/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
இவருக்கு ஒவ்வொரு நாளும் மாரத்தான் தான்!
/
இவருக்கு ஒவ்வொரு நாளும் மாரத்தான் தான்!
PUBLISHED ON : அக் 22, 2017

சென்னை, மெரினா கடற்கரை, காந்தி சிலை அருகே, அதிகாலை பொழுது - ஆயிரக்கணக்கான பேர் ஓட்டம், நடை மற்றும் யோகா என்று பல்வேறு விதமான உடற்பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் ஒரே ஒருவர் மட்டும் தனித்து தெரிந்தார். காரணம், மேல் சட்டை இல்லாமல், வெற்று உடம்புடன், கால் சட்டை அணிந்து, கால்களில் காலணி அணியாமல் வேர்க்க, விறுவிறுக்க ஓடிக் கொண்டிருந்தார்.
யார் அவர் என்ற போது தான், சென்னை, ரயில்வேயில் உயரதிகாரியாக பணியாற்றும், 55 வயதான, ஜெ.விஸ்வநாதன் என்பதும், இவர், பல வித ஆச்சரியங்களுக்கு சொந்தக்காரர் என்பதும் தெரிந்தது.
தினமும், அதிகாலை, 3:30 மணிக்கு நுங்கம்பாக்கம் ரயில்வே அதிகாரியின் குடியிருப்பில் ஆரம்பிக்கும் இவரது மாரத்தன் ஓட்டம், சென்னையின் முக்கிய சாலைகள் வழியாக சென்று, மெரினாவை மையமாக வைத்து, சில சுற்றுகள் சுற்றி, திரும்ப, தன் குடியிருப்பை அடையும் போது, மூன்றே முக்கால் மணி நேரத்தில், 32 கி.மீ., தூரம் ஓடியிருப்பார்.
நாள் தவறாமல் தொடரும், இவரது, மாரத்தன் ஓட்டத்திற்கான பின்னணி என்ன?
காந்திஜியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, எளிய வாழ்க்கை வாழும் இவர், தன்னிடம் இருக்கும் ஒரே கெட்ட பழக்கமான, சிகரெட் புகைப்பதை விட முடியவில்லை. புகைப்பதை நிறுத்த நினைத்த போது, தூக்கம் வராமல் தவித்துள்ளார். அப்போது தான், 'நல்ல தூக்கத்திற்கு உடல் களைக்கும் வரை நடங்கள்; முடிந்தால் ஓடுங்கள்...' என்ற ஆலோசனை கிடைத்தது.
இதன் காரணமாக, ஓட்டத்தை ஆரம்பித்துள்ளார். அதுவரை, எவ்வித உடற்பயிற்சியும் இல்லாமல் இருந்ததால், 3 கி.மீ., தூரம் மட்டும் ஓடியுள்ளார். இது, சுமாரான பலன் கொடுக்கவே, உற்சாகமானவர், ஓடும் தூரத்தை அதிகரித்தார். இன்று, தினமும், 32 கி.மீ., தூரம் ஓடுகிறார்.
ஆரம்பத்தில், ஓடுவதற்காக காலணி, டீ - ஷர்ட், தொப்பி, கண்ணாடி மற்றும் குடிநீர் பாட்டில் என்று, சராசரி ஓட்டப் பயற்சி எடுப்பவராக இருந்தவர், பின், ஒவ்வொன்றையும் விட்டு விட, ஓடுவதில் நிறைய சந்தோஷமும், சுதந்திரமும் கிடைத்துள்ளது.
கடந்த, 17 ஆண்டுகளாக தொடரும் இவரது ஓட்டப்பயிற்சி, பணி நிமித்தமாக டில்லி, ஹூப்ளி உள்ளிட்ட எந்த இடங்களுக்கு சென்றாலும் தடைபட்டதில்லை. பணி மாறுதல் காரணமாக, சென்னைக்கு வந்த பின், மூன்று ஆண்டுகளாக இங்கு பயிற்சியை தொடர்கிறார்.
'நல்ல தூக்கத்திற்காக ஆரம்பித்த இந்த ஓட்டம், உடல் ஆரோக்கியத்தையும், சுறுசுறுப்பையும் கொடுத்துள்ளது...' என்ற விஸ்வநாத்திடம், மேலும் சில சுவாரசியமான விஷயங்கள் உண்டு.
அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் வாங்கிய ராட்டையால், வீட்டில் நூல் நூற்று, அதில் வரும் நூலைக் கொண்டு தைத்த சட்டை, வேட்டியை தான், பெரும்பாலும் அணிகிறார். அலுவலக பயணமாக வெளிநாடு சென்றாலும், கதராடை தான் அணிவதாக சொல்கிறார்.
உலகமே ஆண்ட்ராய்டு, ஆப்பிள் என்று, 'ஹைடெக்' போனில் பயணம் செய்யும் போது, இவர் வைத்திருப்பது, பழைய பட்டன் ரக அலைபேசியே! 'பேசவும், கேட்கவும் இது போதுமே எனக்கு...' என்கிறார்.
'அடுத்தவர்கள் வாழ்க்கையோடும், அவர்களது பொருளாதாரத்தோடும் ஒப்பிட்டு, வீட்டில் எப்போது மனைவி போர்க்கொடி தூக்குகிறாரோ, அப்போது, மனநிம்மதியும், அன்பும், ஆரோக்கியமும் போகிறது. ஆகவே, என் வீட்டு அமைதிக்கும், என் சுதந்திரமான சிந்தனைக்கும், எளிய வாழ்க்கைக்கும் எல்லாவிதத்திலும் என்னோடு ஒத்துப்போகும் என் மனைவி பானு தான், இதற்கு முக்கிய காரணம்...' என்று, தன் மனைவியைப் பற்றிக் கூறி பெருமைப்படுகிறார்.
பசுவிடம் அதிகம் பால் பெறுவதற்காக, ஊக்க மருந்து ஊசி போடுகின்றனர் என்பது தெரிந்தது முதல், பால் பொருட்களை தவிர்ப்பதாகவும், அதேபோல் தேன் உள்ளிட்ட சில பொருட்களை தவிர்ப்பதாகவும் கூறுபவர், 'யார் வேண்டுமானாலும் என்னை போலவோ அல்லது என்னை விட அதிகமான தூரமோ ஓட முடியும். முதலில், 3 கி.மீ., தூரம் மட்டுமே சீரான, மூச்சு பயிற்சியுடன் ஓடிப்பழக வேண்டும். பின், வாரா வாரம் சிறிது சிறிதாக தூரத்தை அதிகரித்தபடியே போனால், பின், எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் ஓடலாம்.
'ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுவதால், விசேஷ உணவு எதுவும் எடுத்துக்கொள்ள தேவையில்லை. வழக்கமான உணவையே சாப்பிடலாம். உங்கள் உடம்புக்கு என்ன தேவை, எவ்வளவு தேவையோ, அவ்வளவு சாப்பிட்டால் போதும். இதய நோய், மூட்டு வலி போன்ற பிரச்னை உள்ளவர்கள், ஓடுவதற்கு முன், மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது...' என்கிறார்.
மேலும் சந்தேகங்களுக்கு, விஸ்வநாதனின் மெயில் முகவரிக்கு கேள்விகளை அனுப்பி, விளக்கம் பெறலாம்.
அவரது மெயில் ஐ.டி., - vishy34@gmail.com
எல்.முருகராஜ்

