தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : ஜூலை 06, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 06, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஒன்பதாம் பிராயத்தன் என் விழிக் கோது காதை சகுந்தலை ஒத்தனள்' என்று, பாரதியார் எழுதியிருப்பது போல், எனக்கும் பன்னிரண்டு வயதில், ஒரு காதல் அனுபவம் ஏற்பட்டது. 'வயது முற்றிய பின்னறு காதலே மாசுடைத்து...' என்கிறார் பாரதியார். அதில் மாசு இருந்ததா, இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால், அவள், மேல் எனக்கு காதல். அவளுக்கு உண்டா என்றும் தெரியாது. அவள், என்னைச் சுற்றிச் சுற்றி வருவாள்; என்னோடு விளையாடுவாள். நானும், அவளும் தனிமையில் பேசி, சிரித்து, தோட்டமெல்லாம் திரிவோம். நான், என்ன சொன்னாலும், விழுந்து விழுந்து சிரிப்பாள். நான் பேசுவதெல்லாம், அவளுக்கு, 'ஜோக்' தான். அவளை, ஒரு நாள் காணாவிட்டால், நான் தவித்து போவேன். கண்டதும், அப்படி ஒரு மகிழ்ச்சி ஏற்படும்.

நான் வேலை செய்து கொண்டிருந்தேன். அவளோ கான்வென்ட்டில் படித்தாள். மதிய நேரம் வருவாள். மாலை வரை வேலைக்கு டிமிக்கி கொடுத்து, அவளோடு நான் விளையாடுவேன்.

ஒருநாள் அவள் வரும் போது, நான் உடல்நலம் இல்லாததால், தூங்கி விட்டேன். அவள் வந்து பார்த்து விட்டு போய் விட்டாள். தூங்கி எழுந்த போது, அவள் நினைவுடனே எழுந்தேன். அவள் வந்து போய் விட்டதாக கூறினர். எனக்கு அந்த ஏமாற்றத்தை தாங்க முடியவில்லை. தனிமையில் போய், மொட்டை மாடியில் கவிழ்ந்து படுத்து, எதையோ இழந்தவனாக சோகம் தாளாமல், கதறிக் கதறி அழுதேன்.

அடுத்த நாள் அவள் வருவாள் தான். ஆனால், அன்று அவளைப் பார்க்காத வருத்தத்தில், அவ்வளவு அழுகை, சோகம்.

அதன்பின், அவள் எங்கோ, நான் எங்கோ பிரிந்த பின், இடையில், ஆறு ஆண்டுகள் கழித்து, எனக்கு பதினெட்டு வயதில், அவளைப் பதினாறு வயதுப் பெண்ணாக, மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அதுவரையில், அவளது பெயரையும், நட்பையும் மறவாமல், நினைவில் பாதுகாத்து, வைத்திருந்தேன்.

அவள் வரப் போகிறாள் என்று, முன்னாலேயே எனக்கு தெரியும். எனவே, அவள் வருகைக்காக, நான் காத்திருந்தேன். அவளும், வீட்டில் நுழைந்ததும், என் பெயரை கூறி, 'எங்கே?' என்று கேட்டு, ஆவலாய் வந்து, கதவைத் திறந்து, நின்றாள்.

அந்த வினாடி, என் காதல், அவள் காலடியில் வீழ்ந்து செத்தது. காரணம், அவள், 'நெடு நெடு'வென, என்னை விட, உயரமானவளாக வளர்ந்திருந்தது தான். அதனால், என் மனம் ஏன் மாற வேண்டும்... இது என்ன, 'சைக்காலஜி' என்று, எனக்கு புரியவில்லை.

அவள் என்னோடு மிகவும் ஆர்வத்தோடும், நட்புணர்வோடும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தாள். அந்தப் பழைய நாட்களை நினைவுறுத்தி, அவள் பேசும் போது, எனக்கு வருத்தமாகவும், ஏன் கோபமாக கூட இருந்தது. 'இவள் யார் அந்த அழகான நினைவுச் சித்திரங்களை கலைப்பதற்கு...' என்று, தோன்றியது. அதன் பின், அவளை நான் சந்திக்கவே இல்லை.

— 'நினைத்துப் பார்க்கிறேன்' என்ற கட்டுரையில், ஜெயகாந்தன்.

நடைபயிற்சி மேற்கொண்ட போது, தெருவில் கிடந்த பஞ்சை எடுத்து, பத்திரப்படுத்தச் சொல்லி, மறுநாள் அதை ஞாபகமாக வாங்கி, ராட்டை நூல் நூற்பதற்கு காந்திஜி பயன்படுத்திய நிகழ்ச்சி பிரசித்தமானது.எவ்வளவுதான் அற்ப பொருளாயிருந்தாலும், மனிதனின் உழைப்பு அதில், இருக்கிறது. அதை மதிக்க வேண்டும் என்பது தான், இதன் கருத்து.

பிரான்ஸ் நாட்டில் நடந்த, ஒரு சம்பவம்:

வறுமையில் உழலும் ஒரு சிறுவன், வேலை தேடி ஒரு நிறுவனத்திற்கு போனான். அதன் நிர்வாகி வேலை இல்லை என்று கூறி, கையை விரித்தார். சிறுவன் திரும்பி போகும் போது, வாசலைக் கடந்தவன், குனிந்து, கீழே கிடந்த எதையோ எடுத்தான்.

தற்செயலாக, அதைப் பார்த்த நிர்வாகிக்கு, 'எதை எடுத்தான்... நிறுவனத்துக்கு சொந்தமான விலையுயர்ந்த பொருளாக இருக்குமோ...' என, சந்தேகப்பட்டு, கூப்பிட்டு விசாரித்தார்.

அவன் எடுத்துக் காண்பித்தான்; அவர் உள்ளம் நெகிழ்ந்தது.

அற்பத்திலும் அற்பமான குண்டூசி. அதை மதித்து, சட்டையில் குத்திக் கொண்டான். அந்தப் பையனுக்கு, வேலை தரப்பட்டது.

அந்தச் சிறுவன்தான் பிற்காலத்தில், 'பேங்க்'கர்களில், பெரிய கோடீசுவரராகத் திகழ்ந்த பைலட்!

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us