PUBLISHED ON : மே 25, 2014

வேலூரில் இருந்து வருகை தந்திருந்த வாசகரும், கல்வி துறை உயரதிகாரியுமான தீனதயாளன், இதுவரை தான் வாழ்ந்த எந்திரத்தனமான வாழ்க்கையில் இருந்து விடுபட்டு, மூன்று நாட்கள் டூரில், தன் இஷ்டப்படி இருக்கப் போவதாகச் சொல்லி, அதன்படியே நடந்து கொண்டார்.
பலூன் வியாபாரியிடம் ஊதல் வாங்கி ஊதுவதும்,பெர்முடாஸ் எனப்படும் அரை டவுசர் அணிந்து, தலையில் முண்டாசு கட்டி உற்சாகமாய் ஆட்டமும், பாட்டமுமாக மனிதர் அருவிகளில் செய்த அமர்க்களம் இருக்கே... அடுத்தவருக்கும் சந்தோஷத்தை தொற்றச் செய்யும் சிறப்பு வாய்ந்தது.
'குண்டாறு அணைக்கட்டை சுற்றிப்பார்க்க, நாம என்ன ஸ்கூல் பிள்ளைங்களா... ஏதாவது விளையாடுவோம்...' என்று, அறிவித்த வழக்கறிஞர் காவேரி, சாந்தி தலைமையில் ஒரு அணியையும், டாக்டர் தேவமனோகரி தலைமையில் ஒரு அணியையும் உருவாக்கி, இரு அணிகளுக்கு இடையே கயிறு இழுக்கும் போட்டியை அறிவித்தார்.
'வந்த இடத்தில் கயிறுக்கு எங்கே போவது...' என்று கேட்டதும், 'கயிறுதானே வேணும்...' என்று கேட்டு, தன் தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து, முடிச்சு போட்டு ஒரு வளையமாக்கினார். 'வளையத்தின் இரு பகுதியையும், இரு அணிகளும் பிடித்து இழுக்கவேண்டும். இழுப்பவர்கள் ஒருவர் இடுப்பை, மற்றவர் பிடித்து அணிக்கு பலம் சேர்க்கவேண்டும்...' என்று, நிமிட நேரத்தில் ஐடியா கொடுத்து, விளையாட்டை துவக்கினார்.
இரு அணிகளும் சமபலத்துடன் இருந்ததால், மூன்று முறை இழுத்தும் போட்டி டிராவில் முடிந்தது. மூன்றாவது முறை இழுவை தாங்கமுடியாமல், துண்டுதான், துண்டாகிப் போனது.
ஐம்பத்தைந்து வயதை தாண்டிய தீனதயாளனின் மனதிற்குள் புகுந்த இளமை, உடம்புக்குள்ளும் புகுந்து இருந்தால், நன்றாக இருந்திருக்கும்.
பொதுவாக டூரில் வழங்கப்படும் உணவு விஷயத்தில், அந்துமணி மிகவும் கவனமாக இருப்பார். அதில், எந்தவித சமரசமும் மேற்கொள்வது கிடையாது.
குறிப்பிட்ட சமையல் எண்ணெய் குற்றாலத்தில் கிடைக்காவிட்டால், கார் எடுத்து போய், ராஜபாளையத்தில் இருந்து வாங்கி வரச் சொல்வாரே தவிர, இருப்பதை கொண்டு, 'அட்ஜஸ்ட்' செய்து கொள்ளுங்கள் என்ற பேச்சுக்கே இடம் தர மாட்டார்.
சீசன் நேரத்தில்தான், சம்பாதிக்க வேண்டும் என்பற்காக, மலிவு விலை எண்ணெயில் தயாரிக்கப்படும் மிளகாய் பஜ்ஜி, போண்டா போன்ற உணவு பொருட்கள்தான் குற்றாலத்தில் அதிகம் விற்பனையாகும். இது போன்ற சமாச்சாரங்களை வாசகர்கள் வாங்கி சாப்பிட்டு, வம்பாகிவிடக் கூடாது என்பதற்காக, டூர் சமையல்காரரை அருவிகளின் பக்கத்திலேயே, சுடச்சுட பஜ்ஜிகளை சுட்டு கொடுக்கவும் ஏற்பாடு செய்திருந்தார்.
இப்படி உணவு விஷயத்தில் பார்த்து பார்த்து செய்திருந்தாலும், பல காலமாக கட்டி போடப்பட்டு இருந்த வாயை தீனதயாளன் கட்டவிழ்த்து விட்டார். மீனையும், கோழியையும், 'மெயின் டிஷ்ஷாக' மாற்றிக்கொண்டார். 'தோசையில் நெய் விடாதே, நெய்யில் தோசையை சுடு. முட்டையில், இருந்து மஞ்சள் கருவை மட்டும் பிரித்து, கரண்டி ஆம்லேட் போடு. ஐந்து வகையான ஐஸ்கிரீமில் எந்த வகை வேணும்ன்னு கேட்காதப்பா... ஐந்து வகையையும் கொடு; முடிந்தால் நாளை ஆறாவது வகையையும் கொண்டு வா...' என்பார்.
