PUBLISHED ON : டிச 14, 2014

கடந்த, 2005ம் ஆண்டு டூருக்கு தேர்வான சிவகாசி வாசகி பானுதேவியை நேரில் பார்த்து, உங்களுடன் யார் வருவது என்று கேட்ட போது, 'என் அம்மா சரோஜா வருகிறார்...' என்று சொல்லி, அவரை அறிமுகம் செய்தார்.
அப்போது, அவருக்கு வயது, 70.
'டூரில் நிறையப் பேர் இளமையானவங்களா இருக்றாங்களே...அவங்களுக்கு ஈடுகொடுத்திருவீங்களா?' என்று மெதுவாகத்தான் கேட்டேன். ஆனால், சிவகாசிக்கே உரிய தன்மையுடன், 'படபட' வென்று வார்த்தைகளை பட்டாசு போல வெடித்து தள்ளிவிட்டார்.
'நீயும், நானும் ஓடுவோம்; யார் முதல்ல எல்லைக்கோட்டை தொடுறாங்கன்னு பார்ப்போமா? நீங்கள்ௌல்லாம் மெயினருவியில குளிக்கிற ஆளுக. நான் தேனருவியில குளிக்கிற ஆளாக்கும்...' என்று ஏகப்பட்ட சவால்களை விட்டு, டூரில் கலந்து கொண்டார்.
சரோஜாம்மா தேசபக்தி பாடல்கள் பாடுவதில் வல்லவர். இவர் பத்து வயது சிறுமியாய் இருந்த போது, நாட்டில் விடுதலை வேட்கை தலை தூக்கியிருந்ததால், எல்லா மேடைகளிலும் தேசபக்தி பாடல்கள் தான் பாடப்படும். இந்த பாடல்களை கேட்டு கேட்டு மனப்பாடம் செய்தவர், இன்று வரை அப்பாடல்களை மறக்கவில்லை.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், கேட்பவர் உணர்வுகள் பொங்கும் விதத்தில் பாடுவார். இதைக் கேள்விப்பட்ட அந்துமணி, டூரின் இரண்டாவது நாளில் இவரையே சிறப்பு விருந்தினராக்கி, பாடும் வாய்ப்பு கொடுத்தார்.
எந்த வித குறிப்பும் வைத்துக் கொள்ளாமல்,
'...எங்கள் இந்திய சகோதரர்களே வாருங்கள் வாருங்கள் உங்கள் பாரத மாதா வேண்டியே அழைக்கிறாள்...' என்ற நீண்ட பாடலை, உணர்ச்சி பூர்வமாக பாடினார். இதே போல ஐந்தருவியில் குளிக்கும் போது உரத்த குரலெடுத்து பாட, அருவியில் குளித்துக்கொண்டு இருந்தவர்கள் குளிப்பதை நிறுத்தி, இவரை சூழ்ந்து, இவரது பாட்டை, 'ஒன்ஸ்மோர்' கேட்டு விட்டே மீண்டும் குளிக்கச் சென்றனர்.
புலியருவியில், தண்ணீர் விழும் இடத்திற்கு அருகில் ஒரு பெரிய பள்ளம் உண்டு. அந்த பள்ளத்தை நிரப்பி தண்ணீர் ஓடுவதால் பள்ளத்தின் ஆழம் எவ்வளவு என்பது யாருக்கும் தெரியாது. இதனால், பயந்து பயந்து பள்ளத்தின் ஓரத்தில் உள்ள கம்பியை பிடித்தபடி ஆண்கள் உட்பட அனைவரும் வந்தனர்.
'எவ்வளவு பெரிய பள்ளம்ன்னு இறங்கிப் பார்த்தால் தெரிய போகுது...' என்று சொன்னவர், 'கிடுகிடு' வென பள்ளத்தில் இறங்கி விட்டார். கடைசியில் பார்த்தால் இடுப்பளவு பள்ளம்தான். அதன்பின், அனைத்து வாசகிகளும் அந்த பள்ளத்தில் இறங்கிட, கொஞ்ச நேரத்தில் அந்த பள்ளம், மினி நீச்சல் குளமானது.
இவரைப் போலவே, இவரது மகள் பானுதேவிக்கும் துணிச்சல் அதிகம். அந்த ஆண்டு பல்லடத்தை சேர்ந்த மேஜிக் மன்னன் யோகாவின் மேஜிக் ஷோ நடைபெற்றது. 'நான் இங்கே மேடையில் ஒரு பெண்ணை நிற்கவைத்து துண்டு துண்டாக வெட்டப் போகிறேன்; இதில் பங்கேற்க யாருக்கு இங்கே தைரியம் இருக்கிறது?' என்று கேட்டு முடிப்பதற்குள், 'இதோ நான் வர்றேன்...' என்றபடி இரண்டு இரண்டு படிகளாக தாண்டி ஏறிப் போய் நின்ற பானுதேவியின் வேகத்தை பார்த்து, பயந்து போனார் மேஜிக் யோகா.
