தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பசுமை நிறைந்த நினைவுகளே... (58)

பசுமை நிறைந்த நினைவுகளே... (58)

பசுமை நிறைந்த நினைவுகளே... (58)


PUBLISHED ON : அக் 12, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 12, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பல்லடத்தில் இருந்து வந்திருந்த வாசகி புவனேசுவரிக்கு, குற்றால டூர் என்பது ஒரு புதிய உலகமாக இருந்தது. இங்கே யாரும், யாருடைய பின்புலத்தை விசாரிப்பது இல்லை. 'உனக்கு என்ன வயசு, எவ்வளவு சம்பளம் வாங்குறே, ஏன் இன்னும் கல்யாணம் ஆகல, கல்யாணம் ஆகி இத்தன வருஷமாச்சே ஏன் இன்னும் குழந்தை பிறக்கல...' என்பது போன்ற வேண்டாத வார்த்தைகளோ, காயப்படுத்தும் விசாரிப்புகளோ இல்லை.

'எல்லாரும் ஓர் குலம்; எல்லாரும் ஓரினம்; எல்லாரும் ஓர் நிறை' என்று பாரதி பாடியது போல எல்லாரும் சமத்துவமாக மகிழ்ச்சியை மட்டுமே பகிர்ந்து கொள்பவர்களாக இருந்தனர்.

'நீங்க முதலில் சாப்பிடுங்க...' என்று பந்திக்கு பிந்தியவர்களையும், 'வாங்கக்கா விளையாடலாம்...' என்று கையை பிடித்து உரிமையோடு இழுக்கும் பாசக்கார உறவுகளையும், பசப்பலான வார்த்தைகள் இல்லாமல் உண்மையிலேயே மனம் திறந்து பாராட்டும் கூட்டத்தையும், கொஞ்சம் முகம் சுணங்கினால் கூட, 'என்னங்க செய்யுது...' என்று நெற்றியில் தொட்டுப் பார்த்து பாசம் காட்டும் தாய்மார்களையும் இங்குதான் பார்த்திருப்பார் போலும். எல்லாவற்றையும் ஒரு ஆச்சர்ய கண்ணோடு பார்த்து, மனதிற்குள் பரவசப்பட்டுப் போனார்.

அதிகம் பேசாதவரான இவரோடுதான் அந்துமணி அதிகம் பேசினார்.

டூரில் கலந்து கொண்டதன் மதிப்பு, 'வாரமலர்' இதழில், பெயரும், படமும் வந்த பின் தான், அவருக்கு புரிந்துள்ளது.

எவ்வளவு பெரிய வணக்கம் போட்டாலும் கண்டுகொள்ளாமல் போகக்கூடிய மேலதிகாரிகள் பலர், புவனேசுவரி இருக்குமிடம் தேடிவந்து, 'நிஜமாவே நீங்க அந்துமணிய பார்த்தீங்களா, பேசினீங்களா...' என்று நம்ப முடியாமல் கேட்டிருக்கின்றனர். மூன்று நாட்களின் அனுபவத்தை, 'ஷிப்ட்' போட்டு, முப்பது நாட்களுக்கு மேல் கேட்டவர்களும், இன்னும் கேட்டுக் கொண்டிருப்பவர்களும் உண்டாம்.

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலரும் குற்றலால டூர் அனுபவங்களை சொல்லச் சொல்லி, திரும்ப திரும்ப கேட்கும் போதுதான், 'ஆகா... நாம அனுபவிச்ச விஷயம் சாதாரணமானதல்ல' என்பது புவனேசுவரிக்கு புரிந்துள்ளது.

'வாரமலர்' இதழ் சார்பாக அனுப்பப்பட்ட, டூரில் எடுத்த புகைப்பட ஆல்பம், அவரது கைக்கு போனதும், அது ஒரு பெரிய சுற்றுக்கு போய் திரும்பி வரவே வாரக் கணக்கானது என்றார் சிரித்துக்கொண்டே.

'திறமையை எப்போதும் வீணடித்துவிடக் கூடாது; வாய்ப்பு வரும் போது அதை பயன்படுத்திக்கணும்...' என, அந்துமணி இவரிடம் சொன்ன விஷயம், மனதில் ஓடிக்கொண்டே இருந்திருக்கிறது. அந்த வார்த்தை, அவருக்குள் உறங்கிக் கிடந்த ஒரு வீராங்கனையை தட்டி எழுப்பி விட்டது என்றே சொல்லலாம்.

படிப்பு முடிந்த கையோடு திருமணம், வேலை, குழந்தைகள் என்று சராசரி குடும்ப பெண்மணியாக வாழ்ந்து கொண்டிருக்கும் புவனேசுவரி, படிக்கும் காலத்தில், ஒரு விளையாட்டு வீராங்கனை. அதுவும் சாதாரண வீராங்கனையல்ல, நீளம் தாண்டுதலில் பரிசும், பாராட்டும் பெற்றவர்.

