம் நிறைந்த பகுதி என்பதால், விவசாயம் ஆண்டு முழுதும், சிறப்பாய் நடைபெறுகிறது.
குற்றாலம் போகும் போது என்று இல்லாமல், எப்போதாவது வாய்ப்பு கிடைக்கும் போது, குழந்தைகளோடு இக்கிராமத்தை ஒரு முறை எட்டிப்பார்த்துவிட்டு வாருங்கள். அப்போது தான் நெரிசலான, அழுக்கான, வெப்பமான, வறட்சியான நகர வாழ்க்கையில், நாம் எவ்வளவு இழந்து வருகிறோம் என்பது புரியும்.
— அருவி கொட்டும்.
-எல்.முருகராஜ்
