PUBLISHED ON : ஆக 24, 2014

அ நிறம் | அளவு
அடைக்கலம் தேடி!
பல நேரங்களில்
அழுகையோடு
வரும் என்னை
ஆசுவாசப் படுத்தி
ஆறுதல் அளிக்கிறாய்!
கனிவான
உன் பேச்சில்
கவலைகளை மறந்து
களிப்புடன் சிரிக்கிறேன்!
தாய் மடிக்கு அடுத்த படியாய்
எனக்கே எனக்காய்...
எனக்காகவே இருப்பது
நீ மட்டும் தான்!
என்னை நானே
கண்டு கொள்ள
என் வளர்ச்சியை கண்டு
வியந்து விழி விரிக்க
வாய்ப்பளிக்கிறாய்!
பரபரப்பான வாழ்க்கையில்
பறந்து பறந்து
வேலை செய்தாலும்
உன்னுடன் அளவளாவும்
பத்து நிமிடங்கள்
உண்மையிலேயே
சொர்க்கம்!
முகஸ்துதிக்காக
சொல்லவில்லை...
பொன் பொருளை
வழங்குவதில் மட்டும் தான்
கர்ணன்
கொடை வள்ளல்!
ஆனால்...
அன்பினையும் சேர்த்து
வாரி வழங்கும்
உன்னிடம்
அந்த, 'கர்ணனே'
கையேந்துவான்!
எனக்கோ...
தருவதற்கும்
தகுதியில்லை
பெறுவதற்கும்
உரிமையில்லை
என்றாலும்...
உன் அன்பில்
அடைக்கலம் தேடி
யாசிக்கிறேன்!
— ஆர்.அம்புஜம்,
மதுரை.
