PUBLISHED ON : ஜூலை 06, 2014

குற்றாலத்தில் உள்ள ஒவ்வொரு அருவிக்கும் ஒரு குணாதிசயம் உண்டு; அதை உணர்ந்து, ஆனந்தமாக குளிப்பது எப்படி என்று வகுப்பெடுத்த குமரகுருபரன், அடுத்தபடியாக குற்றாலத்தில், 'ஷாப்பிங்' செய்வது குறித்து சொன்னார். அது...
'இயற்கையின் அழகு கொட்டிக் கிடக்கும் குற்றாலத்திற்கு வந்துள்ள வாசகியர்களாகிய நீங்கள், இந்த மூன்று நாட்களும் அருவிகளில் குளிப்பதற்கும், இங்குள்ள சுற்றுலா தலங்களை சுற்றிப் பார்ப்பதற்குமே செலவிடுங்கள்.
'அதைவிட்டு, பொட்டு அட்டை வாங்கு வதற்காக, அரைநாளை செலவழிக்காதீர்கள்; இங்குள்ள பொட்டு அட்டை, உங்கள் ஊரில் இருந்து கொண்டு வரப்பெற்று, ஒன்றுக்கு மூன்று மடங்கு விலையில் விற்கப்படுகிறது.
'அதுபோல், இங்கு விற்கப்படும் மூலிகை எண்ணெய் மற்றும் மூலிகை பொடி போன்றவை பெரும்பாலும் போலியானவையே! குற்றாலத்தில் கலப்படமில்லாமல் இருப்பது இரண்டே விஷயங்கள்தான்... ஒன்று குரங்கு; அதன் சுறுசுறுப்பை ரசிக்கலாமே தவிர, வீட்டிற்கு கூட்டிச் செல்ல முடியாது. இரண்டாவது, அருவி; அருவிகளை ஆசைதீர பார்க்கலாம், ஆனந்தமாக குளிக்கலாம். அதையும் எடுத்துச் செல்ல முடியாது.
'மற்றபடி பெரும்பாலான விஷயங்கள் பொய்யானவை மட்டும் அல்ல... போலியான வையும் கூட . உங்களுக்கு என் பேச்சில் நம்பிக்கை இல்லாவிட்டால், ஒரு உண்மை சம்பவத்தை சொல்கிறேன். குற்றாலத்திற்கு வாக்கப்பட்டு வந்த ஒரு பெண், தான் கர்ப்பமானதும் தனக்கு பிறக்கும் பிள்ளை சிவப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, இங்கு கிடைத்த குங்குமப்பூவை பாலில், காபியில், டீயில், சாதத்தில், சாம்பாரில், ரசத்தில் அவ்வளவு ஏன்... தண்ணியில் கூட போட்டு சாப்பிட்டார்.
'அவ்வளவு குங்குமப்பூ சாப்பிட்ட தாய்க்கு, குழந்தையும் பிறந்தது. அந்த குழந்தை செக்கச் செவேல் என்று தானே இருந்திருக்க வேண்டும்... ஆனால் அப்படியில்லாமல், நிறைஞ்ச அமாவாசை நிறத்தில், குழந்தை பிறந்தது. அந்த குழந்தை வேறு யாருமல்ல, நான்தான்...' என்று சொல்லி, நிறுத்தினார் குமரகுருபரன்.
பின்னர் தொடர்ந்து பேசுகையில், 'என்னைப்போல நீங்களும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான், இவ்வளவும் சொல்கிறேன். மற்றபடி, 'திருநெல்வேலிக்கு வந்துவிட்டு அல்வா கூட வாங்காமல் போக முடியுமா...' என்று, நினைக்கலாம். வந்திருக்கும் உங்கள் அனைவரது குடும்பத்திற்கும் திருநெல்வேலி அல்வாவை ஸ்பெஷலாக கிண்டச்செய்து, போகும் போது கொடுத்து விடுவார் அந்துமணி. ஏதாவது வாங்கியே ஆகவேண்டும் என்றால், இந்த பகுதியில் மட்டுமே கிடைக்கக்கூடிய மங்குஸ்தான், ரம்டன் ஆகிய பழங்களை வாங்கலாம். ஆனால், கடைக்காரர் நீங்கள் சாப்பிட்டு பார்ப்பதற்கென்று சில பழங்களை தருவார். அந்த பழங்கள் மிகவும் சுவையாக இருக்கும். ஆனால், பொட்டலமாக கட்டிக்கொடுக்கும் பழங்களோ வேறு மாதிரியாக இருக்கும். அதிலும், கொஞ்சம் எச்சரிக்கை தேவை...' என்று சொன்னார்.
இதைக்கேட்டு வாசகியருக்கு கொஞ்சம் வருத்தம் என்றாலும், வாசகர்களுக்கு ரொம்ப சந்தோஷம். தங்களது பர்சுக்கு வேட்டு வைக்காமல் காப்பாற்றியதற்காக, குங்குமப்பூவால் பாதிக்கப்பட்ட குமரகுருபரனுடன் ரகசியமாக கைகுலுக்கி, தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
இந்த நேரம், ஒரு பெண்ணின் குரல் ஓங்கி ஒலித்தது...
