sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்னம் இட்ட கை!

/

அன்னம் இட்ட கை!

அன்னம் இட்ட கை!

அன்னம் இட்ட கை!


PUBLISHED ON : பிப் 07, 2021

Google News

PUBLISHED ON : பிப் 07, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வங்கி மேனேஜர் நாராயணன் புகைப்படம், அந்த இடத்தில் இருப்பதை என்னால் நம்பவே முடியவில்லை. நேர்மையான, ஒழுக்கமான அவரின் புகைப்படம், எப்படி வேறு ஏதோ ஒரு ஊரில் இருக்கும் இந்த இடத்தில்!

நான் அடிக்கடி அந்த வங்கிக்கு பணி நிமித்தம் செல்வேன். எனக்கு மட்டும் அல்ல, அனைவருக்குமே பாகுபாடின்றி சேவை வழங்கி, பாராட்டு பெற்றவர். வேலை விஷயமாக பெங்களூரு வந்த இடத்தில், அவர் புகைப்படம் இருந்தது, எனக்கு ஆச்சர்யம் தான்.

ஜோதிடக்கார பெண்ணை முதல் முறையாக சந்திந்த அந்த நிகழ்வு, என் நினைவுக்கு வந்தது. படித்து முடித்து, வேலை தேடி வந்த கால கட்டம் அது.

பகல் முழுக்க வேலை தேடி அலைந்து, அந்த பூங்காவில் தான் மாலை வேளைகளில் அமர்வதுண்டு. 'இன்டர்வியூ'க்கு தயாராக சில நுால்கள், பெங்களூருவின் பிரபல நாளிதழான காலைக்கதிர், ஆங்கில மொழி அறிவை வளர்த்துக்கொள்ள சில ஆங்கில நுால்கள், தண்ணீர் பாட்டில் என, என் தோள் பையில் இருக்கும்.

என்னைப் போலவே இன்னும் சில இளைஞர்களும் ஆங்காங்கு படித்தபடி இருப்பர்.

அன்று அப்படி தான் படித்துக் கொண்டிருந்தபோது, அருகில் யாரோ வருவதை உணர்ந்து, தலை உயர்த்தினேன். கையில் குழந்தையுடன், ஓர் இளம்பெண்.

'நான் நல்லா ஜோசியம் பார்ப்பேன் சார்... ஐந்து ரூபாய் தான்...' என்றாள்.

எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும், ஐந்து ரூபாய் போனா போகுது... இவள் என்ன தான் சொல்கிறாள் என பார்ப்போம். பத்து நிமிடம், 'டைம் பாஸ்' என நினைத்து, 'சரி, ஓ.கே., ரேகை பாரு...' என்றேன்.

'சார்... உங்ககிட்ட எவ்வளவு காசு இருக்கோ அதை கொடுங்க... உங்க கண்ணு முன்னாடியே இந்த தட்டுல வச்சு மந்திரம் சொல்லி, தொட்டு கும்புட்டுட்டு உடனே கொடுத்துருவேன்... ஒரே மாசத்துல உங்களுக்கு எதிர்பாராம பெரிய காசு கிடைக்கும்...' என்றாள்.

அவளுடன் சற்று விளையாட நினைத்தேன்.

என், 'பர்சில்' 1,000 ரூபாய் நோட்டு இருந்தது. அது, செல்லாதது. எப்படியோ என்னிடம் வந்து விட்டது. இதை கொடுத்துப் பார்க்கலாம் என நினைத்து, அதை எடுத்து நீட்டினேன்.

அவள் அவசரமாக வாங்கி, தன் தட்டில் வைத்தாள்.

'உங்க பேரு?' என்றாள்.

'முள்ளிக்குண்டு தமிழ்நேசன்...' என்றேன்.

ஏதோ மந்திரங்கள் முணுமுணுத்தாள். மெல்ல அந்த ரூபாயை தன் கைப்பைக்குள் திணித்தாள்.

திருநீறு கொடுத்தாள். 'நல்லா இருங்க சார்...' என, சொல்லி எழுந்தாள்.

'என் காசு?' என்றேன். அது, எனக்கு தேவை இல்லை என்றாலும் கேட்டேன்.

'என்ன காசு... சும்மா வம்பு பண்றியா... ஆளை கூப்பிடட்டுமா...' என்றாள்.

'நல்ல வேளை... செல்லாத ரூபாயை தான் கொடுத்தோம்...' என, நினைத்தவாறு கிளம்பினேன்.

சற்று துாரம் நடந்ததும் தான், பேனாவை மறந்து விட்டது தெரிந்தது. அவசரமாக மீண்டும் பூங்காவுக்கு வந்தேன். வரும் வழியில், பக்கத்து கடையில் ஒரே கூட்டமாக இருந்தது. அருகே சென்றேன்.

