
முதுமை... முற்றுப்புள்ளி அல்ல
வாழ்க்கை
ஒரு பயணம் அல்ல
படைப்பு
சொற்ப சிலருக்கு
அது சிறுகதை
பெரும்பாலோருக்கோ
பெருங்கதை எனும் நெடுங்கதை!
சர்ப்ரைஸ்களும், சஸ்பென்ஸ்களும்
நிறைந்தது முதுமை
அது
முற்றுப்புள்ளி அல்ல
நீளத் தொடரும்
அந்திம அத்தியாயம்!
வாசிக்கும் அவசரத்தில்
கடைசி அத்தியாய ரகசியத்தைக்
கண்டறியத் தவிப்பது
ஜோசியம் பார்க்கும் ஜோலி!
வாழ்க்கைப் புதினத்தை
எழுதும் படைப்பாளி
பாரபட்சம் பாராதவன்!
இளமையின் ஆட்டங்களுக்கு
முதுமையில் ஈவு கொடுக்கிறான்
முதுமையின் முகப்பொலிவு
முகச்சுருக்கம் அல்ல
வாழ்ந்த வாழ்க்கையின்
கதைச் சுருக்கம்!
முதுமை
மாற்றத்தை சொல்ல வரும்
கதைக் கரு!
அது
உறவின் மாற்றத்தையும்
உடலின் மாற்றத்தையும்
ஒரு சேர உணர்த்தும்
ரகசிய குறியீடு!
முதுமை
முற்றுப்புள்ளியல்ல
படிப்பவன் உணர
படைக்கப்படும் காற்புள்ளி!
படைத்தவன்
கற்றுக்கொள்ளாத பாடத்தை
படிப்பவன் கற்றுக்கொள்கிறான்
இந்த புதினத்தின் புத்திமதி
பக்கம் புரட்டினால் புரியாது
வரிக்கு வரி
விஷயங்கள் உள்ளடக்கிய
வேதம் போல!
நெருங்கிய நெஞ்சங்களுக்கே
நினைவில் பதியும்
ஞானம் பொழியும்!
வளர்கவி,
கோவை.

