தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பசுமை நிறைந்த நினைவுகளே!

பசுமை நிறைந்த நினைவுகளே!

பசுமை நிறைந்த நினைவுகளே!


PUBLISHED ON : ஆக 24, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 24, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்த ஆண்டு குற்றால டூரில் கலந்து கொண்டவர்களில் வித்தியாசமான வேலை பார்க்கும் ஒருவரைப் பற்றி கூறுவதாக கடந்த வாரம் சொல்லியிருந்தேன். தினமலர் - வாரமலர் இதழ் குற்றால டூருக்கு மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் முதல் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் சாதாரண கிராமத்து மக்கள் வரை பல்வேறு துறையைச் சார்ந்தோர் பெருவாரியாக வந்துள்ளனர். சுற்றுலாத் துறை தலைவராக இருந்தவரே குற்றால டூரில் கலந்து கொண்டுள்ளார்.

ஆனால், இதுவரை துப்பறியும் பணியைச் சார்ந்த ஒருவர், நம் டூரில் இடம் பெற்றது இல்லை. அப்படி ஒருவர் நடந்து முடிந்த, இந்த ஆண்டு டூரில் முதன் முதலாக கலந்து கொண்டார்.

அவர் பெயர் சுபாஷினி; கோவையில் வசித்து வருகிறார்.

உறவினர்கள் எல்லாம் காவல் மற்றும் ராணுவத் துறையில் இருப்பதால், நாட்டுப்பற்றுடன் கூடிய வித்தியாசமான பணியில் ஈடுபட வேண்டும் என்று நினைத்தவருக்கு, இந்த துப்பறியும் பணி பிடித்து போக, தற்போது கோவையில் தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம், இவர் வேலை குறித்து கேட்டபோது, 'என் வேலை குறித்து பேசினால், வாடிக்கையாளர்களைப் பற்றியும் பேச வேண்டியிருக்கும்; ஆனால், அவர்களது நம்பிக்கையை பெற்றிருப்பதால், நான் துப்பு துலக்கிய வழக்குகளை பற்றி சொல்வது இல்லை.

'அதே நேரம், பெண்ணை பெற்றவர்களுக்கு ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன்... இக்காலத்தில் பெற்றோர்களே தங்களது பையன்களின் நடவடிக்கைகளை தெரிந்து வைத்திருப்பது இல்லை. அதனால், உங்கள் பெண்ணுக்கு வரக் கூடிய மாப்பிள்ளை குறித்து நன்றாக விசாரித்த பின் பெண்ணை கொடுங்கள்.

'என் பணியில் ஒரு பகுதி, மாப்பிள்ளை குறித்து விசாரித்து சொல்வது. இதன் மூலமாக, கடந்த சில ஆண்டுகளாக, பல நல்ல குடும்பங்கள் அமைய நானும் உழைத்திருக்கிறேன் என்ற எண்ணமே இந்த தொழிலில் எனக்கு கிடைக்கும் ஆத்மதிருப்தி...' என்றார்.

ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இவருக்கு, பத்தாம் வகுப்பு வரை தமிழ் என்றால் என்னவென்றே தெரியாது. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பிளஸ்௧ தமிழ்நாட்டில் படிக்கவேண்டி வந்த போது, தமிழ் எடுத்து படித்து, பிளஸ் ௨வில், 'அவுட் ஸ்டேண்டிங்' மாணவியாக வந்துள்ளார். முதுகலை படித்து முடித்த இவர், தற்போது தமிழில் கதை, கவிதை மற்றும் கட்டுரை எழுதுமளவிற்கு தன் திறனை வளர்த்துள்ளார்.

துப்பறியும் நிபுணி என்றதும் கறுப்பு கண்ணாடி, தொப்பி, துப்பாக்கி என, ரகசிய போலீஸ் 115 போல வருவாரோ என்று நினைத்துக் கொண்டிருக்க, ஜீன்ஸ் பேன்ட், டி - சர்ட்டுடன் கல்லூரி மாணவி போல அறிமுகமானார்.

அந்துமணியின் வாசகியான இவர், காதுகளை திறந்து நிறைய கேட்கவும் செய்வார், அதைவிட நிறைய பேசவும் செய்வார் என்பதால், டூரில் வந்த அனைவருடனும் சட்டென ஒட்டிக் கொண்டார். கொஞ்ச நேரம் ஆளைக் காணோம் என்றாலே, 'எங்கே சுபா?' என்று தேடுமளவிற்கு வந்திருந்த வாசகர்களின் அன்பை பெற்றிருந்தார்.