அந்த ஜோதிட பெண்ணை, இன்னொரு பெண் அடித்துக் கொண்டிருந்தாள்.

'அம்மா... எனக்கு ஒண்ணும் தெரியாதுமா...' என, அவள் அழுது கொண்டிருந்தாள்; பல் உடைந்து வாயிலிருந்து ரத்தம். குழந்தை வீறிட்டு அழுது கொண்டிருந்தது.

'என்ன சார் பிரச்னை?' அருகில் இருந்தவரிடம் கேட்டேன்.

'ஏதோ ஒரு பிராடு பொம்பள சார்...செல்லாத 1,000 ரூபாய் நோட்டை கொடுத்து, பொருட்கள் வாங்க முயற்சி பண்ணி இருக்கு. அதான் அடிக்கிறாங்க...' என்றார்.

எனக்கு, 'குப்'பென வியர்த்தது. விளையாட்டாக செய்தது, அவளுக்கு பிரச்னையாகி விட்டதே. அவசரமாக அங்கிருந்து நகர்ந்தேன்.

கொஞ்ச நாள் இது உறுத்தலாக இருந்தது. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விட்டது.

பல ஆண்டுகள் கழித்து இப்போது தான், பெங்களூரு வருகிறேன். வந்த வேலை முடிந்து விட்டது. மறுநாள் தான் கிளம்புகிறேன். பூங்காவையும் பார்த்து விட்டு வரலாமே என நினைத்து சென்றேன்.

பூங்கா வெகுவாக மாறி இருந்தது.

அருகில் இருந்த, எம்.கே.டி.என்., கேன்டீன் என் கவனத்தை கவர்ந்தது. கூட்டம் அலைமோதியது. உள்ளே நுழைந்து, வசதியான ஓர் இடத்தில் அமர்ந்தேன். அப்போது தான் கடையில் மாட்டப்பட்டிருந்த, எனக்கு அறிமுகமான சென்னை, வங்கி மேனேஜர் நாராயணனின் இள வயது புகைப்படத்தைப் பார்த்து, திகைத்தேன்.

சாப்பிட்டு, 'பில்' தொகையை கொடுக்க, கல்லாவை அணுகினேன்.

''மேடம்... இந்த புகைப்படத்துல இருக்கும் நாராயணன் சார், எனக்கு தெரிந்தவர் தான். ஏன் இதை இங்கே மாட்டி இருக்கீங்க,'' என, மெல்ல கேட்டேன்.

அவள் முகத்தில் ஒரு பரவசம்.

''அம்மா... நம்ம நாராயணன் சார், 'பிரண்ட்' வந்து இருக்காரு,'' என்று, போனில் யாரிடமோ பேசியவள், ''சார்... அம்மா கூப்பிடறாங்க... ப்ளீஸ், உள்ளே போங்க,'' என்றாள்.

உள்ளே சென்றேன்.

''வாங்க சார்,'' என, வரவேற்ற அவளை பார்த்து, திகைத்தேன்.

அவள் தான் பல ஆண்டுகள் முன், நான் பார்த்த ஜோதிடக்காரப் பெண்.

பிரியமாக பேச ஆரம்பித்தாள்.

''எங்க வாழ்க்கையில விளக்கேத்தி வச்சது, அந்த நாராயணன் தம்பி தான். பல ஆண்டுகளானாலும் இன்னிக்கும் நினைவு இருக்கு. ஒரு இளைஞன், தெரிஞ்சோ தெரியாமையோ செல்லாத நோட்டு கொடுத்துட்டான்.

''அதை, ஒரு கடையில கொடுத்தப்போ, அந்த கடைக்கார அம்மா, என்னை அடிச்சு, திட்டினாங்க. தப்பு என் மேல. நான் என்ன செய்ய முடியும். அழுதுக்கிட்டு இருந்தேன்.

''அப்ப தான், அந்த நாராயணன் தம்பி, 'யாரும்மா உனக்கு செல்லாத நோட்டு கொடுத்தது... சொல்லு விசாரிப்போம்'ன்னு சொல்லிச்சு...

''நான், அவனை ஏமாத்த நினைச்சேன். அவன் ஏமாத்தி இருந்தா, அதில் தப்பு இல்லைன்னு சொல்லிட்டு நடந்ததை விளக்கினேன். 'நியாயமான முறையில உழைக்க வேண்டியதுதானே'ன்னு கேட்டுச்சு, அந்த தம்பி.