நளபாகம் தெரிந்திருந்த நமக்கு, இப்படி புதுமையான தீனதயாளபாகத்தை பார்த்து, ஒரு பக்கம் மனசு, 'பக் பக்' என்று அடித்துக் கொண்டாலும், ரொம்ப நாள் கழித்து, ஐயா சந்தோஷமாக இருக்கிறார். அவரது சந்தோஷத்திற்கு குறுக்கே நிற்க வேண்டுமா என்ற எண்ணமும் எழ, அவர் போக்கிற்கு விட்டு விட்டோம். பிரச்னை ஏதுமின்றி குற்றால டூர் நிறைவு பகுதிக்கு வந்தது.
அந்துமணியை பொறுத்தவரை, குற்றாலத்தைவிட்டு வாசகர்கள் வெளியே வந்த உடனேயே டூர் முடிவு பெற்றதாக கருதுவது இல்லை. மதுரையில் இறக்கிவிடப்படும் வாசகர்கள், அவரவர் வசதிப்படி ரயில், பஸ், உள்ளூர் என்றால் ஆட்டோ போன்ற வாகனங்களில் போய் சேர்ந்து, 'நாங்கள் நல்லபடியாக வீடு வந்து சேர்ந்து விட்டோம்...' என்று தகவல் சொன்னால்தான், டூர் நிறைவு பெற்றதாக அர்த்தப்படுத்திக் கொள்வார்.
இப்படி, 2000மாவது ஆண்டில் கலந்து கொண்ட வாசகர்கள் அனைவரும் மறுநாள் காலை, அவரவர் வீடு போய் சேர்ந்து விட்டதாக சந்தோஷத்துடனும், நன்றியுடனும் போன் மூலம் தகவல் சொன்னார்கள்.
ஒரே ஒருவரிடம் இருந்து மட்டும் எந்த தகவலும் இல்லை.
அந்த ஒருவர் தீனதயாளன்.
குற்றாலமும், ஐந்தருவி ரகசியமும்…
தொடர்ந்து பல மாதங்களாக மழை பெய்யாவிட்டாலும், குற்றாலம் ஐந்தருவியில் மட்டும் தண்ணீர் கொஞ்சமாவது விழுந்து கொண்டிருக்கும். இதற்கு காரணம், ஐந்தருவி நீரோடையில் மனித ஆக்கிரமிப்பு குறைவு.
நேரம் கிடைக்கும் போது வனத்துறை அலுவலகத்தில் அனுமதிப் பெற்று, மெயின் அருவியின் நீரோடையை பின்தொடர்ந்து சுற்றிப் பாருங்கள். அதன்வழியே மலைத்தோட்டப் பயிர்கள் பயிரிடப்பட்ட விவசாய நிலங்களும், குட்டி குட்டி கோவில்களும் நிறைந்திருப்பதை காணலாம்.
ஆனால், ஐந்தருவியின் நீரோடையை பின்தொடர்ந்து பார்த்தோமேயானால், அங்கு மனித ஆக்கிரமிப்புகள் கிடையாது. மேலும், ஐந்தருவி நீரோடையில் மூங்கில் மரங்களும், புல் வகை குடும்பத்தைச் சார்ந்த பல்வேறு அரிய மரங்களும் செழித்து வளர்ந்திருக்கின்றன. இந்த மரங்கள், மண்ணின் நீர்ப்பிடிப்பு திறனை அதிகரிக்கச் செய்கின்றன. மேலும், நீரோடையில் காணப்படும் வளமான மண்களும், ஈரமான தட்பவெப்பநிலையும், இயற்கையான ஊற்றுகளை உருவாக்குகின்றன. ஏனெனில், குற்றால மலை என்பது, 'தென்னிந்திய ஈரமான இலையுதிர் கலப்புக் காடுகள்' வகையைச் சேர்ந்தது
குற்றால மலையில் விளையும் அரிய தாவரங்கள் மூலம் கிடைக்கும் நீர்ப்பிடிப்புத் தன்மையும், வளமான நீரோடை மண்களால் கிடைக்கும் இயற்கை ஊற்றுகளும், தட்பவெப்பநிலையால் கிடைக்கும் ஈரப்பதமும், நீர்க்கசிவுத் தன்மையும் சேர்ந்து தான், தொடர்ந்து பல மாதங்களுக்கு மழை பெய்யாவிட்டாலும், ஐந்தருவியில் மட்டும் தண்ணீர் கொஞ்சமாவது விழுந்துக்கொண்டிருக்கிறது.
ஒன்று நிச்சயம்; மனித ஆக்கிரமிப்பு இல்லாத இடங்கள், அழகானவை மட்டுமல்ல, இயற்கைக்கு அவசியமானவையும் கூட.
— அருவி கொட்டும்.
-எல்.முருகராஜ்