ஒரே நேரத்தில் சீரியசாகவும், காமெடியாகவும் பேசுவதில் சமர்த்தர். கருத்து சொல்வது என்றால் ஏக சந்தோஷம்; இவர் பேச்சைக்கேட்ட பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் ஞானசம்பந்தனே ஒரு கட்டத்தில், 'அம்மா தாயே... தீர்ப்ப நான் சொல்லிக்கிறேன்; நீங்க சொல்ல வந்ததை மட்டும் சொல்லுங்கம்மா அது போதும்...' என்று கெஞ்சாத குறையாக கேட்டுக் கொண்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

டூர் நிகழ்ச்சிகளின் போது, வாசகர்கள் முன்னிலையில், கையில் ஒரு டம்ளரை வைத்து, 'இதை எவ்வளவு நேரம் வைத்துக் கொள்ளலாம்?' என்று கேள்வி கேட்டார். பலரும் ஒவ்வொரு நேரத்தை கூறினர்.

'இதை எவ்வளவு நேரம் சுமந்தாலும், கையில் வலி எடுப்பதை தவிர வேறு ஒன்றும் நேரப்போவது இல்லை. அதனால், தூக்கிப் போட்டு விடுங்கள் இந்த டம்பளரையும், டம்ளர் போன்ற பிரச்னைகளையும்! அதனால், மனதில் வலிதான் ஏற்படுமே தவிர, வேறு எதுவும் நேரப்போவது இல்லை...' என்று சொல்லி, கைதட்டலை அள்ளினார்.

'டூர் முடிவதற்குள் அந்துமணியை கண்டுபிடிக்காவிட்டால், நான், என் தொழிலையே விட்டு விடுகிறேன்...' என்று சவால் விட்டு டூரில் கலந்து கொண்டவர், அதே போல கண்டுபிடித்தும் விட்டார்.

அந்துமணியுடன் ஒரு தனிப்படம் எடுத்துக் கொண்டவர், 'உங்களுடன் நிறைய பேச வேண்டும்; உங்கள் தொலைபேசி எண்ணைக் கொடுங்கள்...' என்று கேட்டார்.

அந்துமணியும் வாசகி சுபாஷினியின் வேண்டுகோளை ஏற்று, தொலைபேசி எண்ணைக் கொடுத்தார்.

அந்த எண் சுபாஷினிக்கு மட்டுமல்ல அவசரத்திற்கு உங்களில் பலருக்கும் உபயோகமாக இருக்கும்; அந்த எண்ணை அடுத்த வாரம் தருகிறேன்.

— அருவி கொட்டும்.

குற்றாலமும், படகு குழாமும்...: குற்றாலத்தில், அருவி குளியலுக்கு அடுத்தபடியாக மக்கள் அதிகமாக பொழுது போக்கும் இடம், படகு குழாம். ஐந்தருவி ரோட்டில் உள்ளது வெண்ணமடைகுளம்; குற்றால சீசனில், மலையில் பெய்யும் மழைத் தண்ணீரின் வருகையால் இக்குளம் நிரம்பி விடும். நீர் நிரம்பியதும், படகு சவாரியை ஆரம்பித்து விடும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்.

இரண்டு பேர் பெடலிங் போட் செய்ய, 100 ரூபாயும், நான்கு பேருக்கு, 125 ரூபாயும், நான்கு பேர் உட்கார்ந்து படகு பயணம் சென்று வர, ஓட்டுனர் கட்டணம் உட்பட, 155 ரூபாயும், தனிநபர் படகு பயணம் செய்ய, 75 ரூபாயும் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.

மொத்தம், 33 படகுகள் உள்ளன. ஆகஸ்ட் மாதம் சீசன் முடியும் வரை, விடுமுறை இன்றி வாரத்தின் ஏழு நாட்களும் காலை, 9:00 மணிமுதல் மாலை, 6:00 மணி வரை படகு குழாம் செயல்படும்.

இங்கு சுவையான சிற்றுண்டிகள் மற்றும் காபி, டீயும் கிடைக்கிறது. மேலும், பக்கத்தில் உள்ள பூங்காவில், சிறுவர்களை ஈர்க்கும் ஊஞ்சல் போன்றவையும் உண்டு.

-எல்.முருகராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us