
பொழுது புலர்ந்து ஒரு மணி நேரமாகி விட்டது. கண்களை மூடியபடி, சாய்வு நாற்காலியில், ஆழ்ந்த சிந்தனையோடு படுத்திருந்தார், நடேசன்.
'எல்லாமே எதிர்பாராம, சட்டென முடிஞ்சு போச்சு. அம்மாவோட இழப்பு, பேரிழப்பு தான்...' வரதனின் கவலை தோய்ந்த குரல் கேட்டது.'காலை டிபன், ஐந்து ரூபாய். மதிய சாப்பாடு, 10 ரூபாய்' என்ற வரிகளை தாங்கியிருந்த, அருந்ததி உணவக சாய்தள பலகை, மூலையில் முடங்கிக் கிடந்தது. வாடிக்கையாளர்கள் உணவருந்தும் மரப்பலகைகளும், உயிர்ப்பின்றி இருந்தன. கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடியே தோட்டத்துக்கு சென்றார், நடேசன்.
கட்டியிருந்த நாட்டுப் பசு, கன்றுக்கு பாலுாட்டிக் கொண்டிருந்ததை நிறுத்தி, உடலை அசைத்தது. தினமும் தீவனம் வைக்கும் அருந்ததியை தேடுவதை, அவரால் உணர முடிந்தது. துக்கம் தொண்டையை அடைத்தது.
வழக்கமாக, காலையிலேயே மது போதையில் இருக்கும் நடேசன், கடந்த சில நாட்களாய், துக்கத்தில், சுத்தபத்தமாய், 10 நாட்களை கடத்தி விட்டார். ஏதோ மனதில் நினைத்தவர், சட்டென இரு சக்கர வாகனத்தை எடுத்து, வெளியே புறப்பட தயாரானார்.
''இந்த நேரத்துல எங்க கிளம்பறீங்க. விரதம் இன்னும் முடியல,'' கெஞ்சினான், வரதன்.
''மனசு சரியில்ல. கொஞ்ச நேரத்துல வந்துடறேன்,'' என்றபடி வாகனத்தை எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்தார். வெயில் மெல்ல வெளியில் தலை காட்டத் துவங்கியது. சாலையோரம் இருந்த மர நிழலில் நின்றார்.சில நாட்களாகவே உறக்கமின்றி இருந்ததால், கண்கள் ஓய்வைத் தேடின. துண்டை விரித்து, தலையில் கை வைத்து படுத்தார்.
உறக்கம் வரவில்லை. யோசனைகள் பல வருவதும், போவதுமாய் இருந்தன. பலவித குழப்பத்திலிருந்தபோது, வரதனிடமிருந்து மொபைல் போனில் அழைப்பு வந்தது.
''சீக்கிரம் வந்துடறேன் வரதா...'' அவசரமாக முகத்தை துடைத்து, மதுக்கடைக்கு புறப்பட தயாரானபோது, வாகனத்தை கையசைத்து நிறுத்தினார், ஒரு மூதாட்டி.
''சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு ஐயா. பசி உயிர் போகுது. கையில, 10 ரூபாய் தான் இருக்கு. கறாராய் காசு கேட்காம, சாப்பாடு போடும் அருந்ததி அம்மாவும் போய்ச் சேர்ந்துட்டாங்களாம். 10 ரூபா இருந்தா கொடு சாமி,'' பரிதாபமாய் கெஞ்சினாள், மூதாட்டி.உடலில் தெம்பின்றி சோர்வாய் இருந்த மூதாட்டியின் வார்த்தைகளை கேட்ட நடேசனுக்கு, அருந்ததியின் நினைவு அதிகமாகி, கண்களை குளமாக்கியது.
'மூணு வேளை சாப்பாட்டுக்காக தான் எல்லாமே. எவ்வளவு காசு, பணம் இருந்தாலும், அதை எடுத்து சாப்பிட முடியாது. நமக்கு லாபம் எதுவும் வேணாம். பசின்னு வந்தவங்களுக்கும், நமக்கும், வயிறு நிறைஞ்சா போதும்...' அருந்ததி அடிக்கடி சொல்லும் வார்த்தைகளை நினைத்துப் பார்த்தார், நடேசன்.உடனே, அருகிலிருந்த உணவகத்துக்கு சென்று, இரண்டு பார்சல்களையும், தண்ணீர் பாட்டிலையும், மூதாட்டிக்கு வாங்கி வந்து கொடுத்தார்.
''பசிச்ச வயித்துக்கு சாப்பாடு கொடுத்திருக்கியே சாமி. நீயும், உன் பொஞ்சாதியும், குடும்பத்தோடு, நோய் நொடியில்லாம வாழணும்யா...'' வாழ்த்தியபடியே அவசர அவசரமாய் இட்லியை வாயில் திணிக்க ஆரம்பித்தாள், மூதாட்டி.
