PUBLISHED ON : மே 20, 2012

மே 25 - நம்பியாண்டார் நம்பி குருபூஜை!
உலகெங்கும் உள்ள சிவாலயங்களில், இன்று தேவாரம் ஒலிக்கக் காரணமாக இருப்பவர், சிதம்பரம் அருகிலுள்ள திருநாரையூர் கிராமத்தில் பிறந்த நம்பியாண்டார் நம்பி. இங்குள்ள சிவாலயத்தில் அருள்பாலிக்கும், 'பொல்லாப்பிள்ளையார்' பிரசித்தி பெற்றவர். பொல்லாதவர் என்பது இதன் பொருளல்ல. 'பொள்ளா' என்றால், 'தானாகத் தோன்றுதல்!' அதாவது, சிற்பிகளால் செதுக்கப்படாமல், சுயம்புவாகவே தோன்றியவர் இவர். பொள்ளாப்பிள்ளையார் என்பதே, 'பொல்லா' என திரிந்து விட்டது.
இந்தப் பிள்ளையார், ஒரே ஒரு பக்தனின் சொல்லுக்கு மட்டும் தான் கட்டுப்படுவார். அவர், இவருக்கு பூஜை செய்பவர். பெயர் நம்பியாண்டார் நம்பி. நம்பி என்றால் தலைவன். எல்லாரும் இறைவனால் ஆட்கொள்ளப்பட வேண்டும் என்று எண்ணுவர். ஆனால், நம்பியோ, இறைவனையே ஆட்கொண்டு, 'நம்பியாண்டார் நம்பி' ஆனார்.
இவரது தந்தை தான் பொல்லாப்பிள்ளையாருக்கு தினமும் பூஜை செய்வார். ஒருமுறை, வெளியூர் செல்ல நேர்ந்ததால், மகனை அழைத்து, 'நம்பி, இன்று நீ பிள்ளையாருக்கு நைவேத்யம் செய்...' என்றார். 'பிள்ளையார் சாப்பிடுவாரா?' என்று அந்த பிஞ்சுமகன் கேட்டார். 'விளையாட்டு பிள்ளை, தெரியாமல் கேட்கிறான்...' என நினைத்தவர், 'ஆம்' என சொல்லி சென்று விட்டார்.
குழந்தை நம்பி, பிள்ளையாருக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்தார். 'தும்பியே! சாப்பிடு...' என்றார். பிள்ளையார் சாப்பிடுவதாகத் தெரியவில்லை. நீண்டநேரம் போராடினார். அவர் சாப்பிடாததால், 'நீ சாப்பிடாவிட்டால் நான் இறப்பேன்...' எனச் சொல்லி, கருவறைச் சுவரில் தலையை மோதினார். கருணையுள்ள பிள்ளையார், அதற்கு மேல் சோதிக்காமல், சாப்பிட ஆரம்பித்தார். மகிழ்ந்தார் நம்பி. ஊரார் இதை நம்ப மறுக்கவே, அவர்கள் முன்னிலையிலும், இந்த அதிசயம் நிகழச் செய்தார்.
காலம் கடந்தது. ராஜராஜசோழன் சோழநாட்டை ஆண்டு கொண்டிருந்தான். சைவத்தில் தீவிர பற்றுடைய அவன், அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய தேவாரம் எங்கே முடங்கியிருக்கும் என ஆய்வு செய்தான். அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. பிள்ளையாரிடமே பேசும் நம்பியாண்டார் நம்பியை பற்றிக் கேள்விப்பட்டு, திருநாரையூருக்கே வந்து அவரை சந்தித்தான். விஷயத்தைச் சொன்னதும், நம்பி அதுபற்றி பிள்ளையாரிடம் கேட்டான்.
'சிதம்பரம் நடராஜர் சன்னிதியின் அருகிலுள்ள அறையில் சுவடிகள் உள்ளன. அந்த அறை மூடி முத்திரையிடப்பட்டுள்ளது. அறையைத் திறந்து எடுத்துக் கொள்ளுங்கள்...' என்றார்.
ராஜராஜனும் சிதம்பரம் சென்று, அங்கிருந்தோர் விதித்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அறைக்கதவை திறந்தான். லட்சத்திற்கு அதிகமான பதிகங்களை மூவரும் பாடியிருந்தனர். ஆனால், 796 பதிகங்களைத் தவிர, மற்றவை எல்லாம் செல்லரித்துப் போயிருந்தன. ஒரு பதிகம் என்பது பத்து அல்லது 11 பாடல் கொண்ட தொகுப்பு. சுவடிகள் அழிந்தது பற்றி எல்லாரும் கவலையுடன் இருந்தபோது, 'இனி வரும் காலங்களில் இந்தளவு பாடல்களைப் படிக்கவே யாரும் முன்வர மாட்டர். எனவே தான், தெய்வ சங்கல்பத்தால் இப்படி ஏற்பட்டது. மேலும், ஒருவர் பிறப்பற்ற நிலை அடைய, இந்த பதிகங்களே போதும்...' என்றது அசரீரி.
ராஜராஜன் மகிழ்ச்சியுடன் சுவடிகளை அள்ளி வந்தான். நம்பியாண்டார் நம்பியிடம் அவற்றை ஒப்படைத்து, பாடல்களைத் தொகுத்து தரும்படி வேண்டிக் கொண்டான். சம்பந்தர் தேவாரத்தை, முதல் மூன்று திருமுறைகளாகவும், அப்பருடையதை அடுத்த மூன்று திருமுறைகளாகவும், சுந்தரரின் பாடல்களை, ஏழாம் திருமுறையாகவும் பிரித்தார் நம்பி. மாணிக்கவாசகரின் திருவாசகம், திருக்கோவையார் ஆகியவை எட்டாம் திருமுறை ஆனது. இதுதவிர, மேலும் மூன்று திருமுறைகள் பிரிக்கப்பட்டன. அதில், திருமூலரின் திருமந்திரம், காரைக்காலம்மையார் மற்றும் நம்பி பாடிய இரட்டை மணிமாலை, நக்கீரரின் திருமுருகாற்றுப்படை உள்ளிட்டவை அடக்கம்.
ஒரு நல்லவர் இருந்தால், அவருக்காக பெய்யும் மழை, ஊருக்கே பயன்படும் என்று வள்ளுவர் சொல்வது போல, நம்பியாண்டார் நம்பியின் நற்செயலால், காலத்தால் அழியாத தேவாரத்தை பெற்றிருக்கிறோம். நாமும் நல்லவனாய் நடந்து, நம்மால் முடிந்த நினைவுச்சின்னத்தை, உலகிற்காக விட்டுச் செல்வோம்.
***
தி. செல்லப்பா
