
என்ன நடக்கிறது, ஏன் நடக்கிறது, காரணம் தெரியவில்லை. தெய்வம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. உணர்ந்து செயல்படுபவர்கள், அர்ஜுனனைப் போல, தப்பிப் பிழைத்து, உயர்வு பெறுகின்றனர்- என்பதை விளக்கும் நிகழ்வு இது:
மகாபாரத யுத்தம் கடுமையாக நடந்து கொண்டிருந்தது. 'என் மகனான அபிமன்யுவின் முடிவிற்கு காரணமான, ஜயத்ரதனைக் கொல்வேன்...' என, சபதம் செய்திருந்த, அர்ஜுனன், அம்பை ஏவி, ஜயத்ரதன் தலையைக் கொய்தான்.
அர்ஜுனனின் தேரை ஓட்டிக் கொண்டிருந்த கண்ணன், 'பார்த்தா... அந்த ஜயத்ரதன் தலை கீழே விழாதவாறு, அம்புகளை ஏவி தட்டியபடியே செல்...' என்றார்.
அர்ஜுனனும் அப்படியே செய்தான்.
சற்றுநேரம் ஆனதும், 'அர்ஜுனா... அதோ பார், அங்கே ஒருவன் தவம் செய்தவாறு இருக்கிறானல்லவா... அவன் மடியில் இந்த ஜயத்ரதன் தலையைத் தள்ளு...' என்றார், கண்ணன்.
அர்ஜுனனும், அங்கே தவம் செய்து கொண்டிருந்தவனின் மடியில், ஜயத்ரதனின் தலையைத் தள்ளினான்.
தவம் செய்து கொண்டிருந்தவர், திடீரென, ஒரு தலை, தன் மேல் வந்து விழுந்ததைக் கண்டு திடுக்கிட்டு, கீழே தள்ளினார். அதே விநாடியில், தலை சிதறி, அவரும் இறந்து போனார்.
அவர் பெயர் விருத்த ஷத்திரன்; அவர் தான், ஜயத்ரதனின் அப்பா. மகன்
தலையைக் கீழே தள்ளிய அவர், ஏன் இறக்க வேண்டும்?
விருத்த ஷத்திரன், தவம்செய்து, 'என் மகனின் தலையை எவன் கீழே தள்ளுவானோ, அவன் தலை சிதறி இறக்க வேண்டும்...' என, வரம் வாங்கியிருந்தார்.
மகனுக்கு பாதுகாப்பு செய்து விட்டோம் என்பது, அவர் எண்ணம்.
அவர் மகனான ஜயத்ரதனும் இத்தகவலை அறிந்து வைத்திருந்தான்; கேட்க வேண்டுமா?
'எவனும் என்னை ஒன்றும் செய்ய முடியாது...' என்ற எண்ணத்தில் அட்டகாசம்
செய்து கொண்டிருந்தான்.
அதற்கு உச்சம் வைத்தது போல், பாஞ்சாலியை கவர்ந்து ஓடி, பாண்டவர்களால் அவமானப் படுத்தப்பட்டான், ஜயத்ரதன். அந்த அவமானத்தின் விளைவாக, அபிமன்யு வதத்தில் முக்கிய பங்கு வகித்தான்.
என்ன தான் செய்தாலும், தெய்வம் இருக்கிறதல்லவா... அது, ஜயத்ரதன் தலையை வாங்கி, அப்பாவின் மடியில் தள்ளச்செய்து, -அவன் கதையையும் முடித்தது.
தன்னை நம்பிய அர்ஜுனனையும், மற்ற பாண்டவரையும் காத்தது, தெய்வம்.
தெய்வம் உள் நின்று உணர்த்தும்; உணர்வோம். தீவினைகள் நீங்கும்; நல்வினைகள் ஓங்கும். கவலையே வேண்டாம்!
பி. என். பரசுராமன்
ஆன்மிக தகவல்கள்!
* தர்ப்பணம் செய்யும் நாட்களில், உணவில் புழுங்கல் அரிசி சேர்க்கக் கூடாது.
* தெற்கு, தென் கிழக்கு, தென் மேற்கு ஆகிய திசைகளில் உட்கார்ந்து பூஜை செய்யக் கூடாது.