மனக்குமுறலை அடக்க முடியாத நடேசன், விரைவாய் வீடு சேர்ந்து, நிதானமாய் ஒரு குளியல் போட்டார்.கொடிக் கயிற்றில் துவைத்து காயப்போட்டிருந்த வெள்ளை வேட்டியை இடுப்பில் கட்டிக் கொண்டு, ஈரத் தலையுடன் கூடத்திலிருந்த அருந்ததியின் படத்தையே வெறித்து பார்த்தபடி நின்றிருந்தார்.
''எப்படியும் சரியாகி வந்துடுவாங்கன்னு தான் நினைச்சேன். இவ்வளவு சீக்கிரம், அம்மா நம்மை விட்டுப் போயிடுவாங்கன்னு கனவிலும் நினைச்சுக் கூட பார்க்கல. உணவகத்தை உடனே திறக்கணும்,'' என, உறுதியாய் சொன்ன வரதனை, ஏற இறங்க பார்த்தார், நடேசன்.அதன்பின், இருவருக்கும் பேச வார்த்தை வரவில்லை. சில கனம் சூழல் அமைதியாய் இருந்தது. நடேசனை வற்புறுத்தி சாப்பிட வைத்தான், வரதன்.ஊர் முற்றிலும் அடங்கிப் போயிருந்தது. நள்ளிரவை நெருங்கியும் உறக்கம் வரவில்லை. தெரு நாய்கள் சில, அழுது ஓய்ந்தன. புரண்டு புரண்டு படுத்து, பொழுது போய்க் கொண்டிருந்தது.
அருந்ததி இறந்து, 16 நாட்கள் கடந்து விட்டது. செய்து முடிக்க வேண்டிய காரியங்களும் எளிமையாய் முடிந்தது. மீண்டும் ஆழ்ந்த யோசனையிலிருந்த நடேசனை, ஏழு முறை அடித்து ஓய்ந்த சுவர் கடிகார ஒலி, நினைவுக்கு கொண்டு வந்தது.
'பத்து நாளுக்கு மேல் உணவகம் இயங்காததால், கையில் சுத்தமா காசில்ல. வங்கி சேமிப்பும் கிடையாது. அவளுக்குன்னு குண்டுமணி நகை இல்லை. இருப்பதென்னவோ அவளோட உண்டியல் சேமிப்பு தான்...' முணுமுணுத்தபடி, பூஜை அறைக்குள் சென்றார், நடேசன்.
''ஐயா, தயவு செய்து உண்டியல் பணத்தை எடுக்க வேணாம். ஒரு வருஷம் ஆகாம, அம்மா சேர்த்து வச்சத எடுக்க வேண்டாம்,'' என்றான், வரதன்.
''உடனே எனக்கு பணம் வேணும்,'' என்றார், நடேசன்.
சட்டென உண்டியலை எடுத்த வரதன், அருந்ததியின் படத்தருகே வைத்தான். அமைதியாய் அங்கிருந்து நகர்ந்தார், நடேசன்.அடுத்த நாள் காலை, படுக்கையிலிருந்து எழுந்த நடேசன், வரதனை தேடினார். எங்கும் காணவில்லை. அவன் மொபைல் போன், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. பல மணி நேரமாகியும், எந்த ஒரு தகவலும் அவனிடமிருந்து இல்லை.பதற்றமும், கவலையுமாய், வீட்டுக்கும், வாசலுக்குமாய் நடந்து கொண்டிருந்தபோது, திடீரென சந்தேகம் வந்து, அவன் அறைக்கு சென்று பார்த்தார்.
வரதனின் உடமைகள் கலைந்து கிடந்தன. சாமி படத்தருகே இருந்த அருந்ததியின் உண்டியல் அங்கு இல்லை.
'உண்ட வீட்டுக்கு துரோகம் செய்ய, அவனுக்கு எப்படித்தான் மனம் வந்ததோ. எங்கிருந்தோ வந்தவன், பிள்ளையை போல வளர்த்தாளே. இப்படிப் பண்ணிட்டானே, படு பாவி...' பதற்றத்தில் உடல் வியர்த்தது.
இனியும் புலம்பி பயனில்லை என உணர்ந்து, புகார் கொடுக்க, காவல் நிலையம் கிளம்பினார், நடேசன்.அப்போது, போலீஸ் வாகனம் ஒன்று, நடேசன் வீட்டு வாசலில் நின்றது. அதிலிருந்து இரண்டு காவலர்கள் இறங்கினர். அவர்களோடு, வரதனும் இறங்கினான்.