அவர் வேலை பார்க்கும் அலுவலகத்தின் அறிவிப்பு பலகையில், ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதில், 'அரசு ஊழியர்களுக்கான தடகளப்போட்டிகள் நடைபெறுகிறது; விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்...' என்று எழுதப்பட்டிருந்தது.

இது ஒவ்வொரு ஆண்டும் ஒட்டப்படுவது தான்; எல்லாரையும் போல புவனேசுவரியும் அந்த நோட்டீசை படித்துவிட்டு, வேலையை பார்க்க போய்விடுவார். இது, கடந்த ஆண்டு வரை. இந்த ஆண்டு நோட்டீஸை படித்ததும், 'திறமையை வீணடித்து விட வேண்டாம்; வாய்ப்பு வரும் போது தட்டிக்கழிக்க வேண்டாம்...' என்று அந்துமணி சொன்னது நினைவிற்கு வர, இந்த ஆண்டு போட்டியில், தானும் கலந்து கொள்வதாக பெயர் கொடுத்தார்.

'தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகள் இருக்கையில் இப்ப போய் விளையாண்டால் பார்க்கிறவர்கள் என்ன நினைப்பார்கள்...எப்பவோ விளையாண்டது, திரும்ப இப்ப போய் விளையாடினால் உடம்பு உடன்படுமா...' என்பது போன்ற கேள்விகளை புறந்தள்ளினார்.

கணவர் பிரகாஷ் நல்ல நண்பராக, துணைவராக இருந்து ஊக்கம் கொடுக்க, நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் முதல் கட்டம், இரண்டாவது கட்டம் என்று முன்னேறி, இறுதியில் திருப்பூர் மாவட்டத்தின் சிறந்த நீளம் தாண்டும் வீராங்கனையாக தேர்வானார்.

பாராட்டு மழையில் நனைந்த புவனேசுவரிக்கு, கண்களில் ஆனந்த கண்ணீர். 'கூச்சமும், வெட்கமுமாக குற்றால டூரில் ஒதுங்கி இருந்த புவனேசுவரியா நான்...' என்று தன்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டார். இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு நடுவில் பாராட்டு கிடைக்கிறது என்றால், அதற்கு காரணம் அந்துமணி தான் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

'விரைவில் சென்னையில் நடைபெற இருக்கும் அரசு ஊழியர்களுக்கான மாநில அளவிலான தடகள போட்டியில், நீளம் தாண்டுதலில், நிச்சயம் நானே கோப்பையை பெறுவேன். அந்த கோப்பையை, அந்துமணிக்கு அர்ப்பணிப்பேன்...' என்று மடைதிறந்த வெள்ளம் போல பேசியவரிடம், பழைய பயந்த புவனேசுவரியைக் காணோம்; நம்பிக்கை நாயகியாய், வீரமும், தீரமும் நிறைந்த புதிய புவனேசுவரிதான் தென்பட்டார். அவர் நினைத்தது நடந்தேற வாழ்த்துகள்.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக்கு, விதம் விதமாய் துணிகள் எடுத்து உடுத்துவது வழக்கம் தான்.

ஆனால், 'குற்றால டூர்தான் பெரிய பண்டிகை; அதில் கலந்து கொள்வதுதான், எங்களுக்கு திருவிழா...' என்று சொல்லி, டூருக்காகவே புதிதாக பல ஆடைகள் வாங்கிக்கொண்டு வந்த இருவரைப்பற்றி, அடுத்த வாரம் சொல்கிறேன்.

— அருவி கொட்டும்.

குற்றாலமும், மங்குஸ்தான் பழமும்...

கணினியில் வேலை செய்வோருக்கு, பொதுவாக கண்கள் வறட்சி அடைந்து, கண் எரிச்சலை உண்டாக்கும். இதனால், சிலர் தலைவலி, கழுத்து வலி என, அவதிக்குள்ளாவர்.

இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும். மேலும், இப்பழம், அதிகப்படியான உடல் கொழுப்பைக் குறைத்து மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை தடுக்கிறது. மேலும், நீரிழிவு நோய்களைத் தவிர்க்க, மங்குஸ்தான் பழச்சாறு குடிக்கலாம் என்று ஆய்வில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மங்குஸ்தான் பழத்தில் கெட்ட கொழுப்புகள் இல்லை என்பதுடன், எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்துக்களும் ஏராளமாக உள்ளன.

இப்பழம், மலைப் பகுதியில் விளையக்கூடியவை. இதன் தோல், தடிப்பாக இருக்கும்; பழம், நீலம் கலந்த சிவப்பு கலரில் இருக்கும். இப்பழத்தின் தோல் பகுதியை உடைத்தால், இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்தில் நுங்கு போன்று நான்கு அல்லது ஐந்து, ஆறு சுளைகள் இருக்கும்.

உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் கொண்ட மங்குஸ்தான் பழம் குற்றால சீசன் மாதங்களில், ஏப்ரல், மே, ஜுன், ஜுலை மாதங்களில் அதிகம் விளைகிறது. வெப்பமண்டல நாடுகளில் அதிகமாக பயிரிடப்படுகிறது.

எல்.முருகராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us