''எனக்கு யாருப்பா வேலை தர்றாங்கன்னு சொன்னேன். 'நீயே உன் வேலையை உருவாக்கிக்கோம்மா... நாங்க தினமும் இந்த பூங்காவுல வந்து படிக்கிறோம்; பக்கத்துல டீக்கடை ஏதும் இல்ல. அப்பப்ப டீ சாப்பிட்டா இன்னும் நல்லா படிப்போம்.

நீ எங்களுக்கு டீ சப்ளை பண்ணு'ன்னு சொல்லி, 'அட்வான்ஸ்' பணமும் கொடுத்துச்சு.

''வழக்கமா கைல காசு கிடைச்சா ஏமாத்த நினைக்கும் என்னை, அந்த தம்பியோட நல்ல மனசு மாத்திடிச்சு. தினமும் டீ வினியோகம் பண்ண ஆரம்பிச்சேன். பாக்கெட் பால் வாங்குவதில்லை. நாட்டு மாட்டுப்பால், ஒரு இடத்தில தேடிப்போய், கறக்கும்போதே, 'பிரஷ்'ஷா வாங்கிட்டு வருவேன்.

''தண்ணி அதிகம் இல்லாம, இஞ்சி ஏலக்காய் போட்டு, நல்ல வாசமா, ஆரோக்கியமா கொடுப்பேன். 'ரொம்ப நன்றிக்கா... உன்னால், இன்னும் நல்லா படிக்க முடியுது'ன்னு அவங்க சொல்வது, எனக்கு சந்தோஷமா இருக்கும்.

''இந்த டீ சாப்பிடுவதற்காகவே, பலர் பூங்காவுக்கு வர ஆரம்பிச்சாங்க... சுண்டல், பயறு வகைகள்ன்னு விரிவுபடுத்தினேன். சின்ன அளவுல கடை நடத்த ஆரம்பிச்சேன். இப்ப நல்லா போய்க்கிட்டு இருக்கு...

''நாராயணனும், அவங்க நண்பர்களும் தேர்வு முடிஞ்சு, 'பாஸ்' ஆகி என்கிட்ட சந்தோஷமா சொல்லிட்டு போனாங்க... அப்ப தான், அந்த தம்பியோட புகைப்படத்தை அவர் நினைவா வாங்கினேன்,'' என்றாள், அவள்.

எனக்கு, மனம் நிறைவாக இருந்தது.

''அந்த நாராயணன், இப்ப, வங்கி மேனேஜர். வீடு, வாசல், கார்ன்னு சென்னையில சந்தோஷமா இருக்கிறாரு,'' என்றேன்.

''அப்படியா... ரொம்ப சந்தோஷம் சார்... அவரை விசாரிச்சேன்னு சொல்லுங்க... அவர் புண்ணியத்தால நாங்க நல்லா இருப்பதையும் சொல்லுங்க,'' என்றாள்.

''கண்டிப்பா... அவரு ரொம்ப சந்தோஷப்படுவாரு... கடைசியா ஒண்ணு சொல்லணும், தப்பா நினைக்க மாட்டீங்களே?''

''சொல்லுங்க சார்.''

''அன்னிக்கு செல்லாத நோட்டு கொடுத்து, உங்களை அடி வாங்க வச்சது, நான் தான்... அப்ப விளையாட்டா செஞ்சுட்டேன். பிறகு தான் அது எவ்வளவு பெரிய தப்புன்னு உணர்ந்தேன். மன்னிச்சுடுங்க,'' என்றேன்.

''அட அது நீங்கதானா... முகம் மறந்துருச்சு... உண்மையில் உங்க மேல எனக்கு கோபம் இல்லை. சொல்லப் போனா, உங்க மேல நன்றி தான் இருக்கு.

''நீங்க அப்படி செய்யலைன்னா, நாராயணன் என்னிடம் பேசி இருக்கப்போவதும் இல்லை. எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை கிடைச்சுருக்கப் போவதும் இல்லை. அதனால, உங்க மேல எனக்கு நன்றி உணர்ச்சி தான் இருக்கு,'' என்றாள்

''இல்லமா... பேச்சுக்கு சொல்றீங்க,'' என்றேன்.

அவள் சிரித்தாள்.

''உங்க முகம் மறந்திருச்சு. ஆனா, நீங்க சொன்ன பேரு அப்படியே நினைவு இருக்கு. உங்க பேரு என்ன சொன்னீங்க,'' என, கேட்டாள்.

''முள்ளிக்குண்டு தமிழ்நேசன்.''

''எங்க கடை பேரு என்ன... படிங்க,'' என்றாள் சிரித்தபடி.

''எம்.கே.டி.என்., கேன்டீன்,'' வாய் விட்டு படித்தேன்.

ஜனமேஜயன்






      Dinamalar
      Follow us