இதே போல குண்டாறு அருவியில், போர்வையில் ஒருவரை படுக்க வைத்து, கையில் உடுக்கை வைத்து அடித்தபடி பேசிய மேஜிக் யோகா, 'இங்கே படுத்திருக்கிற ஜக்கம்மா நீங்க என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்வாள். இப்ப கூட்டத்தில, பச்சை சட்டை போட்டு, நிற்கிறவரோட பையில எவ்வளவு பணம் இருக்குன்னு சொல்லப்போறா...' என்று சொன்னதும், 'இதெல்லாம் ரொம்ப பழசு; ஜக்கம்மாவுக்கு திறமை இருந்தா, நான் கேட்கிற ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லச் சொல்லுங்க...' என்றார் பானுதேவி.
'நல்லா கேளும்மா... ஜக்கம்மா தயாராயிருக்கிறா...' என்றதும், 'இங்க தான் எங்ககூட அந்துமணி இருக்கிறாரு. அவர் யார்ன்னு கண்டுபிடிச்சு சொன்னாப் போதும்...' என்றதும், 'அவ்வளவுதானே...' என்று கேட்டவர், 'இருங்க... தாயத்து வாங்கிட்டு வந்து சொல்றேன்...' என்று, பொடியனோடு (ஜக்கம்மா) சேர்த்து, போர்வையையும் சுருட்டிக் கொண்டு போனவர் தான் திரும்பி வரவில்லை.
இந்த சிவகாசி தாயும், மகளும் இரண்டாவது முறையாக அதே பாடல்கள் மற்றும் அதே உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். பானுதேவி இந்த முறை கூடுதலாக கேமரா வுமனாகவும் மாறி, நிறைய படங்களை எடுத்தார்.
எந்த ஆண்டு டூர் என்றாலும், டூர் நிறைவடையும் போது, வாசகர்கள் அனைவரும் பிரியப்போகும் உணர்ச்சி கொந்தளிப்பில் இருப்பர். எனக்கு, கூடுதலாக மதுரையில் வாசகர்கள் ரயிலை விட்டு விடக் கூடாதே என்ற டென்ஷனும் சேர்ந்து கொள்ளும்.
இதற்காக ஒருமணி நேரம் முன்னதாகவே பஸ்சை, குற்றாலத்தில் இருந்து கிளப்பினாலும், ராஜபாளையத்தில் காபி பிரேக், மதுரை நுழைவு வாயிலில் டிராபிக் ஜாம் என, ரயில் புறப்படுவதற்கு பத்து நிமிடத்திற்கு முன்தான் பஸ், ரயில் நிலையத்திற்குள் செல்லும். அவசர அவசரமாக லக்கேஜ் எடுத்து தங்களது கோச்சில் ஏறி உட்கார்ந்து, வாசகர்கள் கை அசைக்கவும், ரயில் புறப்படவும் சரியாக இருக்கும். இது தான் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.
ஆனால், 2005ம் ஆண்டு ரயில் நிலையத்திற்குள் செல்லும் போது, ஐந்து நிமிடம்தான் அவகாசம் இருந்தது. அனைவரும் அவசர அவசரமாக ரயில் நிலையத்திற்குள் சென்று பாண்டியன் ரயில் நிற்கும் முதல் நடைமேடைக்கு போன போது, அங்கே ரயிலைக் காணோம்.
— அருவி கொட்டும்.
குற்றாலமும், ராமாயண சாகிப்பும்...
குற்றாலம் அருகிலுள்ள தென்காசியைச் சேர்ந்தவர் ராசா முகம்மது; கூட்டுறவு துறையில் இணை இயக்குனராக இருந்து ஓய்வு பெற்றவர். பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், மதநல்லிணக்கம் மற்றும் இலக்கிய, சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருபவர்.
பாவலர் பெருஞ்சித்திரனார், சாலை இளந்திரையன், பாவாணர் போன்றவர்களோடு இளம் வயதிலேயே ஏற்பட்ட பழக்கம் காரணமாக, தமிழுணர்வு அதிகம். பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ள இந்த கவிஞரை, நாடு முழுவதும் அடையாளம் காணப்படும் பெயர், 'ராமாயண சாகிப்!'வாசிப்பதில் அளவு கடந்த நேசிப்பு கொண்டவரான இவர், எல்லா புத்தகங்களையும் வாசித்தார். வாசித்ததில் இவருக்கு பிடித்தது கம்ப ராமாயணம்.
ராமாயணத்தை படித்த போது மனதில் கிளர்ந்து எழுந்த கருத்துக்களை, நெல்லை கம்பன் கழகத்தின் சார்பில் நடந்த சொற்பொழிவில் வெளிப்படுத்தினார். இவரது ராமாயண சொற்பொழிவு அன்று பார்வையாளர்கள் பலரையும் கவர்ந்ததன் காரணமாக, இவருக்கு, 'ராமாயண சாகிப்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.
சாகிப் என்றால் தோழன் என்றும் பொருள்படும். ஆகவே, தோழமை மற்றும் சகோதர உணர்வோடு படகோட்டி குகனை ராமன் அரவணைத்துக் கொண்டது போல, ராமாயணம் இவரை அரவணைத்துக் கொண்டது. அன்று முதல் இன்று வரை, பல்வேறு மேடைகளில் எளிய தமிழில் ராமாயண சொற்பொழிவு நிகழ்த்தி வருகிறார் இந்த ராமாயண சாகிப்.
எல்.முருகராஜ்

