PUBLISHED ON : அக் 12, 2014

மறதி ஒரு மருந்து!
* மறதி
மனிதனுக்கு
இயற்கை தந்த வரப்பிரசாதம்!
* மூளை வயலின்
முட்செடிகளைப் பிடுங்கி
களையெடுக்கும் காரியம்
மறதி!
* மறதி
ஒருவகையில் மருந்து!
* மறதி
மருந்துதான்...
உபயோகிக்காத போதே
செயல்பட ஆரம்பித்துவிடும்
சித்து விளையாட்டு!
* மறதி
ஒரு வலி நிவாரணி...
வலி நிவாரணி எங்காவது
வலி தருவதுண்டோ?
* மறதி
நோயல்ல
உடல் வளர்ச்சியின்
ஒரு பரிணாமம்!
* மூளை, சிரசிலிருக்கும்
பாதுகாப்புப் பெட்டகம்
அதன் லாக்கர் சாவி தொலைந்துவிடும் அவலம்
மறதி!
* காதல் துறையில்
மறதியின் சுவை
கசப்பு!
* மறதிக்கு நிறமுண்டு
கருப்பு நிறமாகவே
அது கருதப்பட்டாலும்
அதன் பிரதிபலிப்போ
சிவப்பு!
* மூளையின் பழி வாங்கல்...
உடல் வலிகளை
மூளை தாங்க முடியாத போது
மறதியிடம் அது
மண்டியிடுகிறது!
* இந்த காயத்திற்கு
ஒரு காயம் ஏற்பட்டு விடும்போது
மூளை
நினைவை காவு கொடுத்து
தன்னைக் காத்துக் கொள்கிறது!
* மறதி
வயோதிகர்களின் ஆயுதம்
அவர்தம் வாரிசுகளுக்கோ
சுமை!
* மறதியையோ
மறந்தவர்களையோ
மன்னியுங்கள்
ஏனெனில்,
உலகம்
மன்னிப்பவர்களை
மறந்து விடுவதில்லை!
— வாலிதாசன்,
ஸ்ரீவில்லிபுத்தூர்.