'போதும் இதோடு நிறுத்திக்குங்க... எல்லாரும் கொட்டாவி விட ஆரம்பிச்சுட்டாங்க. குளிக்கவும் போக விடாம, ஷாப்பிங்கும் செய்யவிடாம என்ன மனுஷன்யா நீங்க... வாத்தியாருங்கிறது சரியாத்தான் இருக்கு; ஆளே இல்லாத வகுப்பிலேயே ஆறு மணி நேரம் பேசுவீங்க... இப்ப இவ்ளோ ஆள் கிடைச்சா விடுவீங்களா?' என்று எழுந்த வார்த்தையிலும், அதை உச்சரித்த தொனியிலும், கோபம் கொப்புளித்தது.
வார்த்தை வந்த திசையை நோக்கி பார்த்த குமரகுருபரன், அடுத்தகணம் அமைதியின் சொரூபமானார். கையது கொண்டு மெய்யது போர்த்தியும், அவரது உடல் நடுங்குவதை தடுக்க முடியவில்லை.
அவர் பார்த்த திசையில் அவரது தர்மபத்தினியான சீதா, 'கண்ணகி' கோலத்தில் நின்று கொண்டிருந்தார். கையில் சிலம்பிற்கு பதிலாக, குடித்து முடித்த இளநீர் மட்டை காணப்பட்டது.
குற்றாலமும், சண்முகவல்லியும்...
குற்றாலம் என்பது குளிப்பதற்கும், சாப்பிடுவதற்குமான சுற்றுலா தலம். சீசன் நேரத்தை தவிர, மற்ற நாட்களில் ஆள் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கும் என்ற நம் எண்ணத்தை மாற்றி, குற்றாலம் என்பது, அறிவுசார் மக்களும் நிறைந்த இடம் என்பதை நிருபித்தவர் சண்முகவல்லி.
குற்றாலம் பக்கம் உள்ள இலஞ்சி பாரத் மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்தவர், கடந்த, 2013ல் நடந்த பிளஸ் டூ தேர்வில், நெல்லை மாவட்டத்திலேயே முதல் மாணவியாக வந்து, தான் சார்ந்த குற்றாலத்திற்கு, பெயர் வாங்கிக் கொடுத்தவர். இதன் மூலம், தமிழக ரேங்க் பட்டியலில் ஐந்தாவதாக வந்து, அந்த பட்டியலில், நெல்லையும் இணைய காரணமானவர்.1,200க்கு 1,185 மதிப்பெண் எடுத்திருந்தார். நான்கு மதிப்பெண்கள் வித்தியாசத்தில், மாநிலத்தின் முதல் ரேங்கை தவற விட்டார்.
குற்றாலம் பராசக்தி பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த போது, ஐநூறுக்கு ஐநூறு மதிப்பெண்கள் வாங்கி, மாநில ரேங்க் பெற்றவர். பல மாணவ, மாணவியர் சென்னை அண்ணா பல்கலையில் இ.சி.இ., இன்ஜினீயரிங் படிப்பு கிடைக்காதா என, தவமிருந்த போது, இவருக்கு அந்த சீட்டு எளிதில் கிடைத்தது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2வில் ஸ்கோர் செய்தவர்கள் கல்லூரியில், பல்கலையில் படிக்கும் போது சரியாக படிக்கமாட்டார்கள், மதிப்பெண் பெற மாட்டார்கள் என்ற கருத்தை உடைக்கும்படியாக, தற்போது அண்ணா பல்கலையில், தான் படிக்கும் படிப்பில், பத்துக்கு பத்து புள்ளிகள் எடுத்து, முதலாவது பருவ தேர்வில் பல்கலையின், அவுட் ஸ்டேண்டிங் மாணவி என்ற பெயரை எடுத்துள்ளார்.
பல்வேறு அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும் பிளஸ் 2வில் சாதனை படைத்ததை பாராட்டி, தனக்கு பரிசாக வழங்கிய பணத்தை, தனக்கென வைத்துக் கொள்ளாமல், 'தினமலர்' இதழ் சுட்டிக் காட்டும் ஏழை மாணவ, மாணவியருக்கு பிரித்து கொடுத்தன் மூலம், பல ஏழைப் பெற்றோரின் வாழ்த்துகளையும் பெற்றுள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக குற்றால டூர் வாசகர்கள் தங்கிவரும் பசுமையும், இனிமையும் நிறைந்த அலங்கார் ரிசார்ட்ஸ் உரிமையாளர் ஈஸ்வர்ராஜ் என்பவரது மகள் தான் இந்த சண்முகவல்லி.
ஆகவே, இந்த பள்ளியில் படித்தால்தான், நம் பிள்ளை அதிக மதிப்பெண் எடுக்கும் என்ற மனநிலையை மாற்றி, எந்த பள்ளியில் படித்தாலும், படிக்கிற பிள்ளை படிக்கும் என்பதை நிரூபித்துக் காட்டிய சண்முகவல்லியை பார்த்தாவது, பெற்றோர் விழித்துக் கொள்ள வேண்டும்.
— அருவி கொட்டும்.
-எல்.முருகராஜ்