''ஐயா, புகார் கொடுக்க நானே காவல் நிலையம் கிளம்பினேன். நல்லவேளை, நீங்களே அவனை பிடித்து வந்துட்டீங்க,'' என்றார், நடேசன்.
''என்ன சொல்றீங்க நீங்க?'' நடேசனை பார்த்து கேட்டபடி, வாகனத்திலிருந்த மளிகை மற்றும் காய்கறி மூட்டைகளை இறக்கி வைத்தனர், காவலர்கள்.நடேசனுக்கு குழப்பம் அதிகமாகியது.
'ரோந்து போகும்போது, காய்கறி, மளிகை மூட்டைகளோடு நின்றிருந்த இவரை விசாரிச்சோம். அருந்ததி உணவகத்துக்கு போகணும்ன்னு சொன்னார். அம்மா கையால பலமுறை நாங்களும் சாப்பிட்டிருக்கோம். அதான், சிரமம் பார்க்காம இங்கு அழைச்சிட்டு வந்தோம்...' யதார்த்தமாய் சொல்லி, இருவரும் புறப்பட்டனர்.
சற்று நேரம் அமைதியாய் நின்றிருந்த நடேசன் கண்கள் கலங்கியது. நா, தழு தழுக்க, ''என்னடா வரதா இதெல்லாம். இவ்வளவு மளிகை, காய்கறியெல்லாம் இருக்கே. இதுக்கெல்லாம் பணமேது?'' என்றார்.
''ஐயா, பத்து வயசுல, எங்கிருந்தோ ஒரு அனாதையா இந்த வீட்டுக்கு வந்தேன். பசின்னு வந்து நின்ன எனக்கு, சாப்பாடு போட்டு, தங்க இடமும் கொடுத்தீங்க. பிறகு ஓரளவு படிக்க வச்சு, ஒரு பிள்ளையை போலவே, அம்மாவும் என்னை பார்த்துக்கிட்டாங்க.
''அவங்க கையால தினமும் சாப்பிட்டிருக்கேன். உப்பிட்ட வீட்டுக்கு, நானும் எதாவது செய்யணும்ன்னு நினைச்சேன். என் செலவுக்காக அம்மா கொடுக்கும் பணத்தை சிறுக சிறுக சேமித்து வச்சிருந்தேன். அதுலதான், இந்த மளிகை, காய்கறியெல்லாம் வாங்கினேன்,'' என்றான், வரதன்.வாஞ்சையோடு அவனை பார்த்த நடேசனின் மனம், 'அருந்ததியின் உண்டியல் பணத்தை பற்றி கேட்கலாமா?' என துடித்தது.
''உங்களுக்கு உடம்பு முடியாம போச்சுன்னா, செலவுக்கு பணம் வேணுமில்ல. கொடுத்து உதவ நமக்கு யார் இருக்கா? அத நினைச்சுதான், அம்மா சிறுக சிறுக உண்டியல்ல பணம் போட்டு வச்சாங்க. நான் இல்லாத போது, நீங்க உண்டியலை உடைச்சுட போறீங்கன்னு, கையோடு கொண்டு போயிட்டேன்,'' என, உண்டியலை நடேசனிடம் கொடுத்தான், வரதன்.அவனை வாரியணைத்துக் கொண்டார், நடேசன். ஒரு வாரிசு கிடைத்து விட்ட உணர்விலிருந்த நடேசனுக்கு, அணைப்பில் ஒரு தந்தையின் ஸ்பரிசம் தெரிந்தது.
''இனிமே, நீ என்னை அப்பான்னே கூப்பிடு வரதா. எனக்கும் யார் இருக்கா?'' கனத்த மனதுடன் சொன்னார், நடேசன்.மறுநாள் காலை, 'அருந்ததி உணவகம்' மீண்டும் உயிர் பெற்றது. சிரித்தபடி காட்சியளித்த அருந்ததி படத்தை வணங்கி, இருவரும் சுறுசுறுப்பாய் இயங்க ஆரம்பித்தனர். வாடிக்கையாளர்களுக்கு வயிறார, 'டிபன்' பரிமாறிக் கொண்டிருந்தான், வரதன்.
வைத்த கண் வாங்காமல், வரதனையே பார்த்துக் கொண்டிருந்த நடேசனின் கண்கள் கலங்கியது. அப்போது, பண்பலை வானொலியில், 'எங்கிருந்தோ வந்தான்... இங்கிவனை நான் பெறவே, என்ன தவம் செய்து விட்டேன்...' என்ற பாடல் வரிகள் ஒலித்தன.
பூபதி பெரியசாமி

